Breaking News

“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த



அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவித்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இவை மக்களின் விவசாயக் காணிகள். இவற்றை வெளிநாடுகளுக்கோ, வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ விற்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

நாங்கள் சீனா, இந்தியா அல்லது அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து முதலீடுகள் செய்யப்படுவதை எதிர்க்கவில்லை. ஆனால் காணிகளை அவர்களுக்கு கொடுப்பதையே எதிர்க்கிறோம்.

கடந்த மாதம் ஒரு வாரகாலப் பயணமாக சீனா சென்றிருந்த போது, சீன அதிகாரிகளிடம் இதனைத் தெளிவாக கூறினேன்.

15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதையிட்டு கவலை கொள்கிறோம்.

இங்கு ஒரு கைத்தொழில் பூங்கா வரவுள்ளதையிட்டு எமக்கு கவலையில்லை. ஆனால், காணிகள் பெருமளவில் வழங்கப்படுவதை நாம் விரும்பவில்லை.15 ஆயிரம் ஏக்கர் என்பது மிகையானது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் நாம் 750 ஏக்கர் காணிகளை தருவதாக சீனாவுக்கு கூறியிருந்தோம். அப்போது அவர்கள் 1000 ஏக்கர் காணிகளைத் தருமாறு கேட்டனர். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.