மகிந்த அரசின் ஊழல்களை கண்டறிய ரணில் தலைமையில் குழு
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைபடி செயற்படும் உடனடி பதில் குழுவையும் நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவார் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இதனை தவிர புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படுகிறதா என்பதை ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் 5 பேர், இரண்டு புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவும் நேற்று கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








