Breaking News

பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று (02) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறையின் அளவு குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு சுமார் 350,000 அரசு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் நடவடிக்கைகள் யாவும் நிறைவடைய உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது இறுதி பொதுக் கூட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.

இதன் அடிப்படையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டையிலும், ஐக்கிய தேசியக் கட்சி மருதானயிலும், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு, அலுத்கட பகுதியிலும் தமது இறுதி பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

மேலும், அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இறுதி பொதுக் கூட்டம் மாளிகாவத்த பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.