Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 34

இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் இலுப்பைக் கடவையிலேயே தங்கிவிட்டனர்.
கூடாரங்கள் இல்லாதவர்களில் ஒரு பகுதியினர் பாடசாலையிலும் கமநல சேவைக் கட்டிடத்திலும் தங்கிக் கொண்டனர். மாந்தை உதவி அரசாங்க அதிபரும் கிராமசேவகர்களும் இணைந்து மூன்று நாட்களுக்குச் சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

பாடசாலை அதிபரும் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக கிடைத்த பொருட்களின் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார். எல்லோர் மனதிலும் வெகு விரைவில் திரும்பிப் போய்விட முடியும் என்ற நம்பிக்கையே மேலோங்கியிருந்தது. பரமசிவம் கூட பெரியமடுவில் இருந்த போது அப்படியான எதிர்பார்ப்பு நிறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் பள்ளமடுவிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்ட போது அந்த நம்பிக்கை மெல்ல மெல்ல பலவீனப்பட ஆரம்பித்தது.

இப்போ பிரதான வீதி அவ்வளவு நெருக்கடியாகக் காணப்படவில்லை. நடந்து செல்பவர்கள் வெகு குறைவாகவேயிருந்தனர். சில உழவியந்திரங்களும் சைக்கிள்களும் ஒன்றிரண்டு மோட்டர் சைக்கிள்களும் மட்டுமே வீதியால் நகர்ந்துகொண்டிருந்தன. பிரதான வீதி குண்டும், குழியுமாகப் படுமோசமான நிலையில் காணப்பட்டது. வண்டியை மிகச் சிரமப்பட்டே ஓட்டவேண்டியிருந்தது.

வெய்யிலும் மிகவும் கடுமையாகவே இருந்தது. காற்றும் விழுந்து விட்டதால் வெப்பத்தில் உடல்கள் தகித்தன. எந்தச் சூழ்நிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய உடல் வலுக்கொண்ட பார்வதி, வேலாயி ஆகியோரே நன்றாகக் களைத்துவிட்டனர். முத்தையாவுக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. முருகர் மட்டும் அந்த வயதிலும் எவ்வித சோர்வுமின்றி நடந்து கொண்டிருந்தார். சுந்தரமும் முத்தம்மாவும் அவர்களுக்குப்பின்னால் சற்றுத் தொலைவில் நடந்துகொண்டிருந்தனர். கடந்த இரவு அவன் படுக்கும் போது தொடர்ந்தும் இப்படியே இடம்பெயர வேண்டுமா? என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுந்து அவனின் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தது.

போராளிகளின் பலத்தை அதிகரிப்பதன் மூலமே இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க முடியும் என்பதை நன்றாகவே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே தங்கள் குடும்பத்தைக் கொண்டு போய் ஒரு இடத்தில் நிலைப்படுத்திவிட்டு தானும் ஒரு போராளியாக இணையவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். முத்தம்மாவையும் அந்த முடிவுக்குச் சம்மதிக்க வைத்துவிடலாம் என அவன் நம்பினான். ஆனால் காலையில் மரத்தின் கீழ் பிணமாகக் கிடந்த அந்தக் கிழவி அவனுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டாள்.

அவள் ஒரு போராளிகளின் தாயாகவோ மாவீரர்களின் தாயாகவோ இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கக் கூடும். ஆனால் அந்தத் தள்ளாடும் வயதிலும் அவள் அந்தரிக்க யாருமற்ற அனாதையாக மரத்தடியில் கிடந்தாள் என்பது மட்டும் உண்மை. அவள் பல நாட்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் தோற்றத்தைப் பார்த்து முதல் நாள் இரவே அவன் புரிந்து கொண்டான்.

அந்த நிலையில் தான் போராளியாகப் போய் விட்டால் தனது பெற்றோரைப் பராமரிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. வயதாகிவிட்ட தந்தையால் தொடர்ந்தும் உழைக்க முடியுமா? அவர்களும் எங்கோ ஒரு மரத்தடியில் பிணமாக விழுந்து கிடக்க முடியுமா? கிழவியின் சாவு ஏற்படுத்திய தாக்கமும் போராளியாகப் போக வேண்டுமென்ற தவிப்பும் அவன் இதயத்தில் எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

அவனுடன் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே நடக்கவேண்டும் என நினைத்திருந்த முத்தம்மாவுக்கு அவனின் மௌனம் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவள் மெல்ல கேட்டாள், “ஏன் ஒண்டுமே பேசாமல் வாறீங்கள்?”, அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் “ஒரே குழப்பமாய்க் கிடக்குது.. என்ன செய்யுறதெண்டே தெரியேல்லை”, என்றாள். அவள் வியப்புடன், “அப்பிடி என்ன புதுக்குழப்பம்?”, எனக் கேட்டாள்.

