Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 32

மதிய வேளை ஓய்ந்திருந்த சண்டை பிற்பகல் நான்கு மணியளவில் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. அகோர எறிகணை வீச்சுடன்
இராணுவத்தினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். சிவத்தின் அணியினர் மிகவும் கடுமையாகவே போராட வேண்டியிருந்தது. போராளிகளின் மோட்டார் தாக்குதல் எதிரிகளைத் துல்லியமாக வேட்டையாடிய போதும் ஒருவர் விழ மற்றவர் என்ற வகையில் அவர்கள் முன்னேற்ற முயற்சிகளில் இறங்கியிருந்தனர்.

ரூபாவின் தலைமையிலான பெண்கள் அணியும் கடுமையான எதிர்ச் சமரை நடத்திக்கொண்டிருந்தது. அவள் தனித்துவமான ஆற்றலுடன் போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தாள். படையினரின் பெரும் எண்ணிக்கையே அவர்களுக்கு கள நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டிருப்பதை சிவம் நன்றாகவே புரிந்து கொண்டான்.

அந் நிலையில் பின்வாங்கி எதிரியை உள்ளிழுத்து ‘பொக்ஸ்’ அடிப்பது தங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனக்கருதினான். அது பற்றி கட்டளை பீடத்திடம் தொடர்பு கொண்ட போது ‘ஆட்டி’ தாக்குதல் அதிகரிக்கப்படும் என்றே பதில் வந்தது. சில சமயங்களில் ‘பொக்ஸ்’ அடிக்கப் போராளிகள் எண்ணிக்கை போதாமலிருக்கும் என்றும் எண்ணிக்கொண்டான்.

போராளிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவை எதிரியின் முன்னரங்கில் விழாமல் பின் பகுதியில் விழுந்தன. முன் வரிசையில் நின்று போரிட்ட படையினர் பின் அணியிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதையும் சிவம் புரிந்து கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடிவு செய்த சிவம் தனது அணியினரை மூர்க்கத்தனமாகத் தாக்கும்படி கட்டளையிட்டான்.

அதே அறிவித்தலை ரூபாவுக்கும் கொடுத்தான். களமுனை புதிய உத்வேகம் பெற்றது. பின்புறமாக எறிகணை வீச்சு, முன்புறமாக அகோரத் தாக்குதல் எனப் படையினர் தடுமாற வைக்கப்பட்டனர். அவர்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்த எறிகணை வேலி அவர்களை முன்னோக்கித் தள்ளியது. போராளிகளோ வெகு நிதானமாக ஒவ்வொருவராய் சுட்டு விழுத்திக் கொண்டிருந்தனர்.

தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் புரிந்து கொண்ட படையினர் பலர் எறிகணைகளையும் பொருட்படுத்தாமல் பின் நோக்கி ஓடினர். அதிலும் ஏராளமானோர் செத்தும் காயமுற்றும் விழுந்தனர். சிவத்தின் அணியினரையும் ரூபாவின் அணியையும் எறிகணை வேலிவரை மட்டுமே முன்னேறி சமர்க்களத்தை அந்த இடத்துக்கு நகர்த்தும்படி கட்டளை வந்தது.

முன் அணியினர் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டிருக்க பின்னால் மிக வேகமாகக் கண்ணிவெடிப் பிரிவினர் பொறிவெடிகளையும் வாகனக் கண்ணிவெடிகளையும் புதைக்க ஆரம்பித்தனர். நன்றாக இருட்டிய நிலையில் சண்டை ஓய்ந்தது. இரு அணியினரையும் முன் நின்ற இடத்துக்கு பின் கொண்டுவரும்படி சிவத்துக்கு கட்டளைப் பீடத்திலிருந்து ஆணை வந்தது.

இரு அணியினரும் எவ்வித அறிகுறியும் வெளியே தெரியாதவாறு பின்வாங்கினர். படையினர் தொடர்ந்து பரா வெளிச்சத்தை அடித்துக் கொண்டிருந்தனர்.

பரமசிவத்தின் வண்டில் பள்ளமடுவை அடைந்த போது கதிரவன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. சுந்தரமும் முத்தம்மாவும் வீதியில் வந்து அவர்களின் வரகாகவுக்காக காத்து நின்றனர். வண்டிலைச் சுந்தரம் தூரத்தில் வரும் போதே கண்டுவிட்டதால் கையை உயரத்தூக்கி சைகை காட்டினான். பரமசிவம் அந்த மைம்மல் பொழுதிலும் அடையாளம் கண்டு அவனை நோக்கி மாடுகளைத் தட்டிவிட்டார்.

சுந்தரமும் முத்தம்மாவும் நீண்ட தூரம் நடந்து தேடியும் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் விடத்தல்தீவு போகும் வீதியில் சற்றுப் பள்ளமான ஒரு இடத்தைத் தெரிவு செய்தனர். அந்த இடத்தில் பரவிக் கிடந்த விடத்தல் முட்களை அகற்றுவது பெரும் சிரமமாக இருந்தது.

