Breaking News

நீந்திக் கடந்த நெருப்பாறு – அங்கம் – 01

மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு
குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார்.

ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவில் தொடங்கிய தொடர் எறிகணை வீச்சு அதிகாலை ஐந்து மணிக்குத்தான் ஓய்ந்தது. நடுக்காட்டுக்குள் போகும் போது பல்லாயிரக்கணக்கான சில் வண்டுகள் ஒரே நேரத்தில் ரீங்காரம் செய்துவிட்டு திடீரென அத்தனையும் ஒரே நேரத்தில் நிறுத்திவிடும். அப்போ ஏற்படும் ஒரு நிசப்தம் எந்த ஒரு அனுபவசாலியையும் சில வினாடிகள் இனம் புரியாத பயத்திற்குள் தள்ளிவிடும். பரமசிவத்தைச் சுற்றியும் எறிகணைச் சத்தங்கள் ஓய்ந்த பின்பு அப்படி ஒரு அமைதி தான் நிலவியது. சில நாட்களாக விடிகாலையில் துயிலெழுப்பும் புள்ளினங்களின் கலகலப்புக் கூடக் காணாமற் போய்விட்டது. காட்டு மரங்களின் இலைகள் கூடத் தமது அசைவுகளை நிறுத்திவிட்டது போலவே தோன்றியது.

அவர் கிணற்றடியில் போய் வாய் கொப்புளித்து முகத்தைக் கழுவி விட்டு நிமிர்ந்த போது “அம்மா..” என்ற செங்காரிப் பசுவின் கத்தல் ஒலி காதில் விழுந்தது. அது பால் கறக்கும் நேரம் நெருங்கிவிட்டதை அவருக்கு அறிவிக்கும் அழைப்பு மணி.

“வாறன் பொறு!” என்று அதைப் பார்த்து உரத்துக் கூறிவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு, அடுக்களைப் பக்கம் சென்று செம்பை எடுத்துக் கொண்டு வந்தார். செம்பில் நீரை எடுத்துக் கொண்டு கன்றை அவிழ்த்து விட்டார். அது துள்ளிக்குதித்து ஓடி தாயின் மடியில் பால் குடிக்கத் தொடங்கியது. கன்றைப்பிடித்து மாட்டுக்கு முன்பாகக் கட்டிவிட்டுக் கொண்டுவந்த நீரால் மடியை நன்றாகக் கழுவிவிட்டுப் பாலைக் கறக்க ஆரம்பித்தார். செங்காரியும் கன்றை இதமாக நக்கிக் கொடுத்தவாறே நின்றது. 

ஏனோ வழமையை விட அன்று பால் குறைவாகவே கிடைத்தது. இரவு கேட்ட எறிகணை ஒலிகள் மாட்டில் கூட பாதிப்பை ஏற்படுத்திவிட்டதோ என அஞ்சினார். கன்றை மீண்டும் அவிழ்த்து விட்டுவிட்டு பாலைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுத்தார்.

மனைவி பார்வதி “தேத்தண்ணி ஊத்தட்டே?”, எனக் கேட்டாள்; “இண்டைக்கு என்ன கிழமை.. திங்களல்லே! குளிச்சிட்டு அம்மனுக்கு விளக்கு வைச்சுப்போட்டு வாறன்” என்றுவிட்டு கிணற்றடியை நோக்கி நடந்தார் பரமசிவம்.

அவர் காத்தவராயன் கூத்து ஆடத்தொடங்கிய காலத்திலிருந்து, காணியின் ஒரு மூலையில் ஒரு கொட்டில் போட்டு ஒரு சூலமும், முத்துமாரியம்மன் படமும் வைத்து ஒவ்வொரு திங்களும் விளக்கு வைத்து வந்தார். தனது திறமைக்கும் குரல் வளத்துக்கும் முத்துமாரியம்மன் அருளே காரணம் எனத் திடமாக நம்பினார்.

அவர் விளக்கு வைத்துவிட்டு வர பார்வதி தேநீர் ஊற்றி தயாராக வைத்திருந்தாள். அவர் குடித்து முடித்ததும் போத்தலில் நிறைத்து வைத்திருந்த பாலை அவரிடம் நீட்டினாள்.

