புலனாய்வாளர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு
அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடபகுதி இளைஞர்களது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலான வடக்கு மாகாண இளைஞர் மாநாடு மனித உரிமைகள் தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடம் தோறும் மனித உரிமைகள் தினத்தில் குறித்த மாநாட்டை இந்த அமைப்பு நடத்திவருகிறது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்குமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.
வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நட்புறவைப் பலப்படுத்தி, வடபகுதி இளைஞர்களை வலுவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 1,500 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை குறித்த நிகழ்வை தடுக்கும் வகையில் தமக்கு இராணுவ, புலனாய்வு தரப்பினர் கடும் அழுத்தங்களைக் கொடுத்தனர் என்றும், எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளனர் என்றும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ரவீந்திர டி சில்வா தெரிவித்தார்.
குறிப்பாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட வீரசிங்கம் மண்டபத்தை சுற்றி நேற்று இரவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் என்றும், இன்றைய நிகழ்வுக்காக முல்லைத்தீவு, மன்னாரில் இருந்து வந்த இளைஞர்கள் இடைமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.