அருகில் முட்களை நீட்டியவாறு ஒரு நாகதாளிப்பற்றையும் காட்சி கொடுத்தது. சுந்தரமும் முத்தம்மாவும் அந்த இடத்தை வெட்டியும் செதுக்கியும் சுத்தப்படுத்தினர். முத்தம்மா ஒரு காவோலையை எடுத்து அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கினாள்.

பரமசிவம் வண்டியை சந்தியால் திருப்பி சுந்தரம் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குவிட்டார். வண்டில் நின்றதும் பெருமாளும் முருகேசரும் மெல்ல இறங்கினர். அவர்கள் ஒரு ஓரமாய் போய் அமர்ந்து கொண்டனர். பரமசிவம் வண்டிலை முன் தாங்கியில் நிறுத்திவிட்டு மாடுகளை தண்ணீர் காட்ட குளப்பக்கமாய் கொண்டு சென்றார். பார்வதியும் வேலாயியும் நடந்து வந்த களையையும் பொருட்படுத்தாமல் சமையல் பொருட்களை இறக்கித் தங்கள் வேலையை ஆரம்பித்தனர்.

தண்ணீர் எடுப்பதற்காக சுந்தரம் நல்ல தண்ணீர் கிணற்றினைத் தேடிச் சென்றபோது அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். ஒரு கேன் நீரெடுக்கவே நீண்டநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஒருவாறு கஸ்ரப்பட்டு அரை மணி நேரத்தில் நீரை எடுத்துக்கொண்டு திரும்பினான். அவன் வரும் போதே ஏற்கனவே கொண்டுவந்த நீரில் பார்வதி சமையலை ஆரம்பித்துவிட்டாள்.

சோற்றுக்கு அரிசியை உலையில் போட்டு விட்டு எஞ்சிக்கிடந்த வாடிப்போன கத்தரிக்காயையும் பருப்பையும் பூசணியில் ஒரு துண்டையும் போட்டு சாம்பார் தயார் செய்தாள். ஆண்கள் எல்லோரும் ஒரு பக்கமாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். எல்லோர் பேச்சிலும் எப்போ சொந்த இடத்துக்குத் திரும்புவது என்ற கேள்வியே பொதிந்து கிடந்தது. பலர் விரைவாகவே திரும்பிவிடலாம் எனக் கருதினர்.

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து விடத்தல் தீவு ஆலயத்தின் பங்குத்தந்தை இறங்கினார். பின்னர் 3 உழவுயந்திரங்களும் வந்து நின்றன. அவற்றில் தேயிலைப் பெட்டிகளில் உணவுப் பார்சல்கள் நிறைக்கப்பட்டிருந்தன. அருட்தந்தை ஒரு உழவுயந்திரத்தை அவ்விடத்தில் நிறுத்தி மக்களுக்கு விநியோகம் செய்யும்படி கூறிவிட்டு மற்ற வாகனங்களை அழைத்துக் கொண்டு பிரதான வீதிப்பக்கமாக போனார்.

உழவுயந்திரத்தில் வந்த இளைஞர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. மக்கள் இடிபட்டுப் பாயத் தொடங்கிவிட்டனர். இளைஞர்கள் கொடுத்த பார்சல்களை ஒரே நேர்த்தில் பலர் பறிக்க முயன்றதால் பல பிரிந்து கொட்டியும் போயின. அதைப் பார்த்துக் கொண்டு நின்ற சுந்தரத்துக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது.

மக்கள் பசியில் துடிக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக இடிபட்டு நெரிபட்டு அவற்றை நிலத்தில் கொட்டி வீணாக்கக் கூடாதல்லவா? சனத்தை இடித்துப் பிரித்துக் கொண்டு உழவுயந்திரத்தின் அருகில் வந்த அவன் உரத்த குரலில், “தம்பியவை, குடுக்கிறதை நிப்பாட்டுங்கோ..!”, என்றான்.

அவர்கள் திகைத்துப் போய் விநியோகத்தை நிறுத்தினர். அவர்கள் சுந்தரத்தை ஒரு போராளி என எண்ணியிருக்கவேண்டும். “எல்லாரும் ஒருதருக்குப் பின்னாலை ஒருதராய் வரிசையில நில்லுங்கோ”, என்றுவிட்டு கூட்டத்தில் நின்ற இரு இளைஞர்களை அழைத்து வரிசையை ஒழுங்குபடுத்துமாறு கூறினான். வரிசை அவர்கள் நின்ற இடத்திலிருந்து விடத்தல் தீவுக் கிராமம் ஆரம்பம் வரை நீண்டிருந்தது.

