Breaking News

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஆயுத தளபாடங்களை வழங்கின.

அதேவேளை, இந்தியா ஆயுதங்களை வழங்காவிடினும், படையினருக்கான பயிற்சிகளை வழங்கியது.

வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படும் சிறிலங்காப் படையினரில் 80 வீதமானோருக்கு இந்தியாவே பயிற்சி அளித்தது. தமிழ்நாட்டில் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவினால் ஆயுதங்களை வழங்க முடியவில்லை.

எனினும், எமது அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பல வழிகளில் இந்தியா எமக்கு உதவியது.

சிறிலங்கா இராணுவத்தின் பிரதானமாக சீன ஆயுதங்களே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆயுதங்களுக்கு நாம் சீனாவையே நம்பியிருந்தோம்.

பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரேன், போன்ற நாடுகளும் எமக்கு ஆயுத தளபாடங்களை வழங்கின.

கடற்படைக்கான டோறா படகுகளையும், கிபிர் போர் விமானங்களையும், இஸ்ரேல் வழங்கியது.

சண்டை வாகனங்களையும், மிக் போர் விமானங்களையும் உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வழங்கின” என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.