Breaking News

சிறப்புப் பொறிமுறைக்குத் தலைமையேற்கத் தயார்- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா



அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, அதனை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைக்கு தலைமையேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் போது, அதனை மேற்கொள்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பொறிமுறை வரையப்பட வேண்டும் என்று இந்தக் கலந்துரையாடலின் போது நான் கூறினேன்.

சிறிலங்கா அதிபரின் நோக்கங்களை புரிந்து கொள்கிறேன். அதனை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன். நாட்டுக்குத் தான் நான் முதலிடம் கொடுப்பேன்.

இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கும்படியோ, பாதுகாப்பு பிரிவுக்கு தலைமையேற்கும்படியோ சிறிலங்கா அதிபர் என்னிடம் கேட்கவில்லை.

அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது அதனைச் சீர்படுத்தும் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்குமாறு தான் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டார்.

தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் நலன்களின் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் சக்திகளின் நலன்களுக்கான செயற்படக் கூடாது.

தொழிற்சங்கங்களின் உரிமைகளை அரசாங்கம் ஒருபோதும் நசுக்காது. நாட்டின் ஜனநாயக சூழலைப் பாதுகாக்கும் வகையில், எமது கடப்பாடுகளை முன்னெடுப்போம். இராணுவ ஆட்சிக்கு நாம் செல்லமாட்டோம். அது தேவையும் இல்லை. கடந்த ஆட்சியில் இருந்தது போன்ற அந்த நிலைமை, பற்றி நாங்கள் சிந்திக்கவுமில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.