Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 29

அன்று இரவு இறந்த படையினரை மீட்கவும், வதனியின் உடலைக் கொண்டுபோகவும் இராணுவத்தினர் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டும் அதில் அவர்களால்
வெற்றிபெற முடியவில்லை. இம் மீட்பு முயற்சியில் படையினர் எவரும் இறந்ததாக தெரியவில்லை.அவர்கள் படுத்திருந்தவாறே நகர்வுகளை மேற்கொள்வதும், போராளிகள் சுட ஆரம்பித்ததும் இறந்தது போல பாசாங்கு செய்துவிட்டு பின்பு தாக்குதல் ஓய்ந்ததும் பின் நகர்வதும் என முயற்சிகளை மேற்கொண்டனர்.

வதனியின் வித்துடலை அவர்கள் கையில் போய்விடாமற் பார்ப்பதில் மலையவன் மிகவும் விழிப்புடனிருந்தான். இரு பகுதியினரின் காவலரண்களும் ஒன்றையொன்று பார்க்க முடியாதபடியே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சடலங்கள் கிடந்த இடமோ இரு பகுதியினராலும் பார்க்கக் கூடிய இடத்திலேயே அமைந்திருந்தது. அதனால் எந்த ஒரு தரப்பினராலும் சடலங்களை நெருங்க முடியவில்லை. அன்று இரவு எப்படியாவது வதனியின் வித்துடலை எடுப்பது என முடிவு செய்து மலையவன் சிவத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டான்.

அன்று பகல் மதிய வெயிலில் வதனியின் உடல் கிடந்து வதங்குவதைப் பார்க்க மலையவனால் மனவேதனையைத் தாங்க முடியவில்லை. தங்களுக்குத் தேனீர் தரும் கரங்களும், “டேய் அண்ணா”, என எந்த நேரமும் சட சடக்கும் வாயும் வெயிலில் வாடுவதை எப்படி அவர்களால் தாங்க முடியும்? சிறப்புத்தளபதி தன்னை அழைப்பார் எனவும் வதனியின் சாவுக்காகத் தனக்குத் தண்டனை வழங்குவார் எனவும் மலையவன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதை அவன் மனதார ஏற்கவும் தயாராயிருந்தான்.

ஆனால் அப்படி எதுவும் நடக்காதது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அன்று பகல் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அவனால் சாப்பிடக் கூட முடியவில்லை. இனி மேல் தான் தேனீர் அருந்துவதேயில்லை என தனக்குள் முடிவு செய்து கொண்டான். இரவு 12 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் எவரும் கண்ணயர்வில் தடுமாறும் நேரமாதலால் வதனியின் உடலை மீட்க அந்த நேரத்தையே தெரிவு செய்தான். தலைக் கவசத்தையும் அணிந்து கொண்டு நன்றாகவே உருமறைப்புச் செய்தவனாக அசைவதும் அசைவற்றதும் வித்தியாசம் தெரியாத வகையில் நெஞ்சினால் ஊர்ந்தவாறு நகர்ந்தான்.

இப்போது அவன் வதனியின் உடல் கைக்கெட்டும் தூரத்திற்கு வந்துவிட்டான். அருகில் செல்லாது தான் கொண்டு சென்ற கயிற்றை அவளின் காலில் சுருக்கிட்டுக் கொழுவினான். பின்பு அதை இழுத்து இறுக்கிக் கொண்டான். அதன் பின்பு சென்றது போலவே மெல்ல மெல்ல ஊர்ந்து காவலரண் வந்து சேர்ந்தான். பல முறை முயற்சி செய்யவேண்டிவரும் என அவன் கருதியிருந்த போதிலும் ஒரே தடவையில் விஷயம் முடிந்துவிட்டது அவனுக்கு மன நிறைவைத் தந்தது.

அவன் கயிற்றை இழுக்க ஆரம்பிக்கவே சடலம் மெல்ல அசைய ஆரம்பித்தது. இராணுவத்தினரின் காவலரணில் ஏதோ சிங்களத்தில் கத்திக் கேட்டது. மலையவன் சடலத்தை வேகமாக இழுக்க ஆரம்பித்தான். படையினர் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். இரண்டு மூன்று சூடுகள் அவள் உடலிலும் பட்டன. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. வேகமாக அவரக்ள் பார்வையில் படாத பகுதிக்கு இழுத்துக்கொண்டுவந்துவிட்டான். இராணுவத்தின் கிரனைட் லோஞ்சரிலிருந்து வந்து விழுந்த கைக்குண்டு ஒன்று வதனியின் அருகில் விழுந்து வெடித்தது. சற்று நேரத்தில் துப்பாக்கிச் சூடு ஓயவே வதனியின் சடலத்தைக் காவலரணின் பின் பக்கமாகக் கொண்டு வந்தார்கள்.

மலையவன் வதனியின் தலையை தனது மடியில் கிடத்தி, “என்ரை தங்கச்சி”, என்றுவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டான். பின்பு தனது கையில் வெட்டி இரத்தத்தை எடுத்து அவள் நெற்றியில் பொட்டுவைத்துவிட்டு, “வீரத்திலகம்”, என்றான்.

