Breaking News

முத்தரப்பு இழு விசைகளுக்குள் சுழித்துக்கொண்டோடும் இலங்கை?

 


கடந்த சில வாரங்களாக நாட்டில் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் மேற்கு,ஐநா,இந்தியா போன்ற தரப்புக்களை நோக்கிய வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களைச் செய்யத்  தொடங்கியிருப்பது தெரிகிறது.

முதலாவதாக,ஐநாவை நோக்கி  அரசாங்கம் சுதாரிக்கத்  தொடங்கியிருப்பதன்  விளைவுகளை அண்மையில் நடந்து முடிந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியனின் தூதுக்குழு கடந்த 5ஆம் திகதி வரை இலங்கையில் நின்றது. இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்காது என்ற ஊகம் கொழும்பு  ஊடக வட்டாரங்களில் காணப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் சற்றுப்பின்னாக இந்திய வெளியுறவுச் செயலரின் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று நாட்டுக்கு விஜயம் செய்தது.அக்குழு வருகை தருவதற்கு முன்னதாக கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை    நிர்மாணிக்கும் பணிகளை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க இலங்கை ஒத்துக்கொண்டது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையா அல்லது மேற்கு முனையத்தையா இந்தியத் தரப்புக்கு கொடுப்பது என்பதில் கடந்த 20மாதங்களாக நிலவி வந்த இழுபறி கடந்தவாரம் முடிவுக்கு வந்தது.அதுபோலவே திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் பொறுத்தும் இந்தியாவுக்கு அனுகூலமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.இது மூன்றாவது.

நாலாவதாக,கெரவெலப்பிட்டிய மின் நிலையத்தின் நாற்பது வீத பங்குகளை  அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த உடன்படிக்கை ரகசியமான முறையில் செய்யப்பட்டிருக்கிறது. ஐந்தாவதாக, கொழும்பில் கோட்டை பகுதியில் தலைநகரின் இதயம் என்று அழைக்கதக்க பகுதியில் காணிகளை ஓமன் நாட்டுக்கு தருவதற்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.அண்மையில் ஓமான் நாட்டுக்கூடாகவே அமெரிக்கா இலங்கைக்கு ஒரு தொகுதி கடன் உதவிகளை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே அந்தக் காணிகள் அமெரிக்காவுக்கா ஓமானுக்கா என்ற கேள்வி உண்டு. ஆறாவதாக,covid-19க்கு எதிரான நடவடிக்கைகளில் அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அண்மை மாதங்களாக அதிகரித்து உதவிகளை செய்து வருகின்றன. ஏழாவதாக,அரசாங்கம் மேற்கத்திய நிதிமுகவர் அமைப்புகளான உலக வங்கி,பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிடம் கடன் வாங்க தொடங்கியுள்ளது. இவ்வாறு மேற்படி அமைப்புகளிடம் கடன் பெறுவது என்பது இறுதியிலும் இறுதியாக அந்த அமைப்புகளின் நிபந்தனைகளுக்கு கீழ்படிவதுதான். அது ஒருவிதத்தில் மேற்கத்தைய கடன் பொறிக்குள் வலிந்து சென்று விழுவதுதான். மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் என்ன?

அது மிகத் தெளிவானது.அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறையில் ஒருவித மாற்றத்தைக் காணமுடிகிறது.முதலில் பஸில் ராஜபக்ஷ அமைச்சர் ஆக்கப்பட்டார்.அதன்பின் ஜி.எல்.பீரிஸ் வெளியுறவு அமைச்சரானார்.அதன்பின் மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதப்படுத்தப்பட்டது.அவர் நாட்டுக்கான மூலோபாய திட்டத்தோடு டெல்லிக்கு சென்றிருக்கிறார்.இவை தவிர அண்மையில் மகிந்த சமரசிங்க அமெரிக்காவுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே தொகுத்துப் பார்த்தால் அந்தச் சித்திரம் மிகத்தெளிவாக கிடைக்கும். அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றம் தெரிகிறது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த புதிதில் தன்னை சீனாவுக்கு அதிகம் நெருக்கமான ஒன்றாக காட்டிக் கொண்டது. அந்த வெளியுறவு நிலைப்பாட்டில் இப்பொழுது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா ?அதாவது இப்பொழுது சீனா ஒதுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழும். நிச்சயமாக இல்லை. சீனா ஒதுக்கப்படவில்லை.சீனாவின் ஆசீர்வாதத்தோடுதான் எல்லாமே நடக்கிறது.ஏனெனில் இந்த அரசாங்கத்தின் பேரபலம் என்பது சீனாதான்.புவிசார் அரசியலில் இலங்கைத் தீவுக்குள்ள என்னென்றுமான பேரபலம் அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்தான்.அதேசமயம், இப்போதுள்ள அரசாங்கத்தின் பேரபலம் சீனாவுடனான அதன் நெருக்கம்தான்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த புதிதில் சீனாவுடனான நெருக்கம் காரணமாக மேற்கத்திய நாடுகள் இந்தியா மற்றும் ஐநாவோடான உறவுகளில் நெருடலை ஏற்படுத்தியது.

