Breaking News

சூரியனுக்கு தொடர்ந்து 60 நாட்கள் லீவா? ஒரு நகரம் மட்டும் இருளில் மூழ்கும் அபாயம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் மட்டும் தொடர்ந்து 60 நாட்களுக்கு சூரிய உதயமே இருக்காது என்ற தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் பூமியில் ஒரு நாள் சூரிய வெப்பம் இல்லாவிட்டால்கூட இயற்கையின் இயக்கத்தில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டு விடும். அப்படி இருக்கும்போது ஒரு நகரத்தில் தொடர்ந்து 60 நாட்கள் வரையிலும் சூரிய ஒளி இல்லாவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விதான் தற்போது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அலாஸ்காவின் பாரோ என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் நகரில்தான் இந்நிகழ்வு நடக்க இருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 22 வரை அந்நகரில் சூரிய உதயமே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். காரணம் பூமி அச்சின் சாய்வின் காரணமாக இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது எனவும் அங்கு பகலே இல்லாமல் இரவு மட்டுமே நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.  
ஒரு நகரத்தில் தொடர்ந்து அதுவும் 60 நாட்களுக்கு இருள் மட்டுமே சூழ்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அந்நகரத்து மக்கள் ஆச்சர்யத்துடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இது பாரா நகரத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு என்றால் முழுவதும் இருள் சூழ்ந்தது போல இல்லாமல் பகல் நேரத்தில் சூரிய அஸ்தமனம் அல்லது உதயத்தின்போது இருக்கும் மெல்லிய வெளிச்சம் போல சூரிய வெளிச்சம் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள மற்ற இடங்களிலும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். பூமியின் சாய்வானது சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேலே தெரியாதபடி செய்கிறது. மேலும் இந்நிகழ்விற்கு துருவ இரவு என்றும் துருவ வட்டத்திற்கும் எங்கு வேண்டுமானாலும் இந்நிகழ்வு நடக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு பாரா நகரில் முழு இருளுடன் துருவ இரவு நிகழ இருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விலங்கு மற்றும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.