கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் - THAMILKINGDOM கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம்  “கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வெகு விரைவில், கேப்பாப்புலவுக் காணிகள் விடுவிக்கப்படும். ஆனால், அது எப்போது எனும் காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

  கேப்பாப்புலவு மக்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் முன்பாக, தமது சொந்த நிலத்தைக் கோரி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம், நேற்று 117ஆவது நாளாகத் தொடர்ந்தது.

  இந்நிலையில், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், சமகால அரசியல் நிலை தொடர்பிலான மக்களுடனான கலந்துரையாடலொன்று, சுமந்திரன் எம்.பி தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.
  இதன்போது, கேப்பாப்புலவு காணி விவகாரம் தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  இது குறித்து, தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது,

  “கேப்பாப்புலவுக்கு நான் சென்றிருந்த போதும், பின்னர் சம்பந்தன் ஜயா சென்றிருந்தபோதும், கேப்பாப்புலவில் உள்ள 70.5 ஏக்கர் காணி தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்படும் எனவும் அந்த 70.5 ஏக்கரை விடுவிக்க முடியாதென்றும், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி உறுதியாக எம்மிடம் கூறினார்.

  இதுதொடர்பில், இராணுவத் தளபதியுடன் சம்பந்தன் ஐயா பேசிய போது, மேற்படி 70 ஏக்கரையும் விடுவிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதற்கு, ஜனாதிபதியின் வார்த்தை வேண்டும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

  நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று (24), ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர், நானும் சம்பந்தன் ஜயாவும், ஜனாதிபதியைத் தனியாகச் சந்தித்து, கேப்பாப்புலவு தொடர்பில் பேசியபோது, இராணுவத் தளபதிக்கு, தான் கட்டளையிடுவதாகக் கூறினார். அதன்படி அவர் அந்தக் கட்டளையைப் பிறப்பித்திருப்பார்.

  ஆகவே, வெகு விரைவில் கேப்பாப்புலவு காணி விடுவிக்கப்படும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டதென்பதை, என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், அது எவ்வளவு காலத்தில் நிறைவேற்றப்படும் என்று, வாக்குறுதியளிக்க என்னால் முடியாது. காரணம், அப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டடங்கள் மற்றும் அவர்களுக்கான வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  அதனால், அவற்றை அகற்றிக்கொண்டு வெளியேற அவர்கள் எவ்வளவு காலம் எடுப்பார்கள் என்று கூற முடியாது. இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்போம்.

  ஏனென்றால், ஏனைய இடங்களிலும், குறிப்பாக முள்ளிக்குளம் போன்ற இடங்களிலும் சம்பூரிலும் கூட, இராணுவத்தினர் வெளியேற காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், முடிவெடுத்ததன் பிரகாரம் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும், கேப்பாப்புலவின் முழுக் காணியும் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top