Breaking News

மங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக சென்றிருந்த போது, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே கருத்து வெளியிட்ட தொனி, வழக்கமாக உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தாத மங்கள சமரவீரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யாழ். படைகளின் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் முன்னிலையிலேயே ஒரு டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே கருத்து வெளியிடத் தூண்டப்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை. ஆனால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதுகுறித்து மேலதிக நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும், இராணுவத்தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அவரை படையினருக்கு கட்டளை பிறப்பிக்க முடியாத – காலாட்படைப் பணிப்பாளர் நாயகமாக கொழும்புக்கு இடமாற்றம் செய்தது.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே முன்னர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகப் பதவி வகித்த போது, அவரது இராணுவப் பாதுகாப்பு அணியின் தலைவராக இருந்தவர்.அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் இந்த நடவடிக்கை, இராணுவத்தின் விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐதேக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தவை, எதிரணியின் எதிர்ப்புகளைத் தாண்டி, போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் ஒரு சமிக்ஞையாக பார்க்கப்படுவதாகவும், அவரை வைத்து போர்க்குற்ற விசாரணைக்கான எதிர்ப்புகளைத் தோற்கடிக்க முனைவதாகவும், அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.