“முத்தையா.. பாலுக்குப் பாத்துக்கொண்டிருப்பன்.. நான் கடையடிக்குப் போட்டுவாறன்.. தம்பிய பட்டியத் திறந்து மாடுகளக் கொண்டுபோய் தரவையில விட்டிட்டு தோட்டத்துக்கு வரச் சொல்லு! நான் அங்க வருவனாம் எண்டு விடு” என்று விட்டு பால் போத்தலைக் கையில் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

பாலம்பிட்டியில் உள்ள ஒரே தேநீர் கடை முத்தையா கபே மட்டும்தான். அதை கடை என்று சொல்வதை விட அரசியல் மேடை என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். நாட்டு நடப்புக்கள் முதற்கொண்டு அரசியல் ஆய்வுகள் வரை அரங்கேறுவது அங்கு தான். முதலில் எந்தச் செய்தியும் அந்த மையத்துக்கே வந்து சேரும். பின்பு அது அங்கிருந்து ஊரெல்லாம் பரவிவிடும்.

பரமசிவம் கடையடிக்குப் போன போது முத்தையாவின் பால் தேநீருக்காக இரண்டு மூன்று பேர் காத்திருந்தார்கள். முத்தையா பரமசிவத்தைக் கண்டதும் ஓடிவந்து பாலை வாங்கி மண் சட்டியில் ஊற்றிச் சுடவைத்தான். பரமசிவம் வாங்கின் ஒரு கரையில் அமர்ந்தவாறே “இரா முழுவதும் ஒரே செல் சத்தமாய்க் கிடந்தது. என்ன நடந்ததோ தெரியேல்ல” என்றார்.

“அதண்ணை… முள்ளிக் குளத்துக்கை ஆமி இறங்கீட்டாங்களாம்..” என்றான் கந்தசாமி.

பரமசிவம் திகைப்புடன், “என்ன.. இறங்கியிட்டானோ…? ஆர் சொன்னது…?” எனக் கேட்டார். “இப்ப தான் பாண் கொண்டுவாற பொடியன் சொல்லிப் போட்டுப் போறான்” பாண் கொண்டுவரும் பொடியன் சொன்னால் அதில உண்மை இருக்கும் என்றே பரமசிவம் நம்பினார். அது மட்டுமன்றி இராணுவம் ஒரு நகர்வை மேற்கொள்வதற்கு முன்னால் அப்பகுதியை நோக்கி சரமாரியாக எறிகணை வீச்சை நடத்துவதும் வழமை தான்.

இரவு கேட்ட தொடர் எறிகணை ஒலிகள் அப்படியான ஒரு நகர்வின் அறிகுறியாக இருக்குமென்றே அவர் நம்பினார். ஆனால் அவரின் மகன் சங்கரசிவம் முள்ளிக்குளம் களமுனையில் தான் நிற்கிறான் என்பதை நினைத்தபோது நெஞ்சு ஒரு முறை நடுங்கியது.

சொந்த மண்ணைக் காக்க ஒவ்வொருவரும் போராட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்பதில் அவர் எப்போதுமே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் மகனுக்கு ஏதாவது நடந்தால் என்று நினைக்கும் போது மனம் சங்கடப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

“எங்கட பொடியள் என்னண்டு அவங்கள முன்னேற விட்டாங்கள் எண்டுதான் தெரியேல்ல” என்றான் கந்தசாமி.

“ம்.. சண்டையெண்டால் முன்னேறுவதும் பின் வாங்கிறதும் நடக்கிறது தானே…” என்று விட்டு வெறும் போத்தலையும் வாங்கிக் கொண்டு அவசரவசரமாக வீடு நோக்கிப் புறப்பட்டார் பரமசிவம்.

வீட்டு முற்றத்தில் நின்றவாறே “இஞ்சரப்பா… நான் ஒருக்கால் மடுப்பக்கம் போட்டு வாறன்” என்றார்.

