மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி - THAMILKINGDOM மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி - THAMILKINGDOM
 • Latest News

  மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

  இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மட்டக்களப்பு மாவட்டத்தில்இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு, 8 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

  அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்னமும் இணக்கம் ஏற்படவில்லை.

  இது தொடர்பான பேச்சுக்கள் நடந்து வரும் நிலையில், கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவது உறுதியாகியுள்ள நிலையில், இந்த நான்கு கட்சிகளும் தமது வேட்பாளரைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

  தமிழரசுக் கட்சியின் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

  அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிராமர், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும், கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் ரெலோ சார்பாகவும், செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் மணிவண்ணன் புளொட் சார்பாகவும் வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ளனர்.

  ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் போட்டியிடவுள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பலரும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top