Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 26

பரமசிவம்பிள்ளையின் குடும்பத்தினர் பெரியமடுவுக்கு வந்து சேர நேரம் காலை பதினொரு மணியைத் தாண்டிவிட்டது. பெரியமடுக்குளத்துக்கு அண்மையில்
நின்ற ஒரு கிளைவிட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார் பரமசிவம்.

மாடுகளை அவிழ்த்து குளத்தில் தண்ணீர் காட்டிவிட்டு புற்கள் நிறைந்த இடத்தில் மேயக் கொண்டு போய்விட்டார். நான்கைந்து ஊர்களின் மக்களை அந்த சிறிய கிராமத்தில் அடக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.

எனினும் அந்த ஊர் மக்கள் தங்கள் காணிகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்தனர். ஒவ்வொரு காணிகளிலும் பதினைந்து இருபது குடும்பங்கள் தங்க வேண்டியிருந்தது. பரமசிவத்துக்குத் தெரிந்தவர்கள் பலர் அந்த ஊரில் இருந்த போதிலும் அவர் எங்குமே போகவிரும்பவில்லை.

அந்த ஆலமரமே போதும் என அவருக்குப்பட்டது. பார்வதி சில பொருட்களை மட்டும் இறக்கி சமையல் வேலையை ஆரம்பித்தாள். அவள் சட்டிபானையைக் கொண்டு போய்க் குளத்தில் கழுவி விட்டுத் திரும்பிய போது பெருமாள் குடும்பமும் அங்கு வந்துவிட்டனர். பெருமாள் நடந்த களைப்பில் ஒரு ஓரமாய்ப் படுத்துவிட்டார்.

வேலாயியும் முத்தம்மாவும் சமையலுக்கு உதவி செய்யத் தொடங்கினர். சுந்தரம் விறகு தேடிக் கொண்டுவந்து போட்டான். சற்று நேரத்தில் முருகேசர், கதிரேசு, கடைக்கார முத்தையா, முருகரப்பு, சோமர் எனப் பலரும் வந்து சேர்ந்துவிட்டனர்.

பார்வதி அவர்களைக் கண்டதுமு எல்லோருக்கும் சேர்த்து அரசி போட்டாள். வேலாயி மரக்கறிகளை எடுத்து வெட்டி ஒரு சாம்பார் செய்யும் வகையில் தயார்ப்படுத்தினாள். முருகேசர் கூட்டத்தினர் ஆலமர நிழலில் ஒரு ஓரமாகப் போய் இருந்து கொண்டனர். எல்லோருமே வெகு விரைவில் பாலம்பிட்டிக்குத் திரும்பிவிட முடியும் என நம்பினர்.

ஆனால் அது எப்போ என்பதை ஊகிக்க முடியாமல் அவர்கள் தடுமாறினர். முருகேசர் ஒரு பெருமூச்சுடன் சொன்னார், “இரண்டு பிள்ளையள் வெளிநாட்டிலை உழைச்சுமென்ன கடைசியாய் ஆலமர நிழல் தான் கிடைச்சுது!”, என்றார்.

முருகர் ஒரு கேலிச்சிரிப்புடன், “ஒரு பொடியனையெண்டாலும் போராட விட்டிருந்தியெண்டால் சில வேளை ஊரை விட்டு ஓடி வேண்டி வந்திராது”, எனச் சொன்னார். முருகேசர் பாய்ந்தார், “இப்ப என்ரை ஒரு பொடியன் இல்லாதது தான் பெரிய குறை?” “உன்ரை ஒரு பொடியன் மாதிரி கன ஒரு பொடியள் சேர்ந்தால் ஒரு படையல்லே?” முருகேசர் எதுவுமே பேசவில்லை. 

முருகரப்புவை ஒரு முறை முறைத்துப் பார்த்தார். அந்த நேரத்தில் பரமசிவம், “அதை விடு முருகரப்பு, எப்ப வீட்டுக்கு திரும்புவம் எண்டு நீ நினைக்கிறாய்?” எனக் கேட்டார்.

“நீ இருந்து பார் ஒரு கிழமையிலை எங்கடை பொடியள் விளாசித் தள்ளி விடுவங்கள். பிறகு நாங்கள் ஊரிலை போய் நிம்மதியாய் இருக்கலாம்”. “ஒரு கிழமையிலை முழு மிளகாய்க் கொப்புகளையும் குரங்குகள் முறிச்சுப் போடும். பழங்களக் கிளியள் விடாது”, என்றார் பரமசிவம் ஏக்கத்துடன்.

