Breaking News

 ‘மஹிந்த வந்தால் பிரச்சினை வரும்’

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் பிரச்சினை வரும்” என்று, மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்ச​ர் பழனி திகாம்பரம், நேற்று (28) கூறினார். 


மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது,   “தேசிய அரசாங்கமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தொடர வேண்டும். மைத்திரபால சிறிசேன - ஜனாதிபதியாகிய பின்னர், பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது. 

இதனை தேசிய அரசாங்கமாக அமைப்பதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்து, அதனை நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கின்ற போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.க மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.   இந்த அரசாங்கத்தைக் குழப்புவதற்கு, பல சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஐ.தே.க, தனி அரசாங்கமொன்றை அமைப்பது பெரிய விடயமல்ல. எங்களிடம் 105 ஆசனங்கள் உள்ளன. இன்னும் 7 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது. 

அந்த ஆசனங்கள் கிடைத்தால், தனி அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம். எங்களுடைய குறிக்கோள், தேசிய அரசாங்கத்​தை அமைப்பதும் நாட்டு மக்களுக்கு சேவை புரிவ​துமேயாகும்” என, அவர் மேலும் கூறினார்.