Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 25

தொடர்ச்சியாக ஏறக்குறைய மூன்று வாரங்கள் எவ்வித மோதல்களுமின்றியே கழிந்தன. அது புயலுக்கு முன்பு கடலில் ஏற்படும்
மரண அமைதி போன்று ஒரு பயங்கரத் தோற்றம் என்பதை எவருமே உணர்ந்து கொள்ளவில்லை.

தம்பனை முன்னரங்கக் காவலரண்கள் சிவத்தின் பொறுப்பிலேயே இருந்தன. சிவம் மிகவும் விழிப்புடனேயே நிலைமைகளை அவதானித்து வந்தான். ஒன்றுவிட்ட ஒரு காவலரணில் மகளிர் படையணிப் போராளிகளே அமர்த்தப்பட்டிருந்தனர்.வதனி நடுச்சாம வேளைகளில் தேனீர் தயாரித்து அருகிலுள்ள காவலரண்களுக்கும் கொடுப்பாள்.

அவள் ஒரு நல்ல சண்டைக்காரியாக இருந்த போதும் சிறுபிள்ளை போன்று எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவாள். அவள் எல்லோரையும், “டேய் அண்ணை”, என்றே அழைப்பாள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயரும் வைத்து விடுவாள். மலைவனை அவள், “டேய் மலையாண்டியண்ணை”, என்று தான் கூப்பிடுவாள். அவனும் சிரித்துக் கொண்டே, “போடி கீச்சிட்டான் குருவி”, எனக் கேலி செய்வதுண்டு.

இரவு இரண்டு மணியளவில் எறிகணைகள் சீற ஆரம்பித்தன. அத்தனையும் முன்னரங்குகளைத் தாண்டி ஊர்மனைகளுக்குள் சென்று வீழ்ந்து கொண்டிருந்தன. வழமையாக இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளின் போது எறிகணைகள் முன்னரங்கப் பகுதிகளிலேயே விழுந்து வெடிப்பதுண்டு. இப்போது எல்லாமே முன்னரங்குகளைத் தாண்டிப் போய் விழுவது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனினும் முன்னரங்கில் உயர் விழிப்பு நிலையைப் பேணும் வகையில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தான்.

மடுக்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களிலெல்லாம் சரமாரியாக எறிகணைகள் விழுந்து வெடிக்க ஆரம்பித்தன. தட்சிணாமருதமடு பாலம்பிட்டி ஆகிய கிராமங்களையும் எறிகணைகள் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து எரிபந்தங்களாக விழுந்து வெடித்தன. மக்கள் இரவு முழுவதையும் பதுங்குகுழிகளிலேயே கழிக்கவேண்டியிருந்தது.

காடுகளுக்கு மேலால் பராவெளிச்சம் அடிக்கடி ஏவப்பட்டது. எனவே காடுகளுக்கால் இராணுவம் முன்னேறக் கூடும் எனக் கருதியதால் அப்பக்கத்தை அவன் பலப்படுத்தினான். சிறப்புத் தளபதியிடமிருந்து ஏதாவது கட்டகளைகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தொடர்ந்து படையினர் பக்கமிருந்தும் போராளிகள் தரப்பிலிருந்தும் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன.

அதிகாலை ஐந்து மணியளவில் கட்டளைப் பீடத்திலிருந்து அவசர அழைப்பு வந்தது. படையினர் இடதுபுறமாக பண்டிவிரிச்சான் குளத்தின் அலைகரைக்குள் இறக்கிவிட்டதாகவும் வலது புறமாக மாதா சந்தியில் காட்டுக்குள் நகர்வதாகவும், முன்னரங்கப் போராளிகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் இருப்பதால் உடனடியாகப் பின்வாங்கும் படி கட்டளை வந்தது. சிவத்தால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

எனினும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது கட்டாயமாதலால் போராளிகளையும் பின் நகருமாறு உத்தரவிட்டான். ஒரு தோட்டா கூடச் சுடாமல் பின்வாங்குவது அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. அவர்கள் பின்வாங்கிய போது பெரியபண்டிவிரிச்சானுக்கும் மடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் பேராளிகளும் ஆதரவாளர்களும் வேகமாகக் காவல் நிலைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.

காலை ஏழு மணியளவில் எறிகணை வீச்சு நின்றுவிட்டது. ஆனால் படையினர் தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் எனப் பெரும் பகுதியைக் கைப்பற்றிவிட்டனர். கட்டை அடம்பனிலிருந்து காட்டுக்குள்ளால் ஊடுருவிய ஒரு இராணுவ அணியை பரப்புக்கடந்தான் கல்குவாரிப் பகுதியில் போராளிகள் மறித்து சண்டை செய்வதாகவும் செய்தி வந்தது.