இவ்வாறு சீனாவுக்கு நெருக்கமாக காணப்பட்ட ஓர் அரசாங்கம் திடீரென்று ஏன் தன் வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது? காரணம் மிகத்தெளிவானது.வைரஸ்,பொருளாதார நெருக்கடி,ராஜதந்திர நெருக்கடி போன்றவைதான் காரணம்.ஆட்சிக்கு வந்த புதிதில் ராஜபக்ஷக்களுக்கு வைரஸ் நண்பனாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த தொற்று அலைகள் நாட்டைத் திணறடித்தன. ஏற்கெனவே சரிந்து போயிருந்த பொருளாதாரம் மேலும் சரிந்தது.ஒருமுனையில் பெருந்தொற்று நோய். இரண்டாவது முனையில் பொருளாதார நெருக்கடி. மூன்றாவது முனையில் சீன சார்பு வெளியுறவுக் கொள்கை காரணமாக ஏனைய நாடுகளுடன் ஏற்பட்ட நெருக்கடிகள். இதனால் பெரும் தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசிகளை பெறுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டன.நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்தாகிவிட்டது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதும் ஒரு நிலைமை தோன்றியது.இப்பொழுதும் இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதும் யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு கடையிலும் பால் மாவைப் பெற முடியாது.

இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொள்ள வேண்டிவந்தது.வெளியுறவு அணுகுமுறையில் மாற்றங்களை செய்வது என்று முடிவெடுத்த பின் அவர்கள் நபர்களை மாற்றினார்கள்.அதன்விளைவாக கடந்த சில மாதங்களுக்குள் அரசாங்கம் எதிர்பார்த்த விளைவுகளை அறுவடை செய்யத் தொடங்கிவிட்டது.சீனாவின் ஆசீர்வாதத்தோடுதான் எல்லாமே நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன் கொழும்புக்கு சீன பாதுகாப்பு மந்திரி விஜயம் செய்தார். அவரை சந்தித்தபோது ஜனாதிபதி சொன்னார் சீனாவின் கடனுதவி ஒரு பொறி அல்ல என்று நாம் நிரூபிப்பதற்கு சீனா எங்களுக்கு உதவ வேண்டும் என்று. அதுதான் இப்பொழுது நடக்கிறது. அதாவது சீனாவின் கடன் உதவியை ஒரு பொறியாகக் கருதி அரசாங்கத்துக்கு எதிராக வியூகங்களை வகுக்கும் நாடுகளுக்கு “அது கடன் பொறி அல்ல.நான் சீனாவிடம் மட்டும் கடன் வாங்கவில்லை. ஏனைய நாடுகளிடமும் கடன் வாங்கத் தயார். உலக வங்கி பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றின் கடன் பொறிக்குள் வலிந்து சென்று விழத் தயார்” என்ற செய்தியை அரசாங்கம் உலகசமூகத்துக்கு கொடுக்க முயற்சிக்கிறது.

இது விடயத்தில் சீனா தனது நண்பர்களை பாதுகாக்கின்றது. இலங்கைத் தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.உலகத்தின் பிரம்மாண்டமான பொருளாதாரம் ஆகிய சீனாவால் அதற்கு உதவ முடியும்.சீனா கிள்ளித் தெளிக்கும் உதவிகளை போதும் இலங்கைத்தீவு பொருளாதாரரீதியாக நிமிர்ந்து எழுவதற்கு.ஆனால் அவ்வாறு உதவி புரிவது தனது நண்பர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதோடு தனது பிராந்திய வியூகங்களை அது பதட்டத்திற்கு உள்ளாக்கலாம் என்று சீனா கருதுகிறது. அதனால் சீனாவின் ஆசீர்வாதத்தோடு அரசாங்கம் மேற்கை நோக்கி ஒரு குறிப்பிட்ட எல்லைவரை திரும்ப முயற்சிக்கிறது.