இளைஞர்கள் சிரமமின்றி உணவுப்பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்தனர். சில குடும்பங்கள் சமைத்த போதும் வரிசையில் வந்து நின்று உணவை வாங்கிக் கொண்டன. தாங்கள் சமைத்ததை வைத்து அடுத்தநாள் காலை சாப்பிடலாம் என்பது அவர்கள் எண்ணம். பரமசிவம் குடும்பமோ அவர்களுடன் வந்தவர்களோ எவரும் வரிசைக்கு வரவில்லை. விநியோகம் முடிவடைந்த பின்பும் ஒரு தேயிலைப் பெட்டியில் சில பார்சல்கள் எஞ்சியிருந்தன. அவற்றையும் கொண்டு சென்று பிரதான வீதியில் விநியோகிக்கும்படி கூறிவிட்டு சுந்தரம் திரும்பவும் தங்கள் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

எனினும் வரும் போது ஒரு பார்சலைக் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தான். அவன் வந்து கொண்டிருக்கும் போது, “தம்பி”, என்ற ஒரு நடுங்கும் குரல் கேட்டுத்திரும்பிப் பார்த்தான். தலை பஞ்சடைந்த ஒரு மூதாட்டி அங்கு குந்தியிருந்தாள். அவன் அருகே போய், “என்னணை?” எனக் கேட்டான். “தம்பி, உங்கை எங்கையோ, சாப்பாடு குடுக்கிறாங்களாம். எனக்கும் ஒரு சொட்டு வேண்டித் தருவியே?, நான் சனத்துக்கை இடிபட்டு வேண்டிக்கொள்ளமாட்டன் மோனை!”, என்றாள் அவள்.

“அவங்கள் குடுத்திட்டுப் போட்டங்களணை.. இந்தா இதை சாப்பிடு”, என்றுவிட்டு சுந்தரம் தன் கையில் வைத்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினான். கிழவி நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, “உனக்கு?” எனக் கேட்டாள். பின்பு அவள், “தம்பி, எனக்கு இரண்டு பிடி தந்திட்டு நீ கொண்டு போய் சாப்பிடு மோனை”, என்றாள். இயலாத நிலையில் கடும் பசியில் தவித்த போதும் மற்றவர்கள் பற்றி அவள் கொண்டிருந்த அக்கறை அவனை மனம் நெகிழ வைத்தது.

அவன், “எனக்கு அங்கை சமைபடுதணை, நீ இப்ப சாப்பிட்டிட்டு மிச்சத்தை காலமைக்கு வைச்சு சாப்பிடு”, என்றுவிட்டு அவன் தனது இடத்திற்குப் புறப்பட்டான். அனைவரும் பார்வதியின் குழையல் சோற்றைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டனர். பகல் முழுவதும் வெயிலில் கொழுத்திய தரையில் படுப்பது பெரும் சிரமமாகவிருந்தது.

வெட்ட வெளியாதலால் காற்றும் கூட அவர்களுக்கு வேதனை கொடுத்துக்கொண்டிருந்தது. பரமசிவம் வானத்தையே பார்த்தபடி படுத்திருந்தார். வானம் நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது. நிலவும் எதுவுமே நடக்காதது போல பொழிந்து கொண்டிருந்தது. ஆனால் தள்ளாடி, பரப்புக்கடந்தான் பக்கமாக ‘பரா’ வெளிச்சங்கள் இடையிடையே எழும்பி இரவை பகலாக்கிக் கொண்ருந்தன.

அவர் சிவத்தை நினைத்துக்கொண்டார். அவன் எங்கோ ஒரு காவலரணிலோ, அல்லது முக்கிய இடத்திலோ தூக்கமின்றி துப்பாக்கி ஏந்தியவாறு எதிரியின் வரவை எதிர்பார்த்திருப்பான் என்றே அவர் நினைத்துக் கொண்டார். ஒரு பெரும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மீட்க தம்மை அர்ப்பணித்த போராளிகளில் தன் மகனும் ஒருவன் என நினைத்த போது அவர் நெஞ்சு பெருமையில் நிறைந்தது. ஆனால் அவனின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பதை நினைத்தபோது அவரால் கவலையடையாமல் இருக்கமுடியவில்லை.

நினைவுகளில் மிதந்தவாறே பரமசிவம் சற்று நேரத்தில் உறங்கிவிட்டார். அவரின் உடலும் மனமும் நன்றாகவே களைத்துவிட்டன. ஆனால் சுந்தரத்தால் தூங்க முடியவில்லை. விதவைத் தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு அழுது தாயிடம் அடிவாங்கிய சிறுவன், வெயில் தாங்காமல் வீதியில் மயங்கிவிழுந்த கிழவி, சோறு கேட்டு கெஞ்சிய மூதாட்டி, நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் வீதியோரங்களில் குந்தியிருந்த மக்கள் என அவனின் நினைவுகள் சோகமும் கோபமும் நிறைந்த ஒரு குட்டையாகக் குழம்பிக் கொண்டிருந்தது.

அவனின் மிளகாய்த் தோட்டமும், சிவப்பும் பச்சையுமாய் காய்ந்தும் குலுங்கிய மிளகாய்களும் நினைவுக்கு வந்தன. இனி அவற்றால் பயனில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவையனைத்தும் வாடி வரண்டு போயிருக்கும். மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை அவனிடமிருந்து முற்றாக ஓடியே போய்விட்டது.

இப்போது முன்னேறி வரும் இராணுவத்தை எப்படி விரட்டுவது என்பதே அவன் மனமெங்கும் வியாபித்துக் கிடந்தது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகப் புரண்டு மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24