மூன்றுவார அமைதிக்குள் எவ்வளவு பெரிய ஆபத்து காத்துக் கிடந்தது என்பதை இப்போது அவன் புரிந்து கொண்டான். ஆனால் தங்கள் பக்கம் ஏன் இப்பிடி பலவீனமடைந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பண்டிவிரிச்சான் குளத்தடிக்கு எப்படிப் படையினர் முன்னேறியிருப்பர் என்பதை அவனை ஊகிக்க முடிந்தது.

அதற்குக் கூட தங்கள் பக்கத்தில் எங்கோ பிழை நடந்து விட்டதாகவே அவன் திட்டவட்டமாகக் கருதினான். பெரியவலையன் கட்டில் இருந்தோ அல்லது இரணைஇலுப்பையிருந்தா அல்லது இரு முகாம்களிலுமிருந்தோ தான் இராணுவம் புறப்பட்டிருக்கவேண்டும்.

அவர்கள் காவலரண்களில் உள்ள போராளிகள் கண்களில் படாதவகையில் காவரண் வரிசைக்குச் சமாந்தரமாக நகர்ந்திருக்க வேண்டும். பின்பு தம்பனைக்கும் முள்ளிக்குளத்துக்கும் இடையில் உள்ள முள்ளுக்காட்டுப் பகுதியால் பாதை ஏற்படுத்தி பண்டிவிரிச்சான் குளத்தடிக்கு வந்திருக்கவேண்டும்.

தம்பனையால் முன்னேற்ற முயற்றிகளை மேற்கொள்ளப் போவதாகப் போக்குக் காட்டும் வகையில் எறிகணை வீச்சை மேற்கொண்டவாறு காட்டுக்குள்ளால் இரகசிய நகர்வை மேற்கொண்டுள்ளனர். அதை விட வேறு எவ்வகையிலும் இராணுவம் முன்னேறியிருக்க வழியேயில்லையென சிவம் திட்டவட்டமாக நம்பினான்.

அப்படியானால் இவ்வளவும் இடம்பெற்ற போது தங்கள் “வேவு” அணியால் ஏன் அறிய முடியவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இப்போ முள்ளிக்குளம், கீரிசுட்டான் பகுதியிலிருந்தும் பின்வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. போரின் முன்னரங்கு பண்டிவிரிச்சானுக்கும் மடுவுக்குமிடையேயுள்ள பகுதி, தட்சிணாமருதமடு, பாலம்பிட்டி எனப் பின்னகர்த்தப்பட்டுவிட்டது.

போரின் நிலை இப்படித் திசைமாறிவிட மக்களின் நிலையோ பெரும் இக்கட்டுக்குள்ளாகிவிட்டது. போராளிகளின் காவல்நிலைகள் ஊர் எல்லைக்கு நகர்ந்துவிட்டதால் அவர்களுக்கு பெரிய மடுவை நோக்கி இடம்பெயர்வதை விட வேறு வழி தெரியவில்லை. தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மடுக்கோவிலில் தஞ்சமடைந்திருந்தனர்.

அவர்கள் இராணுவம் பண்டிவிரிச்சானில் இறங்கிவிட்டதை அறிந்ததுமே பெரியமடுவை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர்.

1999ல் ரணகோஷ நடவடிக்கையின் போது அவர்கள் அனுபவித்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும். ரணகோஷ நடவடிக்கையின் போது போராளிகள் படையினரை பெரிய பண்டிவிரிச்சானில் தடுத்து நிறுத்திப் போரிட்டுக் கொண்டிரு்ந்தனர். படையினரின் எறிகணைகளிலிருந்து உயிர்ப் பாதுகாப்புக் கருதி அன்று பகலே மடுவைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் மடுக்கோவிலில் தஞ்சமடைந்தனர்.

அங்கு குவிந்து விட்ட பல ஆயிரம் மக்களைச் சமாளிக்க முடியாமல் மடுவளாகம் திண்டாடியது. குருவானவர் மக்களை கோவிலுக்குள் படுக்கவும் அனுமதித்திருந்தார். எறிகணை வீச்சு இரவும் சரமாரியாகத் தொடர்ந்த போதிலும் அவைகள் கோவில் வளாகத்துக்கு வெளியேயே விழுந்து கொண்டிருந்தன.