அவன் தான் இரவு எடுத்த முடிவைப் பற்றியும் கிழவியின் சாவு அவன் மனதில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் விளக்கினான். அமைதியாக கேட்டுக் கொண்டுவந்த அவள், “உண்மையிலேயே நீங்கள் போனால் உங்கட அம்மா, அப்பாவை ஆர் தான் பாக்கிறது? ஆனால்..”, எனக் கூறிவிட்டு இடைநிறுத்தினாள்.

“ஆனால்..?” “நான் போனால் நீங்களும் உங்கடை குடும்பமும் என்ரை தாய், தகப்பனையும் தம்பியையும் பாப்பியள்” “நீ.. என்ன சொல்லுறாய்?” “ஏற்கனவே உங்கடை அண்ணன் போராளி… அவருக்கு ஒண்டு நடந்தாலே உங்கட குடும்பம் தாங்காது… நீங்களும் போனால்.. ஆனால் எங்கடை குடும்பம் உயிர்களை பலி குடுத்துப் பழகிப்போச்சு.. நான் வீரச்சாவடைந்தால் கொஞ்ச நாளைக்கு அழுவினம் ஆனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாது” அவளின் தர்க்கத்தில் நியாயமிருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தான் வெளியே இருந்து கொண்டு அவளைப் போராட அனுப்புவதைப் போன்ற கோழைத் தனம் வேறு இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அவன் சற்றுக் கோபமாகக் கேட்டான், “நீ களமுனையிலை நிண்டு போராட நான் வீட்டிலையிருந்து சோறு சாப்பிடுறதே?” “அப்பிடி.. அப்பிடியில்லை!” “பின்னை எப்பிடி..” “நீங்கள் வெளியிலை நிண்டால் கஷ்டப்பட்டு இரண்டு குடும்பத்தையும் பாப்பியள்.. என்னாலை அப்பிடி ஏலுமே?” சற்று நேரம் சுந்தரம் எதுவும் பேசாமல் நடந்தான்.

பின்பு அவன், சற்று நேரம் “உன்னைக் களத்திலை விட்டிட்டு என்னாலை இஞ்சை இருக்க முடியுமே? முதல் ஒரு மாதிரி சம்மதிச்சு அனுப்பினாலும் பிறகு என்னாலை தாங்க முடியாது. நானும் வந்திடுவன், பிறகு இரண்டு குடும்பங்களும் அனாதையள் தான்”, என்றுவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தான். அவள் எதுவுமே பேசவில்லை. அவனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அவளின் கண்கள் மட்டும் லேசாகக் கலங்கியிருந்தன. “ம்.. போவம். எல்லாத்தையும் பிறகு யோசிப்பம்”, என்று அவன் சொல்ல இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

பரமசிவம் பாலியாற்றின் கரையோரமாக, பிரதான வீதியிலிருந்து சற்று உட்பக்கமாக ஒரு மருதமர நிழலில் வண்டியை நிறுத்தினார். எல்லோருமே நன்றாகக் களைத்துவிட்டனர். கேனில் கொண்டுவந்த குடிநீரை வாங்கி எல்லோரும் மட மடடிவனக் குடித்தனர். மருத மர நிழலும் பாலியாற்றில் ஓடிக்கொண்டிருந்த குறைந்தளவு நீரும் கூட அவர்களுக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்தது. முருகேசர் ஒரு பெரிய வேரில் சாய்ந்து கொண்டு படுத்துவிட்டார். பெருமாள் ஆற்று மணலில் அப்படியே சுருண்டுவிட்டார். அவருக்கு இழுப்பு ஆரம்பித்துவிட்டது.

அப்போது தான் வந்து சேர்ந்த முத்தம்மா ஓடிப்போய் பம்பைத் தேடியெடுத்து குளிசையைப் போட்டு பெருமாளுக்கு இழுக்கக் குடுத்தாள். பின்பு அவள் அதைக் கொண்டு வந்து பையில் போட்டு பத்திரப்படுத்திய போது அருகில் வந்த சுந்தரம் கேட்டான், “நீ சொன்ன இடத்துக்குப் போனியெண்டால் கொப்பருக்கு உது செய்யிறது ஆர்?” எனக் கேட்டான். “ஏன் நீங்கள் செய்ய மாட்டியளே?” “இழுப்பு துவங்கிற நேரமெல்லாம் நான் பக்கத்திலை நிக்க முடியுமே?” அவள் எதுவுமே பேசாமல் ஒரு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு பார்வதி சமையல் வேலையை ஆரம்பித்தாள். வேலாயி சட்டி பானையைக் கழுவிக் கொடுத்துவிட்டு, ஒரு துணியையும் எடுத்துக் கொண்டு, முத்தம்மாவைக் கூப்பிட்டுவிட்டு ஆற்றில் இறங்கினாள். இந்த இடம் சாய்வு குறைவாக இருந்தபடியால் மருதமடு வேர்களைப் பிடித்துக் கொண்டே இறங்க வேண்டியிருந்தது. முத்தம்மாவும் ஆற்றில் இறங்கிவிடவே இருவரும் துணியை இருபக்கமும் பிடித்து மீன்பிடிக்கத் தொடங்கினர். நீர் மிகவும் குறைவாக ஓடியதாலும் நல்ல வெய்யில் நேரமாதலாலும் நன்றாகப் பார்த்து மீன்கள் ஓடும் திசையை குறுக்கறுத்து துணியைப் பிடிக்க முடிந்தது.

