Breaking News

தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பையும் கலைத்துவிடுமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன். 

அத்துடன் தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒருகொடியின் கீழ் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒருபொது அமைப்பை உருவாக்கவேண்டிய நிலைக்கு த.வி.கூ. தள்ளப்பட்டுள்ளது. 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- 

தமிழ் மக்கள் சார்ந்த சகல நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே உண்டு. பிரபல சட்டமாமேதைகளான (இராணி அப்புக்காத்து) தந்தை செல்வநாயகம்மும் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் 1942 களில் சோல்பரி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக தமிழ்க் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அவ்விருவரும் பலமிக்க சட்டவல்லுநர்கள் பலருடன் இணைந்து நாடாளுமன்றம் புகுந்தனர். துரதிஷ்டவசமாக இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தின் காரணமாகக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. 

தந்தை செல்வா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில்; தமிழ் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து இயங்கிவந்தன. ஆனால் 1972ஆம் ஆண்டு புதிய குடியரசுச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் இவ்விருதலைவர்களும் தமது பேதங்களை மறந்து ஒன்றாக இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி பின்னர் அது தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றப்பட்டு மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் இருசாராரும் ஏகமனதாகத் தெரிவுசெய்து செயற்பட்டனர். 

தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்து எடுப்பதற்காக தமிழரசுகட்சியை அதன் ஸ்தாபகர் செல்வா அவர்கள் முடக்கிவைத்துவிட்டு செயற்பட்டார். அதனை மேலும் பலப்படுத்துவதற்காக தனது தலைவர் பதவியை ஜீ.ஜீ. பொன்னம்பலம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார். 

தமிழரசுக் கடசியின் இறுதிக் கூட்டம் 18.12.1974 அன்று தந்தையை கௌரவிப்பதற்காக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் வெள்ளிவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அமரர் தொண்டமான் அவர்களால் தந்தை செல்வாவுக்கு "மூதறிஞர்"என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. அன்று தந்தைக்கு பொன்னாடை அணிவிக்கும் பெருமை எனக்கும் கிடைத்தது. 

26.04.1977ல் தந்தை செல்வா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே உயிர் துறந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அன்னார் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில்தான் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட 80 அடி நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் சரித்திரத்தை மாற்றி முழு சமுதாயத்தையும் ஏமாற்றி யாழ்ப்பாணம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தவறான விளக்கங்களையும் கூறி இருவர் தப்பாக வழி நடத்துகின்றனர். 

சம்பந்தரும் சேனாதிராசாவும் ஒருபெரும் தலைவருக்கு எத்தகைய அவமானத்தை உண்டுபண்ணுகின்றோம் எனத் தெரியாமல் செயற்படுகின்றனர். ஈழத்து காந்தி மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள எவரும் இத்தகைய செயற்பாடுகளை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். வேண்டும் என்றே இவ்விருவரும் தம் சுய நலத்திற்காக இவ்வாறு செயற்படுகின்றனர். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன். தந்தைசெல்வா மீது விசுவாசமும் மதிப்பும்கொண்ட அனைவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சியில் பல தடவைகள் சந்தித்து அதுவும் குறிப்பாக 14.10.2003 அன்று விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட ஒருவரின் கட்டளைக்கு அமைய தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்து 26 வருடங்களின் பின்னர் மோசடி மூலம் உருவாக்கப்பட்டதாகும். 

துரதிஷ்டவசமாக தமிழினம் ஒரு சபிக்கப்பட்ட இனமாக விளங்குகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் உண்மையான இயக்கமாகும். அவ்வமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை சேனாதிராசா எதேச் சதிகாரமாக நீக்கிவிட்டு தன்னால் மோசடி மூலம் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்த்துக் கொண்டார். 

தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்துவிடுமாறு வற்புறுத்தவேண்டும். தந்தைசெல்வா அவர்கள் அகிம்சாவாதி என்பதால்தான் எல்லோரும் அவரை நேசித்தும் மதித்தும் வந்தார்கள். ஆனால் சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கடசியோ வன்முறையில் தீவிரமாக உருவாக்கப்பட்ட ஒருவரின் பணிப்பின் பேரில் உருவாக்கப்பட்டது. 

சேனாதிராசாவின் அறியாமையை என்னால் உணரமுடியும். ஆனால் சம்பந்தன் அவர்கள் இதனை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுமட்டும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. த.வி.கூட்டணி 2004ஆம் ஆண்டு பிளவுபடுவதற்கு எதுவித காரணமும் இருக்கவில்லை. சேனாதிராசா மட்டும் அதனை விரும்பி இருந்தார். அன்று தொடக்கம் இன்றுவரை ஏறக்குறைய 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

 எமது பிரச்சினைகள் எதற்கும் எதுவித தீர்வினையும் பெற்றுக்கொடாது மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். தடுப்பில் உள்ள இளைஞர்கள் பலர் பல வருடங்களாக சிறையில் வாடுகின்றனர். இது சம்மந்தமாகப் பேசுவதற்கு எவரும் தன்னிடம் தொடர்புகொள்ளவில்லை என்றும் அவ்வாறு வந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் கூறியுள்ளார். பெரும் சிக்கலைத் தரக் கூடிய அறிக்கைகள் முக்கிய பல உறுப்பினர்களால் அடிக்கடி வெளியிடப்படுகின்றது. 

2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக அன்றைய பிரதமரை வெல்லவைத்த பெருமை த.தே.கூட்டமைப்பிற்கே உண்டு. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களுக்கே உண்டு என தம்பட்டம் அடித்ததால் இரண்டாவது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக அது உதவியது. ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழ்த் தலைவர்களை ஒற்றுமைப் படுத்தத் தவறிவிட்டனர். இனப்பிரச்சினை சம்பந்தமாக தீவிரமாக எச்செயலிலும் ஈடுபடவில்லை. 

தற்போது இனப்பிரச்சினைத் தீர்விற்கு தென்னாபிரிக்காவா? இந்தியாவா என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்று இன்னும் பல விடயங்களை கூறமுடியும். விடுதலைப் புலிகளின் ஆதரவோடு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிவிட்டு யுத்தகுற்றங்களுக்காக புலிகளும் விசாரிக்கப்படவேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு கூறுவது கழுத்தறுப்பிற்குச் சமமானதாகும். 

ஆகவே தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒருகொடியின் கீழ் ஒன்றிணைந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒருபொது அமைப்பை தமிழ் மக்களின் நன்மை கருதி உருவாக்கவேண்டிய நிலைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. 

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இந்தச் செய்தியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அழைப்பிதழாக ஏற்று உங்கள் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் உட்பட எதிர்வரும் 05.07.2015 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இல.1077,கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள த.வி.கூ. தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். - என்றுள்ளது.