Breaking News

மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை

போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

“வரும் செப்ரெம்பர் 14ஆம் நாள் தொடக்கம், ஒக்ரோபர் 02ஆம் நாள் வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதியின் கையில், ஓகஸ்ட் 21ஆம் நாள் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று கிடைக்கும். அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அறிக்கையின் பிரதி கையில் கிடைக்கும் வரையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது.

அதேவேளை, வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், ஐ.நா விசாரணை அறிக்கையுடன் எவ்வாறு இணங்கிச் செயற்படுவது என்பது குறித்த விடயத்துக்கே முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியிருக்கும் என்றும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.