இருவரும் அரை மணி நேரத்துக்கு மேல் முயன்று போதியளவு மீனைப் பிடித்துக் கொண்டனர். வேலாயி மீன்களை வெட்டிக் கழுவிக்கொடுக்க பார்வதி வாடிப்போன பிஞ்சு மிளகாய், வெங்காயம் நிறைய் போட்டு பழப்புளி பிழிந்து ஊற்றி கறி வைத்தாள். இன்னுமொரு பகுதி மீனை ஏற்கனவே உருக்கிப் போத்தலில் விட்டு வைத்திருந்த பண்டி நெய்யில் பொரித்து எடுத்தாள். எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டனர். வழமையாக ஒரு சிறிதளவே சாப்பிடும் பெருமாள் கூட மீன் பொரியல் வாசனையுடன் ஒரு பிடி பிடித்துவிட்டார்.

எல்லோருமே சாப்பிட்டு முடிந்து சிறிது நேரத்தில் மருத மர நிழலில் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டனர். ஆனால் சுந்தரத்தால் மட்டும் தூங்க முடியவில்லை. அவன் எழுந்து சென்று ஆற்று மணலில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். தென் கிழக்குத் திசையை நோக்கிய போது வானில் இரு கிபிர் விமானங்கள் பறந்து வந்து குண்டுகளைத் தள்ளிவிட்டு மேலெழும்புவது அவனின் கண்களில் பட்டது. அந்தக் காட்சி அவனின் நரம்பை ஒரு முறை முறுக்கேறச் செய்தது. அப்போதே எழுந்து துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு களமுனையை நோக்கி ஓட வேண்டும் போலிருந்தது. அவன் திரும்பி சற்றுத் தொலைவில் படுத்திருந்த தாயின் முகத்தைப் பார்த்தான்.

அவள் அந்தக் கிழவியைப் போல மரத்தடியில் ஒரு அனாதைப் பிணமாகக் கிடப்பது போலவும், பரமசிவம் பிள்ளை முருகேசரைப் போல கை நடுங்கி, கால் நடுங்கி மூச்சிரைக்க நடக்க முடியாமல் நடந்து வந்து அவளுக்கு அருகில் இருந்து அழுவது போலவும் ஒரு காட்சி அவனின் மனதில் தோன்றி மறைந்தது. அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலவே தோன்றியது.

அவன் எழுந்து சென்று வண்டிலில் ஒரு பக்கமாக ஏற்றி கயிற்றால் இறுகக் கட்டியிருந்த சைக்கிளை அவிழ்த்து கவனமாக கீழே இறக்கினான். அதை உருட்டிக்கொண்டு வந்து வீதியில் ஏற்றிய சுந்தரம், இலுப்பைக் கடவை நோக்கிப் புறப்பட்டான்.

முதல் நாள் மாலை இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்பும் அன்று காலை அவர்கள் வாங்கிய மரண அடியும் காரணமாக அவர்கள் இனிவரும் சில நாட்களுக்கு முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லையென சிவம் நம்பினான். அவர்களும் வழமைபோல் மூன்று, நான்கு மணிக்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. சிவம் தனது ஊகம் சரியாக இருப்பதாகவே கருதினான்.

ஆனால் ஐந்து மணியளவில் விமானங்கள், எறிகணைகள் சகிதம் அவர்கள் ஒரு மூர்க்கமான தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். பல் குழல் பீரங்கிகள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. சிவத்தின் அணியினரும் பெண்கள் அணியினரும் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தினர். பொழுது பட்ட பின்பும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

அவர்கள் தொடர்ந்து போராளிகள் பக்கம் பரா வெளிச்சத்தைக் கொடுத்துக்கொண்டு தாங்கள் இருட்டில் நின்று சண்டையிட்டனர். அந்த நிலைமை கஷ்டமாக இருந்த போதிலும் சிவம் கடுமையாகவும் சாதுரியமாகவும் கட்டளைகளை வழங்கித் தன் அணியை வழி நடத்திக் கொண்டிருந்தான். ஒரு அடி கூடப் படையினரை முன்னேற விடுவதில்லை என்பதில் அவன் மிகவும் உறுதியாகவேயிருந்தான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24