Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 03

அன்று மதிய உணவு முடிந்த பின்பு அணித்தலைவர்களையும் குழுக்களுக்குப்
பொறுப்பானவர்களையும் தளபதி அழைத்திருந்தார். அவர் தாக்குதல் திட்டங்களை வரைபடம் மூலம் விளக்கினார்.
“இண்டைக்கு நாங்கள் எதிரி எதிர்பார்க்காத நேரத்திலை, அவன் எதிர்பாராத விதமான ஒரு தாக்குதலை நடத்தப்போறம்” அவர் இப்படிச் சொல்லிவிட்டு இடைநிறுத்தியபோது அனைவரும் அவரின் முகத்தை ஆவலுடன் நோக்கினர்.

அவர் தாக்குதல் திட்டம் வரையப்பட்டிருந்த படத்தை ஒரு தடியால் குறிப்பிட்டுக் காட்டியவாறு கூற ஆரம்பித்தார்.

“எதிரி தன்ர பிரதான முகாமிலயிருந்து ஒரு வால் போன்ற வடிவத்திலை முன்னேறி அரண் அமைச்சிருக்கிறான். முதல் தாக்குதல் இப்ப நாங்கள் நிக்கிற பக்கத்தால கடுமையாகவும் வேகமாகவும் பெரிய அளவிலயும் ஆரம்பிக்கும். இந்தத் தாக்குதலில் எதிரியின்ர கவனம் முழுக்கப் பதிஞ்சிருக்க முகாமிலயிருந்து வால் ஆரம்பிக்கிற பகுதியில வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் இரண்டு அணிகள் உள்ள உடைச்சுக்கொண்டு போகும். ஒண்டு முகாம் பக்கம் தாக்குதலை நடத்தி அங்கயிருந்து உதவி வராமல் தடுக்க மற்ற அணி வால் பக்கம் கடுமையான தாக்குதலை நடத்தும். எதிரிக்கு ஒரே நேரத்தில முன்பக்கமும் பின்பக்கமும் அடி விழுற அதே நேரம் வலப்பக்கமும் இப்பக்கமும் ஒவ்வொரு அணியளும் தாக்குதலத் தொடங்கும். அப்பிடி வால் பகுதிய முழுமையா அழிச்ச நிலையில முகாம் பக்கமிருக்கிற இரண்டு அணிகளும் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் விலகியிடவேணும். அந்த நேரத்தில முகாமிலயிருந்து உதவிக்கு வாற அணியை பொக்ஸ்சுக்கை இழுத்து அழிக்கவேண்டியதுதான். அந்த நேரம் முகாம் கணிசமானளவு பலவீனப்பட்டிடும். கட்டளை வந்ததோட முகாமை நோக்கிய தாக்குதலைத் தொடங்கவேண்டியதுதான். கிட்ட கிட்ட நிண்டு சண்டை பிடிக்கிறதால அவன்ரை செல்லடிய சமாளிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் நாங்கள் இஞ்சாலை சண்டை நடக்க உள் முகாமுக்குச் செல் போட்டுக்கொண்டிருப்பம். முகாமில தாக்குதல் தொடங்கினதும் நிப்பாட்டிப்போடுவம்” தளபதி சொல்லி முடித்ததும் எல்லோர் மனதிலும் ஒரு பெரும் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. அனைவரும் அமைதியுடனும் ஆர்வத்துடனும் தங்களுக்குள் கற்பனையில் தாக்குதல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர்.

“சரி.. தாக்குதலுக்கான நேரத்தைப் பிறகு அறிவிப்பம். நீங்கள் இப்பவே போய் உரிய தயாரிப்புக்களைச் செய்து எல்லாத்துக்கும் தயாராயிருங்கோ!”

எல்லோரும் தங்கள் இடங்களை நோக்கிப் புறப்பட்டனர். சக போராளியான மயூரன் சொன்னான், “சிவமண்ண! திட்டமெண்டால் திட்டம் தான்… வெற்றி நிச்சயம் மட்டுமில்ல ஏராளமான ஆயுதங்களும் அள்ளலாம்”

“திட்டம் திறம் தான்… ஆனால் இது எத்தினை பேர் சிந்தின ரத்தத்தில வகுத்த திட்டமெண்டு தெரியுமே? எனக் கேட்டான் சங்கரசிவம்.

