Breaking News

களுத்துறை படகு விபத்தில் 29 பேரது சடலங்கள் மீட்பு



களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களைத் தேடும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளன.

தேவாலய திருவிழாவிற்காக திருச்சொரூபத்தி சுமந்து பேருவளையிலிருந்து சென்ற படகு நேற்று முன்தினம் கட்டுகுருந்தை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது.

இதன்போது படகில் பயணித்தவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

15 கடற்படை சுழியோடிகள் இரண்டு டோரா படகுகள் உள்ளிட்ட பெருந்தொகையான கடற்படை வீரர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் சிறுவர், பெண்கள் உட்பட 40 பேர் வரை பயணித்திருப்பதாக விசாரணைகளில் அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறு பயணித்தவர்களில் ஒருவரேனும் உயிர் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்றும் ஆரம்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 29 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த சடலங்கள் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை குறித்த படகு விபத்துக்குள்ளாகியபோது எத்தனை பேர் அதில் பயணித்தனர் என்ற தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்படை தெரிவிக்கின்றது.