இப்படியாக ஒவ்வொருவரும் தமது சோகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஒரு மணியளவில் சமையலும் முடியும் நிலையை நெருங்கிவிட்டது. அதைக் கவனித்து விட்ட சுந்தரம், “முத்தம்மா.. மேசைக் கத்தியை எடுத்து வா.. சாப்பிட, குளத்திலை போய் சாப்பிடத் தாமரை இலை வெட்டி வருவம்”, என்றான்.

அவளும் கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். சுந்தரம் நீருக்குள் இறங்க அவளும் பின்னால் போனாள். “பாவாடை நனையப் போகுது. மடிச்சுக் கட்டிப்போட்டு இறங்கு”, என்றான் சுந்தரம்.

அவள் கேலியாக முகத்தைச் சுளிச்சுவிட்டு, “என்ரை பாவாடையிலை அவ்வளவு அக்கறையே.. அது நனையட்டும்”, என்றாள்.

“அது பாவமில்லை. நீ பாவம் ஈரத்தோட திரிவாய் எண்டதுக்குச் சொன்னன்” “நான் ஈரப்பாவாடையோட நிண்டால் எனக்கு தடிமன் வராது” “அப்பிடியே.. தடிமன் வந்தால் நல்லது தானே!’ “நான் தடிமனிலை அவதிப்பட்டால் உங்களுக்கு நல்லதே?”, அவள் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.

“பின்னை.. நான் தொண்டையிலையும் நெத்தியிலையும் சித்தாலேப போட்டு விடலாமெல்ல?” “தொட விட மாட்டன்.

இப்ப இலையை வெட்டுங்கோ” “தடிமன் வரட்டும். தொடுறனோ இல்லையோ பார்”, எனச் சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டு அவன் இலைகளை வெட்ட ஆரம்பித்தான்.

அவள் வாங்கி தன் கைகளில் அடுக்கிக் கொண்டாள். இருவரும் திரும்பி வந்த போது பார்வதி சோற்றை ஒரு பெரிய சட்டியில் போட்டு சாம்பாரை ஊற்றி நன்றாகப் பிசைந்து கொண்டிருந்தாள். சுந்தரம் இலைகளைக் கொண்டு போய் ஒவ்வொருவரிடமும் கொடுக்க அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டு பார்வதியைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். அவள் உருண்டைகளாகத் திரட்டி ஒவ்வொரு இலையிலும் வைத்தாள்.

முருகர், “இரவைக்கும் அன்னதாம் இருக்குமோ?”, எனக் கேட்டார். “அரிசி முடியுமட்டும் இருக்கும்.. அதுக்குப் பிறகு வேறை வழி பாப்பம்” என்றார் பரமசிவம்.

“அரிசி முடிய முந்தி ஊருக்குப் போடுவம்”, என்றார் முருகேசர் மிகுந்த நம்பிக்கையுடன்.

அவர்கள் எவருமே காலையில் எதுவுமே சாப்பிடவில்லை. பார்வதியின் சோற்றுக் குழையலை உண்டு முடித்ததும் அவர்களையறியாமலே உடலை ஒருவித சோர்வு பற்றிக் கொண்டது. பரமசிவம் தான் கொண்டுவந்த பாய்களை எடுத்து தன் நண்பர்களிடம் கொடுத்தார்.

எல்லோருமே ஆலமரச் சருகுகளைத் தடிகளால் தட்டி ஒதுக்கிவிட்டு பாய்களை விரித்துப் படுத்துக் கொண்டனர். ஆலமர நிழலும், குளத்து நீரை வருடி வீசிய மெல்லிய குளிர்மையான காற்றும் அந்த இடம்பெயர்ந்த அவலத்திற்குள்ளும் ஒரு சுகத்தைக் கொடுத்தன.

சிறிது நேரத்தில் அனைவரும் கண்ணயர்ந்து விட்டனர். சாப்பிட்டு முடிந்த சுந்தரம் தாயிடம், “அம்மா.. றேடியோவை விட்டிட்டு வந்திட்டன். போய் எடுத்து வரட்டே?”, எனக் கேட்டான்.

“அம்மா.. நான் கவனமாய்ப் பாத்துப் போவன்.. றேடியோ இல்லாட்டில் இருண்டது விடிஞ்சது தெரியாது”, என்றான் சுந்தரம்.

பார்வதி சற்றும் கூட மனமின்றியே அவனுக்கு அவனின் பிடிவாதம் காரணமாக விடை கொடுத்தாள். முத்தம்மாவும் கூட அவன் போவதை விரும்பவில்லை.