எனினும் செங்குத்தாக திரும்ப முடியாது.ஏனென்றால் சீனாவின் பொறிக்குள் இருந்து இலங்கை தீவை விடுவிக்க நாட்டுக்கு உள்ளே இருக்கும் எந்த ஒரு சக்தியாலும் முடியாது என்பதே இப்போது இலங்கைத்தீவின் யதார்த்தமாகும். அரசாங்கத்தின் மேற்கண்டவாறான அணுகுமுறைக்கு முன்னுதாரணங்கள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு நெருக்கமான ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கொம்பெனிக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். துறைமுகப் பட்டினத்துக்கான புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கையும் அவருடைய காலத்தில்தான் இறுதியாக்கப்பட்டது.மேற்கின் விசுவாசியான ரணில் விக்ரமசிங்க மேற்கு நாடுகளின் ஆசீர்வாதத்தோடுதான் அவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.அப்படித்தான் இப்பொழுதும் ராஜபக்சக்களும் சீனாவின் ஆசீர்வாதத்தோடு மேற்கு நாடுகளோடும்,இந்தியாவோடும்,ஐநாவோடும் சுதாகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சீனாதான் அவர்களுடைய பேரபலம்.ஐநாவில்  சீனா அவர்களோடு நிற்கிறது. அதனால் ஐநாவில் இலங்கை பொறுத்து ஒருவித பனிப்போர் சூழலை சீனா உருவாக்கியிருக்கிறது. சீனாவுக்கு எதிராக ராஜபக்சக்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்தால் அவர்கள் மேலும் சீனாவை நோக்கிப்  போகக்கூடும் என்ற அச்சம் ஏனைய நாடுகளுக்கு உண்டு.எனவே ராஜபக்சக்கள் தங்களை நோக்கி வரும்பொழுது அவர்களை இறுகப்பற்றிக் கொள்ள அவை தயாராகின்றன. அதாவது அமெரிக்கா –சீனா -இந்தியா ஆகிய மூன்று துருவ இழுவிசைகளுக்கிடையே இலங்கைத் தீவு தனது பேர பலத்தை வெற்றிகரமாகப் பேணுகிறது.

சிங்களமக்கள் ஓர் அரசுடைய தரப்பு.அரசுக்கும் அரசுகளுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு எனப்படுவது இறுதியிலும் இறுதியாக அரசுகளைப் பாதுகாக்கும் நோக்கிலானது. யுத்த காலங்களிலும்,அனர்த்து காலங்களிலும்,ராஜதந்திரப் பூட்டுக்கள் விழும் பொழுதும் பூட்டுக்களைத்  திறப்பதற்கு மேற்படி உறவுகள் உதவும். கடந்த சில வாரங்களாக கொழும்பில் இடம்பெறும் சம்பவங்கள் நமக்கு அதைத்தான் நிரூபிக்கின்றன. இப்படிப்பட்ட தோர் ராஜியச் சூழலில்  அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அவர்களுக்குள் ஐக்கியம் இல்லை. வெளியிலிருந்து வரும் பிரதிநிதிகளை அவர்கள் ஐக்கியமாக சந்திப்பது இல்லை. இந்திய வெளியுறவுச் செயலர் நீங்கள் ஒரு குரலில் பேசுங்கள் என்று கேட்கும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. கட்சிகளுக்கிடையே பல்வகைமை இருப்பதில் தவறில்லை.பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதில் தவறில்லை.ஆனால் ஒரு தேசமாக சிந்தித்து ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறைக்கு போக வேண்டியது அவசியம். இதை மறுவழமாகச் சொன்னால் தேசமாகச் சிந்திப்பது என்பது ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறைக்கு போவதுதான். ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது கூட்டாக சிந்திப்பதுதான்.ஆனால் தமிழ்க்கட்சிகள் மத்தியில் அது இல்லை. ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்ற கட்சிக்குத்தான் வெளிநாட்டு பிரதிநிதிகள் முதலுரிமை கொடுத்து சந்திப்பார்கள்.ஜனநாயக அரசியலில் அதுதான் வழமை.இதுவிடயத்தில் புவிசார் அரசியல் குறித்து தெளிவான பார்வையைக் கொண்ட கட்சிகள் ஒன்றில் தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி ஒப்பீட்டளவில் அதிகரித்த மக்கள் ஆணையைப் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது ஏற்படுத்த வேண்டும்.

இதுவிடயத்தில் சிங்கள கட்சிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ராஜபக்சக்களின்  பிழையான வெளியுறவு அணுகுமுறை காரணமாக நாடு திணறிக் கொண்டிருந்த பொழுது ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சிகளும் என்ன செய்தன? “உலக வங்கியிடம் போ,பன்னாட்டு நாணய நிதியத்திடம் போ, அங்கே கடன் பெறு”என்று ஆலோசனை கூறின.சீனாவிடம் மட்டும் கடன் பெற்றால் பெரும் தொற்றுநோய் சூழலில் கூர்மையடைந்து வரும் புதிய கெடுபிடிப் போருக்குள் நாடு சிக்கிவிடும்.அதன் விளைவாக மறுபடியும் இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறும் என்று மறைமுகமாக எச்சரித்தார்கள்.அந்த ஆலோசனை இப்பொழுது வேலை செய்கிறதா?

ஓர் அரசுடைய தரப்பு என்ற அடிப்படையில் அவர்களுக்கு அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் என்ற ஒரு கட்டமைப்பு உண்டு. அது பொறுத்த நேரங்களில் சுதாகரித்துக் கொள்வதற்கான ராஜ்ய வாய்ப்புக்களைத் திறக்கும்.ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களிடம் ஒரு பொதுவான கட்டமைப்புமில்லை. ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கையும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்?

நிலாந்தன் கட்டுரைகள்