“சிவமண்ணைக்கு அறிவிச்சு தங்கச்சியின்ரை வித்துடலைக் கொண்டு போகச் சொல்லுங்கோ! என்றுவிட்டு எழுந்து சென்று காவலரணில் இறங்கினான் மலையவன்.

பெரியமடு, சன்னார், ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளில் பலமான காவலரண்கள் அமைக்கும் வேலைகள் வேகமாக இடம்பெற்றன. அரசியல் துறைப் போராளிகள் தலைமையில் பொதுமக்களே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மக்களும் மிகவும் உற்சாகமான வகையில் பங்கு கொண்டனர். மண் அரண்கள் நீண்ட வரிசைக்கு அமைக்கப்பட்டன. காவலரண்கள் பலமான தேக்கங்குற்றிகள் அடுக்கப்பட்டு, அவற்றின் மீது மண்மூடைகள் வைக்கப்பட்டு மிகவும் பலமான முறையில் உருவாக்கப்பட்டன. கிபிர் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிப்பதற்காகவே அவ்வளவு பலமான காவலரண்கள் அமைக்கப்படுவதாக பரமசிவம் கருதினார்.

ஓரளவுக்கு அதில் உண்மையும் இருந்தது. பெரிய பண்டிவிரிச்சான் தட்சிணாமருதமடு, மடுப் பகுதிகளில் உள்ள பின்னரங்கப் பகுதிகளில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. பல இடங்களிலும் பீரங்கித் தாக்குதல்களுக்கான “பிக்ஸ்” அடிக்கப்பட்டது.

இச் சம்பவங்கள் சிவத்துக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. கடந்த ஒரு மாதகாலமாக இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளில் போராளிகளை இழந்து கொண்டிருந்த சிவத்துக்கு இப்படியான முன்னேற்பாடுகள் மகிழ்ச்சியையே கொடுத்தன. அதாவது பின்வாங்கி இராணுவத்தை உள்ளிழுத்து பேரழிவை ஏற்படுத்தி விரட்டியடிக்கும் நோக்குடனேயே தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அவன் கருதினான்.

தனது அணியினருக்கும் பெண்கள் அணிக்கும் ஒரு பெரும் வெற்றி ஈட்டப்போவது பற்றிய நம்பிக்கைகளை வளர்த்தான். எல்லோரும் மிகவும் உற்சாகமாகவே இருந்தனர். வதனியின் இறப்பின் பின்பு மலைவனின் மனம் படையினருக்கு எதிராகப் பெரும் வெறிகொண்டிருந்தது. எதிர்வரப்போகும் சண்டையில் பெரும் சாதனைகள் ஈட்டவேண்டுமெனக் கனவு கண்டான். ஒட்டுமொத்தமாகவே போராளிகளிடம் ஒரு தனி உற்சாகம் பரவியிருந்தது. எதிர்வரும் சண்டையைப் பற்றி வெகு ஆவலுடன் பேசிக்கொண்டனர்.

அன்று இரவு முழுவதும் பதுங்குகுழிகள், மண் அரண்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு சுந்தரம் காலையில் தான் பெரியமடு ஆலடிக்குத்திரும்பியிருந்தான். பரமசிவம் தான் கொண்டு வந்த தகரங்களையும் தடிகளையும் வைத்து ஒரு கொட்டில் அமைத்திருந்தார். குளத்தில் போய் குளித்துவிட்டு வந்த சுந்தரத்துக்கு பார்வதி தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

பசுப்பால் தேனீரையே பருகிப்பழகிவிட்ட சுந்தரத்துக்கு வெறும் தேனீர் சுவைக்க மறுத்தது. எனினும் வேறு வழியில்லாத நிலையில் குடித்து முடித்தான் அவன். முத்தம்மா அப்போது தான் தூக்கம் கலைந்து வெளியே வந்தாள். சுந்தரத்தின் சிவந்த கண்களைப் பார்த்த போது அவளுக்கு கவலையாக இருந்தது.

அவள், “கடுமையான வேலை போலை..?” எனக் கேட்டாள். “ஓ.. எல்லாம் எங்கடை பாதுகாப்புக்குத்தானே!”, என்றான் அவன். முருகேசருக்கு இருவார கால அகதி வாழ்வே வெறுத்துவிட்டது.

அவர் சலிப்பில் மிகவும் நொந்து போயிருந்தார். அவர் சுந்தரத்தைக் கண்டதும் அருகில் வந்து, “உங்கை போட்டுவாறாய்.. எப்பவாம் ஊர்ப்பக்கம் திரும்பிறது எண்டு ஏதேனும் கதைச்சவங்களே..”, எனக் கேட்டார். அருகில் வேப்பங்குச்சி ஒன்றினால் பல்லைத்தீட்டிக் கொண்டிருந்த முருகரப்பு, “என்ன முருகேசர்.. எப்ப ஊருக்கு போறது எண்டது திருக்கேதீஸ்வரம் தேருக்கு போற மாதிரி பஸ்சில போய் இறங்கிற சங்கதியே… எத்தினை உயிர்ப்பலி குடுக்க வேணும் தெரியுமே?”, எனக்கேட்டார்.