மக்கள் பதட்டத்துடன் கண்விழித்துக் கொண்டு குந்திருந்தனர். ஒருவர் கையில் ஒரு வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு இயக்க அதில் பி.பி.பி செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பலர் அதைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். செய்தி முடிந்து சில நிமிடங்களில் பறந்துவந்த எறிகணை ஒன்று சின்னக் கோவிலின் அருகில் நின்ற பாலை மரத்தில் பட்டு வெடித்துச் சிதறியது.

எங்கும் மரண ஓலம். அந்தக் கணத்திலேயே 42 உயிர்கள் பறிக்கப்பட கோவில் கட்டிடம் குருதிமயமாகியது. இன்னும் ஏராளமானோர் படுகாயமடைந்து துடிதுடித்தனர். இரவு நேரம், எதுவுமே செய்ய முடியாத நிலை. காயமடையாத சிலர் தங்கள் உடைகளைக் கிழித்து காயங்களுக்குக் கட்டுப்போட்டனர்.

உயிர் தஞ்சம் கோரி மாதா கோவிலில் அடைக்கலம் கோரிய மக்களின் மீதே எறிகணை வீசி படையினர் தங்கள் கொலைவெறியை நிலைநாட்டினர். தட்சிணா மருதமடு, பாலம்பிட்டி ஆகிய கிராமங்களின் மக்களும் பெரிய மடு நோக்கி நடந்தும் சைக்கிள்களிலும் உழவுஇயந்திரங்களிலும் போக ஆரம்பித்தனர். பாலம்பிட்டியை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிலை எழுந்த போது எதற்கும் கலங்காத பரமசிவம் ஆடியே போய்விட்டார்.

மிளகாய்த் தோட்டம் காய்த்துக்கொண்டிருந்தது. வீட்டிற்குள்ளும் நாலு மூடைகளில் செத்தல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முற்றத்திலும் நிறைய மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது. மரவெள்ளியும் இன்னும் ஒரு மாதத்தில் பிடுங்கவேண்டிய பருவம் வந்துவிடும். எல்லாவற்றையும் விட்டுப்போவதென்றால் அவருக்கு உயிர் போவது போன்ற உணர்வே ஏற்பட்டது.

எனினும் சில நாட்களில் திரும்பிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை தோன்றி சிறிது தென்பைக் கொடுத்தது. ஒரு பெரு மூச்சுடன், “இந்த மிளகாயை அள்ளி வீட்டுக்கை குவி”, என்றார் அவர்.

பார்வதியின் முகமும் இருண்டு போய்க்கிடந்தது. அவள் எதுவுமே பேசாமல் மிளகாயைக் கடகத்தில் அள்ளி வீட்டுக்குள் கொண்டு சென்று கொட்ட ஆரம்பித்தாள். சுந்தரம் மாட்டுக் கொட்டிலுக்குப் போட்டிருந்த தகரங்களையும் தடிகளையும் கழற்றிக் கொண்டிருந்தான். பரமசிவம் இரண்டு மூடை நெல்லையும், ஒரு மூடை மிளகாயையும் ஏனைய அவசியமான பொருட்களையும் வண்டிலில் ஏற்றினான்.

பசுமாட்டையும் கன்றையும் அவிழ்த்துவிட்டார். பின்பு பரமசிவம் அதைத் தடவியவாறு, “எடியே.. நாங்கள் கெதியாய் வந்திடுவம்.. அதுவரையும் கவனமாய் நிண்டு கொள்”, என்ற போது அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

பார்வதி வண்டிலில் ஏறி அமர, பரமசிவம் மாடுகளை, “நட.. நட” எனத் தட்டி விட்டுப் புறப்படலானார். சுந்தரசிவம் சைக்கிளில் சில பொருட்களைக் கட்டிக்கொண்டு புறப்படத்தயாரானான். எனினும் ஒரு முறை தோட்டத்தைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் போல் தோன்றவே சைக்கிளை அந்தத் திசையை நோக்கிச் செலுத்தினான்.

எங்கும் பசுமை படர்ந்து பழமும் பிஞ்சுமாய்க் கிடந்த அந்தத் தோட்டத்தைப் பார்த்தபோது அவனால் கவலையைத் தாங்க முடியவில்லை. மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை, சில மாதங்களில் முத்தம்மாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவு எல்லாமே நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுள் எழுந்தது.

“இல்லை.. இல்லை.. எப்பிடியும் கெதியாய் திரும்பி வருவம்” எனத் தனக்குள் சொல்லியவாறே சைக்கிளை எடுத்தான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24