“ஏன் இப்ப மடுவுக்கு…இளையவனல்லே தோட்டத்தில நீங்கள் வருவியள் எண்டு பாத்துக் கொண்டு நிப்பன்”

“ஓ.. நீ போய் அவனுக்கு உதவி செய்… முள்ளிக்குளத்தில சண்டையாம்… மடுப்பக்கம் போனால் தான் விபரம் தெரியும்”

அதைக் கேட்டதும் “ஐயோ.. பெரியவன் முள்ளிக்குளத்திலையல்லே” என அங்கலாய்த்தாள் பார்வதி.

“அது தான் என்னண்டு போய் அறிஞ்சு கொண்டு வாறன்” என்றுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் பரமசிவம்.

காயப்பட்ட போராளிகளையும் வீரச்சாவடைந்த போராளிகளையும் முதலில் பெரிய பண்டிவிரிச்சானில் இருந்த மருத்துவ முகாமுக்கு கொண்டு வருவார்கள். பெருங்காயம் பட்டவர்களைப் பின்பு இலுப்பைக்கடவைக்கோ கிளிநொச்சிக்கோ கொண்டுபோவதுண்டு.

எனவே மடுவிற்குப் போனாலே களநிலைமை பற்றி அறிந்துவிடலாம் என அவர் நம்பினார். அப்படி சரியான விபரம் கிடைக்காவிட்டால் பண்டிவிரிச்சானிலேயே போய் விசாரிப்பது என முடிவு செய்து கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தார் அவர்.

அவர் தன் மகனைப் பற்றிய தவிப்புடன் மடு நோக்கிப் போய்க்கொண்டிருக்க, அவனோ களமுனையில் பெரும் குழப்பமான மனதுடன் கொதித்துக்கொண்டிருந்தான்.கட்டளைத் தளபதியின் மேல் கோபம் கோபமாகச் சங்கரசிவத்துக்கு வந்த போதும் எதுவும் செய்ய முடியாத நிலையில் சங்கரசிவம் தவித்தான். ஒரு பெரும் வெற்றியை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து தோல்வியைத் தாங்கள் விலையாகப் பெற்றுவிட்டதாகவே அவன் கருதினான். ஏன் தளபதி அப்படி பின் வாங்கும்படி கட்டளையிட்டார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பின்னிரவு இரண்டு மணியளவில் எறிகணை வீச்சு ஆரம்பமானபோது உடனடியாகவே காவலரண்களை விட்டுப் பின் வாங்கும்படி தளபதியிடமிருந்து கட்டளை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக செல் விழும் எல்லை முன்னேறி காவலரண்களை நெருங்கு முன்பே போராளிகள் ஏறக்குறைய நூறு மீற்றர்கள் பின்வாங்கிவிட்டனர். சங்கரன் அது ஒரு தந்திரோபாய பின்னகர்வு என்றே கருதினான். மேலும் இன்னொரு கட்டம் பின்வாங்கும் படி மேலிடத்திலிருந்து கட்டளை வந்த போது அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் களமுனையில் கட்டளைகளைக் கேள்விக்கிடமின்றி நிறைவேற்றுவது கட்டாயமானது என்ற வகையில் அவன் அப்படியே செயற்பட்டான்.

நான்கு மணியளவில் எறிகணை வீச்சு முற்றாக ஓய்ந்த பின்பும் மேலிடத்தில் இருந்து எந்தக் கட்டளைகளும் வரவில்லை. சக போராளிகள் “என்னண்ண செய்யிறது?” என மாறி மாறிக் கேள்வி எழுப்பிய போது அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

நன்றாக விடிந்த பின்பு பற்றைகளின் இடைவெளிகளால் மறைந்து நின்று பார்த்த போது போராளிகளின் காவலரண்களெங்கும் படையினரின் நடமாட்டம் தென்பட்டது.

வோக்கியை செயல்படுத்தி அந்த விடயத்தை தளபதிக்கு தெரியப்படுத்தினான்.

“தெரியும்! நீ நான் சொல்லுறத மட்டும் செய்தால் போதும்”, என்ற கடுமையான கட்டளை பதிலாக வந்தது.

 ( தொடரும்)

-நா.யோகேந்திரநாதன்-