அத்துடன் எதுவும் பேசாமலே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். “முருகரப்பு, மனுஷன் உண்மையான கவலையோடை கேட்குது.. நீ ஏன் அவரை நாக்கு வளைக்கிறாய்?”, என்றார் பரமசிவம். “ஊருக்குப் போகவேணும் எண்ட அந்தரம் ஆருக்கு இல்லை.. அதுக்காகச் சும்மா தொண தொணக்கிறதே?’ பரமசிவம், “பாவம் அந்த மனுஷன்”, என்றார்.

முருகரும் முகம் கழுவ குளத்தை நோக்கி நடந்தார். அன்று பகல் பொழுது எவ்வித சலனமுமின்றியே போனது. ஆனால் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கே எறிகணை வீச்சு ஆரம்பித்துவிட்டது. வழமையிலும் பார்க்க அன்று எறிகணைகள் சில நிமிடங்கள் கூட இடைவெளியின்றி தொடர்ச்சியாக வீழ்ந்து கொண்டிருந்தன. சில எறிகணைகள் பெரியமடுவின் எல்லையிலும் விழ ஆரம்பித்தன.

அவை வந்து விழும் விதம் ஏதோ எறிகணைகளால் வேலியமைப்பது போலவே தோன்றியது. அந்த ஊரைச் சேர்ந்தவர்களும், இடம்பெயர்ந்து வந்தவர்களும் எறிகணை வீச்சு ஆரம்பமான கையுடனேயே விழித்தெழுந்து விட்டனர். அனைவரும் பயந்து விழிகளுடன் குந்திக்கொண்டிருந்தனர். முருகேசர் பதட்டத்துடன் ஓடிவந்தார்,

“பரமசிவம்.. இஞ்சையிருந்தும் வெளிக்கிடவேண்டிவரும் போல கிடக்குது”, “ஓமண்ணை, எதுக்கும் விடியட்டும் நிலைமையைப் பார்த்துச் செய்வம்” என்றார் பரமசிவம்.

இன்னொரு இடம்பெயர்வு என நினைத்த போதே அவருக்கு மனம் கசந்தது. எனினும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் தாங்கள் தானே அனுபவிக்க வேண்டும் என நினைத்து அவர் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.

அதே நேரத்தில் இப்படியான அகோர எறிகணைகள் மத்தியிலும் களத்தில் நின்று போராடும் தன் மகன் சங்கரசிவத்தின் நினைவும் அவருக்கு வராமல் இல்லை. அவர் அதை இப்போது நினைவுபடுத்தி பார்வதியின் மனதைத் தவிக்கவைக்க விரும்பாதபடியால் அதைப்பற்றி அவர் எதுவுமே பேசவில்லை. ஆனால் பார்வதியின் நெஞ்சு முழுவதும் சிவம் பற்றிய எண்ணங்களே குமைந்து கொண்டிருந்தன.

அவளும் அதை வெளியே சொல்லி பரமசிவத்துக்கு கவலையைக் கொடுக்க விரும்பவில்லை. கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் குண்டோசை பெரியமடுவையே அதிரவைத்தது. அடுத்து இன்னொரு குண்டும் இடைவெளி இன்றியே விழுந்தது. பேரிரைச்சலுடன் விமானமொன்று மேலெழ அடுத்த விமானம் வந்து இரு குண்டுகளைப் பொழிந்தது.

முதல் விமானம் மேலெழுந்து வட்டமிட்டுவிட்டு மீண்டும் குண்டுகளைத் தள்ளியது. இரண்டாவதும் மீண்டும் அதே வேலையை செய்தது. காடுகளுக்கு மேலால் கரும்புகை மண்டலங்கள் எழுந்தன.

பெண்கள், “பிள்ளையாரே, பிள்ளையாரே!”, என அலறத் தொடங்கிவிட்டனர். முருகரும், பரமசிவமும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர். அவலம் அத்துடன் நின்றுவிடவில்லை. கிபிர் விமானங்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து குண்டுகளை தள்ளிவிட்டன. எறிகணைகளும் தொடர்ந்து விழுந்துகொண்டேயிருந்தன.

குளத்தின் அலைகரையிலும் கட்டுப்பக்கங்களிலும் படுத்திருந்த மாடுகள் திசை தெரியாமல் பல பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தன. பரமசிவத்தின் வண்டில் மாடுகள் கூட மிரண்டு கட்டையைச் சுற்றி வந்தன. எவர் ஒரு கூட, என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். 

சண்டை எங்கு நடக்கிறது என்பதையும் இராணுவத்தினர் எங்கு நகர்வை மேற்கொள்கின்றனர் என்பதையும் எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24