பூகோளவாதம் புதிய தேசிவாதம் நூல்வெளியீட்டுவிழா(காணொளி) - THAMILKINGDOM பூகோளவாதம் புதிய தேசிவாதம் நூல்வெளியீட்டுவிழா(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  பூகோளவாதம் புதிய தேசிவாதம் நூல்வெளியீட்டுவிழா(காணொளி)

  யாழ்/வீரசிங்கம் மண்டபத்தில் திரு மு.திருநாவுக்கரசுவின்
  பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது.

  இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து எழுத்தாளர் திரு. செயப்பிரகாசம் அவர்களும். திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் . மற்றும் பல கல்விமான்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

  இதில் கலந்துகொண்டு உரையாற்றிய க.வி.விக்கினேஸ்வரன் ,சட்டத்துறை தலைவர் குமரவடிவேல் குருபரன் மற்றும் நிலாந்தன் ஆகியோர் ஆற்றிய உரைகள் உங்களுக்காக.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதிய தேசிய வாதம் தமிழீழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

  ஒரு நூற்றாண்டிற்கும் மேலாய் தமிழ் மக்களின் வரலாறானது தொடர் தோல்விகளின் வரலாய் நீண்டு செல்கிறது. உன்னதமான இலட்சியம், நிகரற்ற வீரம், அளவற்ற தியாகம் என்பன ஒருபுறம் காணப்பட்ட போதிலும், மறுபுறம் மலையென குவியும் தோல்விகளை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாய் சுமக்கும் மக்களாய் தமிழர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து தமிழினம் சிங்கள இனத்திடம் தோல்வியடைந்து மேலும் மேலும் சுருங்கிச் செல்கிறது.  இந்நிலையில் வெற்றிக்கான வழி என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பும் இந்நூல் வெற்றிபெறுவதற்கு பொருத்தமான கொள்கையையும் அதற்கு பொருத்தமான நடைமுறையையும் அறிவியல்பூர்வமாக தேடிநிற்கின்றது.

  இரண்டு இலட்சம் ஆண்டுகால நவீன மனிதகுல வரலாறு, 5000 ஆண்டுகால அரச வரலாறு, 3000 ஆண்டுகால சிந்தனை வரலாறு என்பனவற்றிற்கு ஊடாக உலகளாவிய அரசியல் – பொருளாதார – பண்பாட்டு அறிவைப் பிழிந்து அதன் வாயிலாக ஈழத் தமிழரின் விடுதலைக்கு வழிகாண முயற்சிக்கின்றது இந்நூல்.

  எல்லாவிதமான சோடனை செய்யப்பட்ட நீதி, தர்ம போதனைகளுக்கும் அப்பால் நடைமுறையில் இரத்தமும், தசையுமான படுகொலை அரசியலை இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது. மனவிருப்பங்களுக்கும், தூய இலட்சியங்களுக்கும் அப்பால் நடைமுறை சார்ந்த யதார்த்தபூர்வமான அரசியலுக்குகேற்ப அறிவார்ந்த தளத்தில் நின்று நெளிவு சுழிவான இராஜதந்திர அணுகுமுறையுடன் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை வகுக்க இந்நூல் முயல்கிறது.

  எத்தகைய கோட்பாடும், இலட்சியமும், தர்ம போதனைகளும் நடைமுறையால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறும் இந்நூல் வரலாற்றை அதற்கான ஆய்வுகூடமாக விபரித்துச் செல்கிறது.

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உறைந்து போயிருக்கும் வரலாற்றிக்கு உயிரூட்டி அதனை நிகழ்காலத்தோடு இணைத்து நடைபோட வைக்கிறது. இத்தகைய இறந்த காலத்தினதும், நிகழ்காலத்தினதும் சங்கமத்துடன் எதிர்காலத்திற்கான ஒளியையும், வழியையும் தேடி ஈழத் தமிழரின் விடுதலைக்கான பாதையை வகுக்க முற்படுகிறது.

  உலக வரலாற்றில் நவீன தேசியவாதம் முடிந்து புதிய தேசியவாதம் பிறந்துவிட்டது என்பதை இந்நூல் அடையாளங்கண்டு பிரகடனப்படுத்துகிறது. தமிழீழ புதிய தேசியவாதத்தை வடிவமைத்து முன்னேறுமாறு தமிழ் மக்களை கோரி நிற்கின்றது.

