Breaking News

பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா



போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருந்ததா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்தது என்றும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கோத்தாபய ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்,“அத்தகைய திட்டம் ஒன்று இருந்ததாக என்னால் உறுதியாக கூற முடியாது.

ஆனால், பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா விரும்புவதாக, அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் என்னிடம் கூறினார்.

எனினும். அவர் முன்வைத்தது பிரபாகரனையோ, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையோ மீட்பதற்கான திட்டம் அல்ல. அது ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்தது” என்று பதிலளித்தார்.