Breaking News

அரசின் ‘காணாமல்போனோர் அலுவலகம்’ தொடர்பில் சிவில் சமூகம் சந்தேகம்!



ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி அமைக்கப்படவுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பெயரை, ‘காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான அலுவலகம்’ என்று பெயர் மாற்றுமாறு இலங்கையின் சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு அமைக்கப்படக் கூடிய அலுவலகம், சுயாதீனமாகவும்-நம்பகத் தன்மை மிக்கதாகவும்-வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும் அமையத் தேவையான பரிந்துரைகள் சிலவற்றையும் முன்வைத்து அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட வகையிலும் சர்வதேச நீதிநடைமுறைகளை பின்பற்றும் விதத்திலும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விதத்திலும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் நடக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை பெறுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள உரிமைகள் உறுதிசெய்யப்படுவதுடன், காணமல்போகச் செய்யப்படுவதை சர்வதேச குற்றங்களாக அங்கீரித்து உள்நாட்டு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு நடத்தக்கூடிய விசாரணைகள் நம்பகத்தன்மையுடன் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று அந்தக் கடித்தில் கையொப்பமிட்டுள்ளவர்களில் ஒருவரான யாழ். கத்தோலிக்க பங்கின் நீதி மற்றும் அமைதிக்கான ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை எஸ்.வி.பி. மங்களராஜா தமிழோசையிடம் கூறினார்.

சர்வதேச விசாரணை மட்டுமே நம்பகத் தன்மையுடன் அமைய முடியும் என்றும் உள்நாட்டு விசாரணைகள் நம்பகத்தன்மையுடன் அமையவில்லை என்றும் அருட்தந்தை எஸ்.வி.பி. மங்களராஜா கூறினார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் முறையற்ற கைதுகள் நடந்துவருவதாகவும் சாட்சியங்களை அச்சுறுத்தும் நடவடிக்கைள் தொடர்வதாகவும் அருட்தந்தை மங்களராஜா மேலும் தெரிவித்தார்.