Breaking News

சுமந்திரனின் கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்து பிழையானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முழு உலகமும் இலங்கை நீதிமன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

சிங்கள ஜூரிகளினால் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தினால் வழக்குத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என சுமந்திரன் கூறியிருந்தார்.

நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் கொலை வழக்கு சந்தேக நபர்கள் நீதிமன்றின் எதிரில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டுமா அல்லது ஜூரிகளினால் விசாரணை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க முடியும்.

இவ்வாறான பின்னணியில் சிங்கள ஜூரிகள் பங்கேற்றதினால் வழக்கு விசாரணை தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுவது நியாயமாகுமா? இவ்வாறான கருத்துக்களினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படும்.

மேலும், இவ்வாறான கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.