அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு - THAMILKINGDOM அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு - THAMILKINGDOM
 • Latest News

  அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

  வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடந்த சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

  இந்த சந்திப்பின்போது முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.


  இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தகவல் வெளியிடுகையில்,

  “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் வரவேற்கத்தக்க விடயம்.

  போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தி மட்டத்திலும் பின்னடைவுகளை சந்தித்து வந்துள்ளனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது பகுதிகளை துரித கதியில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

  எனினும் அபிவிருத்தி என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை அனுமதிக்க முடியாது.

  எமது மக்கள் இப்போதும் கூட தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் உள்ளது.

  இந்தநிலையில்முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனை நாம் அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

  அதேபோல வடக்கில் விமான நிலையங்கள் அமைப்பதும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும். ஆனால் அதன்மூலம் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதனையும் நாம் அரசாங்கத் தரப்பினரிடம் தெரிவித்துள்ளோம்.

  எமது மக்களின் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் எமக்குத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top