Breaking News

கச்சதீவு வருடாந்த திருவிழா நாளை: மீன்பிடிக்க தற்காலிக தடை



கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு கச்சதீவு மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதனை கண்டித்து இந்திய மீனவர்கள் கச்சதீவு திருவிழாவினை பகிஷ்கரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்முறை அந்தோனியார் ஆலய திருவிழாவில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர் வரை கலந்துக் கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.

திருவிழாவில் 3 ஆயிரத்து 800 இந்திய யாத்திரிகர்கள் கலந்த கொள்ளவுள்ள நிலையில் அவர்கள் இலங்கையின் சர்வதேச கடல் எல்லை வரை இந்திய கடற்படையினரின் உதவியுடன் அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கச்சதீவு நோக்கி இலங்கை கடற்படையினரால் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாத்திரிகர்களின் நலன் கருதி உயிர் காக்கும் குழு மற்றும் மருத்துவ குழுக்களும் கச்சதீவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.