Breaking News

மஹிந்த ஆட்சியில் சமுர்த்தி திட்டம் முறையாக கையாளப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி திட்டம் முறையாக அமுல்படுத்தப்படாத கார ணத்தால், வட்டி வழங்குநர்களின் தொகை அதிகரித்ததாக சமூர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 23/2 கீழ் நேற்றைய தினம் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பியிருந்த கேள்விக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது, சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென தெரிவித்த அமைச்சர் எஸ்.பி, தற்போது 14,025,661 பேர் சமுர்த்தியின் மூலம் பயனடைவதாகவும், இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்பட மாட்டாதென மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, கடந்த ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி கடன் உள்ளிட்ட கொடுப்பனவுகள் முறையாக பகிர்ந்தளிக்கப்படாத காரணத்தால், வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், தற்போதைய அரசாங்கமானது உடனடி கடன், வாராந்த, மாதாந்த கடன்களை வழங்குவதன் மூலம் சமுர்த்தி பயனாளிகளை ஊக்குவிக்கவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. மேலும் தெரிவித்தார். 

அத்தோடு, கடந்த ஆட்சிக்காலத்தில் 12 பில்லியன் ரூபாய்களே சமுர்த்திக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 42 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.