  புதிய தேசியவாத பரிமாணத்துடன் ஈழத் தமிழர் தம்மை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறும் இந்நூல் ஈழத் தமிழரின் விடுதலைக்கான சாத்தியக் கூறுகள் சர்வதேச அரசியல் சூழலில் தென்படுவதை சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய சாத்தியக்கூறுகளை புத்திபூர்வமாக பயன்படுத்தி விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

  இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே புவிப்பரப்பில் இனப்படுகொலை ஆரம்பமாகி பல்வேறு பகுதிகளிலும் அது அரங்கேறியுள்ளதை வேதனையுடன் பதிவு செய்யும் இந்நூல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்தும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையில் இருந்தும் விடுதலை பெறுவதற்குப் பொருத்தமான வகையில் ஈழத் தமிழர்கள் தமக்கான புதிய தேசியவாதத்தை கட்டமைப்பு செய்ய வேண்டுமென்று கோருகிறது. அதற்கு பொருத்தமான வகையில் நடைமுறை சார்ந்த உலக அரசியலை அது விபரிக்கிறது.

  எந்தொரு கோட்பாடும், தத்துவமும், இலட்சியமும் நடைமுறையினாற்தான் உயிர்பெற முடியும் என்று கூறும் இந்நூல் நடைமுறைக்குப் பொருந்தாத அனைத்து கோட்பாடுகளையும், தத்துவங்களையும் ஏட்டுச்சுரக்காய்யென வர்ணிக்கிறது.

  கூடவே நடைமுறைக்குப் பொருந்தாத எத்தகைய இலட்சியவாதங்களும், தூய்மைவாதங்களும் இறுதி அர்த்தத்தில் சாத்தானின் சேவகர்களாகவே விளங்க முடியும் என்ற துயரத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

  பலம்பொருந்திய எதிரிக்கு எதிராக குறைந்தபட்ச உடன்பாடுகளின் மத்தியில் கூடியபட்ச ஐக்கியத்தை இந்நூல் வற்புறுத்தி நிற்கின்றது. அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் ஏகாதிபத்திய அரசுகளென வன்மையாக கண்டித்து நின்ற சோவியத் ரஷ்யாவும், சீன கம்யூனிஸ்டுக்களும் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரின் இனப்படுகொலை அரசியலுக்கு எதிராக அமெரிக்காவுடனும், பிரித்தானியாவுடனும் கூட்டுச் சேர்ந்து தோளோடு தோள் கொடுத்துப் போராடின.

  அப்படியே பிரித்தானிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்திய மகாத்மா காந்தி இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது பிரித்தானியாவுடன் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலையாளி ஹிட்லருக்கும், முசோலினிக்கும் மற்றும் யப்பானிய ஆதிக்கத்திற்கும் எதிராக போராடினார்.

  சூரியஒளியை வேண்டி நிற்கின்றோம் என்பதற்காக இரவில் விளக்கொளியை நிராகரிக்க முடியாது. விடிவாமளவும் விளக்கென குறைந்தபட்ச அடிப்படையிலாவது கூடியபட்ச ஐக்கியத்தை கட்டியெழுப்பி பலத்தைத் தேடவேண்டும்.

  தனிப்பட்ட கோபதாபங்கள், விருப்பு – வெறுப்புக்களுக்கு அப்பால், மனோரம்மிய விருப்பங்களுக்கு அப்பால், கற்பனாவாத ரம்மியங்சகளுக்கு அப்பால் அறிவார்ந்த அரசியல் பார்வையுடன் வெற்றிக்கு வழிதேடவல்ல வகையில் சர்வதேச அரசியலில் காணப்படும் சாத்தியக்கூறுகளை இந்நூல் அறிவார்ந்த தளத்தில் நின்று விபரித்துச் செல்கிறது.

  இதையே பூகோளவாதம் புதிய தேசிய வாதம் கூறுகிறது

  நூல் :- பூகோளவாதம் புதிய தேசியவாதம்

  ஆசிரியர் :’ மு.திருநாவுக்கரசு

  பக்கங்கள் :- 560

  வெளியீடு :- தமிழாய்வு மையம் : இலங்கை – பிரித்தானியா
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பூகோளவாதம் புதிய தேசிவாதம் நூல்வெளியீட்டுவிழா(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top