இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை டில்லியில் சந்தித்துப் பேசினார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசின் திட்டங்கள் குறித்து இந்தச்சந்திப்பில் இருநாட்டு அமைச்சர்களும் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இலங்கையுடன் இணைந்து இந்தியா செயலாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அரசியல் மாற்றம் காணப்படுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை கொண்டுள்ளார் என்ற விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா, மங்கள சமரவீரவுக்கு எடுத்துவிளக்கினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீர, தான் பெறுப்பேற்ற ஐந்து நாட்களில் இந்தியாவுக்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு முதலாவது வெளி விவகாரச் சந்திப்பையும் நடத்தியுள்ளார். நேற்றுச் சனிக்கிழமை இந்தியா சென்ற மங்கள சமரவீர நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.








