Breaking News

பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடவும் – வித்தியா கொலைச் சந்தேகநபர்

வித்தியா கொலை வழக்கில் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என்றும் அவ்வாறு தான் இந்த கொலையுடன் தொடர்புபட்டவர் என்று நிரூபிக்கப்பட்டால் தன்னை நான்கு சுவற்றிற்குள் அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் தூக்கிலிடுமாறு, வித்தியா கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபர் நேற்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.


வித்தியா கொலைச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடிக்க அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்றுயாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே முதலாவது சந்தேக நபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைறைய விசாரணையின் போது, 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஆஜராகி பிணை கோரிய நிலையில், 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் மற்றும் 8ஆம் சந்தேக நபர்கள் மன்றில் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி பிணைக் கோர சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது இவ்வாறு கூறினர்.

இதன்போது, தொடர்ந்து தமது நியாயத்தை வெளிப்படுத்திய சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், குற்றத்தைப் ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து நீதிமன்றில் வாக்குமூலங்களை வழங்கிய சந்தேக நபர்கள் கீழுள்ளவாறு தெரிவித்திருந்தனர் :-

இரண்டாவது சந்தேக நபரின் வாக்குமூலம் :-

‘எனக்கும் இந்த கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் இந்த குற்றத்தினைப் புரியவில்லை. பொலிஸாரும், குற்றப்புலனாய்புப் பிரிவினரும் என்னை அடித்து இதனை ஒத்துக் கொள்ளச் செய்தனர். உண்மையில் நான் இந்த குற்றத்தை புரியவில்லை’

மூன்றாவது சந்தேக நபரின் வாக்குமூலம் :-

‘எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை. 1வது மற்றும் 2வது சந்தேக நபர்கள் எனது உடன்பிறந்த சகோதரர்கள். சம்பவம் நடைபெற்ற மே மாதம் 13ஆம் திகதி காலை 8 மணிக்கு நான் வீடொன்றில் கூலி வேலை செய்து கொண்டிருந்ததை உயிரிழந்த மாணவியின் அண்ணன் கண்டான்.
சம்வம் இடம்பெற்றதன் பின்னர் பொலிஸார் என்னைக் கைது செய்து அடித்தனர். நான்காம் மாடிக்கு கொண்டுச் சென்று மிளகாய் தூள் தூவி கடுமையாக தாக்கினர் நான் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ள சொன்னார்கள். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை.’

ஐந்தாவது சந்தேக நபரின் வாக்குமூலம் :-

‘இந்த கொலையுடன் எனக்கு தொடர்பு இல்லை. பொலிஸார் என்னைக் கைது செய்து இரு கைகளையும் பின்புறமாக கட்டி அரச மரத்தில் தொங்கவிட்டு அடித்தனர். கண்களில் மிளகாய்த்தூள் தூவினர்.

பின்னர் என்னை விசாரணை செய்த தமிழ் பொலிஸ் அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்று நான் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டதாக சிங்களத்தில் தெரிவித்தார். இதன்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘தமிழ் என்ற படியாலா அவரிடம் ஒப்புக் கொண்டாய் நான் சிங்களவன் என்ற காரணத்தினால் ஒப்புக் கொள்ளவில்லையா’ என்று கூறி என்னைத் தாக்கினார். பின்னர் நான்காம் மாடிக்கு கொண்டுச் சென்று கண்களில் மிளகாய்த்தூள் தூவி தாக்குதல் நடத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வலியுறுத்தினர். அவ்வாறு ஒப்புக் கொண்டால் அரச தரப்பு சாட்சியாக மாற்றி வெளியில் விட்டு பாதுகாப்பு தருவதாகவும் கூறினர். எனினும் நான் அந்த குற்றத்தைப் புரியவில்லை.’

ஆறாவது சந்தேக நபரின் வாக்குமூலம் :-

‘சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதி நான் வேலணை பிரதேச சபையில் கையெழுத்திட்டு பணியில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் 17ஆம் திகதி என்னைப் பிடித்து குறிக்கட்டுவான் பொலிஸ் காவலரணில் வைத்து தலைக்கீழாக கட்டி அடித்து மிளகாய்சத்தூள் தூவினர் நிர்வாணமாக்கி சித்திரவரைத் செய்தனர்.

பின்னர் நான்காம் மாடிக்கு கொண்டுச் சென்று, நீதான் அந்த பெண்ணைக் காதலித்தாய். அவர் செருப்பால் அடித்தமையினால் அவளைக் கொலை செய்துள்ளாய், என்று கூறி அடித்தனர். என்னுடைய ஆணுறுப்பை மேசை லாச்சியில் வைத்து தாக்கினர். எனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை. நான் நிரபராதி’

எட்டாவது சந்தேக நபரின் வாக்குமூலம் :-

‘நானும், 4ஆம் 7ஆம், 9ஆம் சந்தேகநபர்களும் சம்பவம் நடைபெற்றபோது கொழும்பில் இருந்ததோம். அதற்கான ஆதாரமாக சி.சி.டிவி. வீடியோ காட்சிகள், நாம் ஹோட்டலில் உண்டதற்கான ஆதாரம், வங்கியில் பணம் பெற்றுக் கொண்ட ஆதாரம் என்பன உள்ளன. இதனை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் வைத்துள்ளனர்.

நாங்கள் கொழும்பில் இருந்து மாணவியின் இறுதிக் கிரியைகளுக்காக வந்தோம். இறுதி கிரியை நிகழ்வுகளை முடித்து கொழும்பு செல்ல முற்பட்ட போது, சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சகிகுமாருக்கு ஊர்காவற்துறை பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்கப்படடிருந்தது. அந்த நேரத்தில் கொழும்பிற்கு வருவதற்காக அவர் எங்களுடன் வாகனத்திலிருந்தார். அவருக்கு சிங்களம் தெரியாதது மற்றும் எங்களுடன் வாகனத்திலிருந்தவர் என்ற காரணத்தினால் நாமும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம்.

இதன்போது எங்களைக் கைது செய்த பொலிஸார் சித்திரவதைச் செய்து துன்புறுத்தினர். முதலில் நாங்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்றும் 9 பேரே இந்த கொலையைச் செய்ததாகவும் கூறினர். பின்னர் நாங்கள் கொழும்பில் இருந்ததற்கான ஆதாரத்தினைப் பார்த்து நாங்ககள் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் எங்களுக்கும் இந்த கொலைக்கும் எதுவித தொடர்பும் இல்லை’

நேற்றைய வழக்கு விசாரணையின் போது, 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் ஆஜராகி பிணை கோரியமையினால் குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் நீதிமன்றில் தமது கருத்தினைக் கூற அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.