Breaking News

மாவையா விக்கியா வாக்கெடுப்பு -விக்கி வெற்றி

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை
பிரதேச சபை நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைப்பதா இல்லை மாவை சேனாதிராசாவினை அழைப்பதாவென்ற பிரச்சினை வாக்கெடுப்புக்கு விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெல்சிப் ஊழல் மோசடி காரணமாக நீண்ட காலமாக கட்டி முடிக்காது அரைகுறையாக உள்ள திக்கம் மானாண்டி சந்தையினை திறந்து வைக்க முடிவெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாரை அழைப்பது என்ற முடிவிலேயே சிக்கல் எழுந்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற சபைக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைக்க வேண்டுமென ஒருதரப்பும் இல்லை மாவை சேனாதிராசாவினை அழைக்க வேண்டுமென மற்றைய தரப்பும் வாதத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சரினை பிரதம விருந்தினராக அழைப்பதென்ற ஆலோசனைக்கு எதிர்கட்சியான ஈபிடிபி உறுப்பினர்களும் ஆதரவளித்ததுடன் மாவை சேனாதிராசா இச்சந்தை அமைப்புடன் தொடர்பற்றவரெனவும் கருத்துக்களினை முன்வைத்துள்ளனர். 

இதனையடுத்து சபை உறுப்பினர் திரு தவயோகநாதன் எமது கட்சியின் தலைவரை (மாவையை)அழைக்க வேண்டும் என கூட்டத்தில் எழுந்து நின்று சத்தமிட்டார். பின்னர் சபையின் தவிசாளர் சஞ்சீவன், உபதவிசாளர் லோகசிங்கம், உறுப்பினர் தவயோகநாதன் ஒரு அணியாக நின்று மாவைக்கு சார்பாக பேசமுற்பட்டனர். 

பின்னர் வாய்மூல வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அதில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் உடன்பட்டு, முதலமைச்சருக்கு ஆதரவாக 06 பேரும் மாவைக்கு ஆதரவாக 03 பேர் மட்டும் வாக்களித்தனர். தவிசாளர் இறுதியாக முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைப்பது எனவும் அவர் அதற்கான நேரம் தராவிடின் மாவை சேனாதிராசா அவர்களை அழைப்பது எனவும் தெரிவிக்க, சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் க.தவயோகநாதன், முதல்வருக்கு திறப்பு விழாவுக்கு வருவதற்கு நேரம் இல்லை என கடிதம் வேண்டியே ஆவேன் எனவும் மாவை சேனாதிராசாவைத் தான் அழைப்பது சபதம் எடுத்துச் சென்றார்.

வாக்கெடுப்பில் விக்கினேஸ்வரன் வென்றாலும் முடிவு எதுவும் எட்டப்படாமலே கூட்டம் முடிவடைந்துள்ளது மாவையை அழைக்காது விக்கியை அழைத்தால் அடுத்த தேர்தலில் தமக்கான ஆசனங்களை மாவையைக்கொண்டு தடுக்கவுள்ளதாகவும் எனவே அடுத்தகூட்டத்தில் சைலன்ராக இருக்குமாறும் சபைத்தலைவர் சஞ்சீவன் மற்றும் தவயோகன் ஆகியோர் மிரட்டி வருவதாகவும் ஏனைய 3உறுப்பினர்களில் ஒருவர் தெரிவிக்கின்றார்.

ஒன்பது உறுப்பினர்களைக்கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் 7உறுப்பினர்கள் த.தே.கூட்டமைப்பின் சார்பிலும் 2 உறுப்பினர்கள் ஈ.பி.டி சார்பிலும் கடந்த 2011 தேர்தலில் தெரிவாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.