ஆனால் அவள் தடுக்க முயன்றாள் மற்றவர்கள் தங்கள் காதலைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் அவள் எதுவுமே பேசவில்லை. சுந்தரம் சென்று ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே பாலம்பிட்டிப் பக்கமிருந்து பெரும் வெடியோசை எழுந்தது.

அந்தப் பெரிய ஆலமரத்தையே அந்த ஒலி அதிர வைத்தது போல் தோன்றியது. கிபிர் விமானம் ஒன்று காட்டு மரங்களுக்கு மேலால் சீறிக்கொண்டு பேரிரைச்சலுடன் வானை நோக்கி மேலெழுந்தது. மறுபுறத்திலிருந்து வந்த இன்னொரு விமானமும் குண்டுகளைத் தள்ளியது. மேலெழுந்த விமானங்கள் மீண்டும் ஒரு சுற்று வந்து குண்டகளைத் தள்ளிவிட்டு வானில் மறைந்தன.

நல்ல தூக்கத்திலிருந்த பரமசிவமும் நண்பர்களும் முதல் குண்டோசையிலேயே திடுக்குற்று விழித்துவிட்டனர். அவர்கள் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே விமானங்கள் தங்கள் வெறியாட்டத்தை நடத்தி முடித்துவிட்டு போய்விட்டன. காட்டுமரங்களுக்கு மேலால் கரும்புகை மண்டலங்கள் எழுந்து வானில் பரவின. முருகரப்பு அவற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னார்,

“பாலம்பிட்டிப் பக்கம் தான் அடிச்சிருக்கிறாங்கள்” பார்வதி பதைபதைப்புடன் ஓடி வந்தாள்.

“ஐயோ.. தம்பியல்லே.. றேடியோவ எடுத்துவரவெண்டு அங்கை போட்டான்” அவள் அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பாலம்பிட்டிப் பக்கம் தொடர் எறிகணைகளின் அதிர்வுகள் கேட்க ஆரம்பித்தன.

பார்வதி நடுங்க ஆரம்பித்தாள். பரமசிவமும் நண்பர்களும் குளக்கட்டில் ஏறி நின்று பாலம்பிட்டிப் பக்கம் பாய்ந்தனர். எறிகணை அதிர்வுகளை விட வேறு எதையுமே விளங்கிக் கொள்ள முடியவில்லை.

முருகரப்பு நன்றாகக் காதைக் கொடுத்துக் கேட்டுவிட்டு, “ரண்டு பக்கமிருந்தும் செல் போகுது.. ஆமி முன்னேறப் பாக்கிறான் போல கிடக்குது”, என்றார்.

முருகேசர் பதட்டத்துடன், “இஞ்சையிருந்தும் இடம்பெயர வேண்டி வருமோ?”, எனக்கேட்டார்.

“பாப்பம்.. எப்பிடியெண்டாலும் எங்கடை பெடியள் விடாங்கள்”, என்றார் முத்தையா.

பரமசிவத்தால் அவர்களின் உரையாடலில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரின் மனதில் சுந்தரம் பற்றிய பயமே மேலோங்கியிருந்தது. பரமசிவம் முருகரிடம்,

“அப்பு.. நாங்கள் இரண்டு பேரும் போய் இவன் சுந்தரத்தைப் பாத்து வருவமே?”, எனக் கேட்டார்.

“விசர் கதை கதைக்கிறாய்.. செல் மழை போலை பொழியுது.. உதுக்கை போனால் மேனைக் காணமாட்டாய். யமனிட்ட தான் போவாய்” “மனம் கேக்குதில்லையப்பு” “அவன் எங்கையெண்டாலும் பங்கருக்கை இருந்திட்டு வருவன். நீ பதறாதை!”, என ஆறுதல் சொன்னார் முருகப்பர்.

எறிகணை வீச்சு ஐந்து மணியளவில் ஓய்வுக்கு வந்தது. பரமசிவமும் முருகரும் சுந்தரத்தைத் தேடிப் புறப்பட பாலம்பிட்டிப் பாதையில் இறங்கிய போது தூரத்தில் சுந்தரம் வேகமாகச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

அவனின் மேற்சட்டை சாரமெல்லாம் இரத்தமயமாகியிருந்தது. முருகர் கேட்டார், “என்னடா தம்பி காயமே?” களைப்பு அவனை எதுவுமே பேசவிடவில்லை.

பரிதாபமாக அவன் முருகரின் முகத்தைப் பார்த்தான். “சரி.. சரி.. வா.. கொம்மாவடிக்குப் போவம்”, எனச் சொல்லியவாறே பரமசிவம் முன்னால் நடந்தார்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24