மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை - THAMILKINGDOM மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை - THAMILKINGDOM
 • Latest News

  மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  பாகிஸ்தான் அரசின் அழைப்பின் பேரில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த குழுவினர் கடந்த 19 ஆம் நாள் பாகிஸ்தான் சென்றிருந்தனர்.

  இந்தக் குழுவில் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, உதித் லொக்குபண்டார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

  பாகிஸ்தான் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்ச மேற்குலக நாடுகளைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

  2009இல் விடுதலைப் புலிகள் வன்னியின் கிழப்பு முனையில் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அவர்களை மீட்க முனைந்தவர்கள் இப்போது தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க கோருகின்றனர்.

  உயர் இலக்குகள் மீதான தாக்குதல்களை அடுத்து, மேற்குலகத் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

  அத்துடன், மேற்குலகம் இரட்டை வேடம் போடுவதாகவும், போரின் போதும் போருக்குப் பின்னரும், சிறிலங்காவை இலக்கு வைத்ததாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  மகிந்த ராஜபக்ச குழுவினர், பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், மற்றும் பல மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் சந்தித்திருந்தனர்.

  பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஒன்றை நிகழ்த்தியிருந்த மகிந்த ராஜபக்ச, இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா விடுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், ஊடகங்கள் பங்கு பற்றிய கருத்தரங்கு ஒன்றிலும் பங்கேற்றிருந்தார்.

  இதன்போது தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்காக பூகோள முயற்சிகள் தேவைப்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

  அதேவேளை மகிந்த ராஜபக்சவின் பயணத்தை தடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டதாக கூட்டு எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

  நட்பு நாடு ஒன்றின் அழைப்பின் பேரில், முன்னாள் அதிபர் ஒருவர் மேற்கொள்ளவிருந்த பயணத்தை தடுக்கும் முயற்சிகள் இதற்கு முன்னொரு போதும் மேற்கொள்ளப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top