மேர்வின் சில்வாவின் குற்றச்சாட்டு உண்மையானதே - ராஜித
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானதே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறு கொலை செய்யப்பட்டார் யார் கொலை செய்தார்கள் என்பது பற்றிய பூரண விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இந்த சம்பவம் குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.
லசந்தவின் கொலையுடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் முக்கிய பதவி வகித்தவர் ஒருவருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு. அண்மையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா லசந்த கொலை தொடர்பில் குற்ற புலனனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவல்கள் அனைத்துமே உண்மையானவை.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சகல தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் கொலைகள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன.இந்த சம்பவங்கள் தொடர்பிலும் மீள விசாரணை நடத்தப்படும் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