“நீங்கள் என்னண்ணை சொல்லுறியள்?’’

“எங்கட “வேவு” போராளியள் இரவு, பகல் பாராமல் ஆபத்தான இடங்களுக்கையெல்லாம் புகுந்து எடுத்த தகவல்களை வைச்சுத்தானே திட்டங்கள் தீட்டுறது. இந்தப் பணியில எத்தினை பேர் உயிர் குடுத்திருப்பினம் தெரியுமே?”

“ஓம்.. ஓம்… எதிரியின்ரை கோட்டையளுக்கை புகுந்து தகவல் எடுக்கிறது எண்டால் அது பயங்கர ஆபத்துத்தான வேலை தானே” என ஆமோதித்தான் மயூரன்.

சங்கரசிவத்தின் அணியினருக்கு முன்பக்கப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கதையே எப்போதும் எதிரி எதிர்பார்திருப்பானாகையால் அவனின் கடுமையான தாக்குதலுக்கு முகம் கொடுத்தே முன் செல்ல வேண்டிவரும். அவர்கள் அன்று காலையில் தான் காவலரண்களை அமைத்திருந்தபடியால் அவற்றை உடைப்பது வழமையை விடச் சுலபமாயிருக்கும் எனவே நம்பினான்.

எப்படியிருந்த போதும் ஒரு பெரிய வெற்றியை ஈட்டப்போகிறோம் என்ற நம்பிக்கை மட்டும் மிக உறுதியாக அவனுள் பதிந்திருந்தது.

பரமசிவம் தான் கொண்டு வந்த உடும்பை உரித்து, வெட்டி பார்வதியிடம் கொடுத்துவிட்டு தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார்.

அவர் அங்கு போன போது சுந்தரம் மீண்டும் நீரிறைத்து மிளகாய்க் கன்றுகளுக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்தான். மிளகாய் கன்றுகள் செழிப்பாகவும் இடைப்பழமும் காயுமாக நிமிர்ந்து நின்றிருந்தன. வேலாத்தையும் முத்தமாம்மாவும் முற்றிய பிஞ்சு மிளாய்களையும், இடைப்பழங்களையும் பறித்துக் கொண்டிருந்தனர். இம்முறை பாரிய விளைச்சல் ஏற்படுமென்ற அறிகுறிகள் தென்பட்டன.

இம்முறை காவிளாய் குழை தாட்டதுடன் பட்டியெரு போட்டிருந்தார். அந்தப் பசளைகள் மிளகாய் கன்றுகளை நல்ல செழிப்பாக எழுப்பியிருந்தன. மிளகாய்கள் கூட மிக நீண்டவையாகவும் பொலிவாயும் காணப்பட்டன.

சுந்தரத்தின் மிக அருகில் சென்ற அவர், “தம்பி… நீ வீட்டை போய் ஆறு.. நான் இறைச்சு முடிச்சுப்போட்டு வாறன்..” என்றார் பரமசிவம்.

அவனோ முத்தம்மாவுடன் நிற்பதற்காக எவ்வளவு நேரமும் தோட்டத்தில் வேலை செய்யத் தயாராயிருந்தான். “இல்லையய்யா… நான் இறைக்கிறன்..” என்றான் அவன்.

“நீ விடியத்துடக்கம் தண்ணி மாறுறாய்.. களைச்சுப் போனாய்… போய் ஆறுதலாய் இரு” என்றுவிட்டு மண்வெட்டியை வாங்கினார் பரமசிவம்.

எதுவுமே செய்ய முடியாத நிலையில் மண்வெட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான் சுந்தரம். நடு வாய்க்காலுக்கால் வந்தபோது ஒரு முறை திரும்பி முத்தம்மாவைப் பார்த்தான். அப்பொழுது அவளும் அவனையே பார்த்ததைக் கண்டுகொண்டான். அவன், தான் பார்த்ததைக் கண்டுவிட்டான் எனத் தெரிந்ததும் முத்தம்மா தலையைக் குனிந்து கொண்டு மிளகாய் பிடுங்க ஆரம்பித்தாள்.

