சூரரைப் போற்று விமர்சனம்!
மதுரை சோழவந்தானில் இருக்கும் பள்ளி ஆசிரியர் பூ ராமுவின் மகன் நெடுமாறன் ராஜாங்கத்தை(சூர்யா) சுற்றியே கதை நகர்கிறது. ஏழைகளும் குறைந்த விலையில் விமானத்தில் பயணம் செய்ய ஒரு விமான நிறுவனத்தை துவங்க முடிவு செய்கிறார் மாறன். ஆனால் விமான துறையின் முன்னோடியாக இருக்கும் பரேஷ் கோஸ்வாமி(பரேஷ் ராவல்) மாறாவின் கனவு நினைவாக விடமால் தடுக்கிறார்.
தடைகளை தாண்டி மாறா தன் கனவை நினைவாக்குவாரா இல்லையா என்பது தான் கதை. படம் முழுக்க சூர்யா தான் இருக்கிறார். சில காலம் கழித்து சூர்யாவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதை அவர் அற்புதமாக பயன்படுத்தி படம் பார்ப்பவர்களை கவர்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தந்தையை காணச் செல்ல விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்கும் காட்சியாக இருக்கட்டும், மனைவி பொம்மியிடம்(அபர்ணா பாலமுரளி) கடன் கேட்க தயங்குவதாக இருக்கட்டும் சூர்யா அசத்தியிருக்கிறார்.
மாறா-பொம்மி உறவு படத்திற்கு பெரிய பலம். இருவருமே கனவுகளுடன் இருப்பவர்கள். பொம்மிக்கு பேக்கரி துவங்க வேண்டும் என்று ஆசை. மாறாவின் கனவுடன் ஒப்பிடுகையில் அது சிறியது தான். அறிமுக காட்சியிலேயே ரசிகர்களை கவர்கிறார் பொம்மி. மாறாவை ஏன் வேண்டாம் என்கிறாய் என உறவுக்காரர் ஒருவர் பொம்மியிடம் கேட்டபோது, இதுவரை 20 ஆண்கள் என்னை வேண்டாம் என்றார்களே, அவர்களிடம் இதே கேள்வியை கேட்டீர்களா என்றார்.
மாறாவால் பொம்மியை பார்த்துக் கொள்ள முடியாது என்று அவர் குடும்பத்தினர் கவலைப்பட்டபோது, அது ஏன் எப்பொழுதும் ஆண் தான் மனைவியை பார்த்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்பார் பொம்மி. பொம்மியின் வெற்றியும், ஆதரவும் தான் கஷ்டமான நேரங்களில் கூட மாறா தன் கனவை கைவிடாததற்கு காரணம். மாறா கடனாக கேட்ட தொகையை விட அதிகமாக கொடுப்பார் பொம்மி. உங்கள் கனவு போன்று இதயம் பெரிது அல்ல மாறா என்பார் பொம்மி.
பொம்மியின் கதாபாத்திரம் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை. சூர்யா தன் நடிப்பால் நம்மை கட்டிப் போட்டுள்ளார். காளி வெங்கட்டின் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கிறது. ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு பலம்.
சூரரைப் போற்று, நம்பி பார்க்கலாம்.