Breaking News

இன்னும் போராடும் இசைப்பிரியா

இனவெறியை கர்ப்பம் தரித்து
கொலைகளைப் பிரசவிக்கும் 
நிலமொன்றில்
காணமுடியாத இருட்டில் 

தொங்கித் துடிக்கிறது 
கூக்குரலின் ஆன்மா
குளம்பொலியில் வழியும் 
சனங்களின் துயரம் 
காலப் புரவியின் மீதேறி கனைக்கிறது


ஊழி வாசல் பெருக்கிய 
அழுகையின் முற்றங்களாய்
அகாலத்தில் கருகியது வாழ்வு
கீழ்வானின் பறவைகளென 
வெற்றிப்படையலாக 


வந்துவீழும் எறிகணைகள் 
பிரேதச் சான்றிதழோடு சவக்குழியிலிடுகிறது எம்மை
பற்றியெரிந்த சதுப்பு நிலத்தில் ஊற்றெடுத்த
யுகத்தின் துயரப் பாடலை 
நியாயப் பிரமாணங்களுக்கு வெகு தூரமாய் 


குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள் 
அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்
காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்
அநியாயத்தின் குரூரப் பற்கள்         
மானுடத்தின் தசைகளைத் சப்பித் திளைத்து


மொழியற்ற துயர்களின் சொற்களைக் கூட்டுகிறது
நிறமிழந்து காயம்பட்ட பெரும் நிலத்தின் 
விடியலில் விலங்கிட்டால் 
இளைத்துப் போகுமா சுதந்திர வேட்கை