சுந்தரம், “போக விடை தாருமணை பெற்றவளே தாயே! அந்தப் பொற்கொடியாள் மாலையிடம் பெற்றவளே தாயே” எனப் பாடிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் பாட்டு, “போக விடை தாருமணை ஆரியப்பூமாலை எந்தன் பெற்றவளாம் தாயிடமே ஆரியப்பூமாலை”, என்று அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் போல ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.

அவன் வீட்டுக் கடப்படிக்கு வந்தபோது அவனின் நண்பன் செல்வம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவன் சுந்தரத்தைக் கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு, “நீ போகேல்லயே…? என்று கேட்டான்.

“எங்கை?”

“இயக்கம் ஏதோ கூட்டமெண்டு தட்சிணாமருதமடு பொதுநோக்கு மண்டபத்துக்கு வரச்சொல்லியிருக்குது”, என்றான் அவன்.

“என்ன கூட்டமாம்?”

“என்னண்டு தெரியேல்ல… வாவன் போவம்..”, எனக் கேட்டான் செல்வம்.

“ம்.. இயக்கம் கூப்பிட்டால் போகத்தானே வேணும்.. போகேக்க இதால வாவன் நானும் வாறன்!” என்றான் சுந்தரம்.

“ஓ.. இரண்டு பேரும் போவம்”, என்றுவிட்டுப் புறப்பட்டான் செல்வம்.

அன்று மாலை பொது நோக்கு மண்டபத்துக்கு அவர்கள் போனபோது அங்கு ஏற்கனவே முப்பது, நாற்பது வாலிபர்கள் கூடிநின்றனர். எவருக்குமே என்ன கூட்டம் என்பது தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் வட்டப் பொறுப்பாளர் வந்து கூட்டத்தை ஆரம்பித்தார். அவர் ஒரு முக்கிய விஷயமாக கொஞ்சப் போர் தேவைப்படுவதாகவும், அடுத்த நாள்தான் திரும்ப முடியும் எனவும் விருப்பமானவர்கள் வரும்படியும் கேட்டுக்கொண்டார்.

பெரும்பாலானவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

செல்வம், “வீட்டை சொல்லிப்போட்டு வாறம்!” என்றான்.

“அது தேவையில்லை.. நாங்கள் அறிவிச்சு விடுறம்!” என்றார் பொறுப்பாளர்.

செல்வமும் சுந்தரமும் அவர்களுடன் போக முடிவெடுத்தனர். சிறிது நேரத்தில் வந்த வாகனத்ததில் அனைவரும் ஏறிக்கொண்டனர். பாலம்பிட்டி நோக்கிய பாதையில் போன வாகனம் சிறிது தூரம் சென்ற பின்பு ஒரு காட்டுப்பாதையில் இறங்கியது.

அந்தச் சுற்றாடலே இருளில் கனத்துப் போய்க்கிடந்தது. எங்கும் ஒரே நிசப்தம். வழமையாகக் கோஷ்டி கானமிசைக்கும் சில் வண்டுகள் கூட அன்று அமைதி பூண்டுவிட்டன.

போராளிகள் வரப்போகும் கட்டளையை எதிர்பார்த்து உருமறைப்புச் செய்து படுத்திருந்தனர்.

எங்கோ தொலை தூரத்தில் ஆட்காட்டியின் குரல் ஒரு முறை ஒலித்து ஓய்ந்தது.சங்கரசிவம் அவசரமாக இரவுப் பார்வைச் சாதனத்தை எடுத்து அதனூடாக சுற்றும் முற்றும் பார்த்தான்.

எவ்வித அசைவும் தென்படவில்லை. கிழக்குத் திசையில் சந்திரன் தலை நீட்டவே மிக மங்கலான ஒரு ஒளி பரவ ஆரம்பித்தது. போராளிகள் முகாமின் பக்கமிருந்து போன எறிகணை முகாமுக்குள் வீழ்ந்து வெடிக்க முகாமின் சகல விளக்குகளும் அணைந்தன.

செல், மின் பிறப்பாக்கியின் மீது விழுந்திருக்க வேண்டும். கட்டளை வெடியதிரவே சிவத்தின் அணியினர் படையினரின் நிலைகளை நோக்கிப் பாய்ந்தனர்.

படையினர் விளக்குகள் அணைந்த அதிர்ச்சியிலிருந்து மீள முன்பே அவர்களை நோக்கி ரவைகள் பாய ஆரம்பித்தன…

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)