காந்தள் 2013 கவிதைகள் - THAMILKINGDOM காந்தள் 2013 கவிதைகள் - THAMILKINGDOM

 • Latest News

  காந்தள் 2013 கவிதைகள்


  • மண்ணின் விடுதலைக்காய்
   மரணித்த உறவுகளே
   மாவீரர்களே வணங்குகின்றோம்
   உரிமைப் போருக்காய்
   உயிர்க்கொடை செய்தீர்கள்
   உங்களைக் கொடுத்து
   எங்களைக் காத்தீர்கள்
   காவற் தெய்வங்களே
   வணங்குகின்றோம் உமை.

  • போர்படர்ந்த போதிலே - எம்
   ஊர் அழிந்தது
   நீர்நடந்த பாதையிலே - எம்
   வேர் படர்ந்தது
   பார்புகழும் வீரர்களே - எம்
   தேர் தொடர்ந்திடும்
   உமக்கு எம் வீரவணக்கங்கள்.

  • தானைத் தலைவன் வழி காட்டலில்
   சேனையாகத் திரண்டு நின்று
   வானையும் பிளந்து சென்றீரே
   தீமை அழிந்து சுக்குநூறாக - உம்
   ஊனை விதைத்துச் சொன்னீரே
   தங்கத் தமிழீழம் நமதென்று
   நனவாகும் காலம் வெகுதூரமில்லை
   அதுவரை அமைதியாகத் தூங்குங்கள்
   உங்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

  • முகம் தெரியாமலே முகம் மலர சென்றவரே
   முகவரி இல்லாமல் முறுவலுடன் சென்றவரே
   வரும்பகை எதிர்த்து உறுமலுடன் நின்றவரே
   பெயர் சொல்லி அழக்கூட
   முடியாத நிலையெனினும் - உம்
   வரலாறு எமைஎல்லாம் வழிகாட்ட - உம்
   பிரிவாலே வாழுமய்யா தமிழீழம்.

  • விடுதலைப் பயிருக்கு உரமாகினீர் - எம்
   உயிர் வாழ்வுக்கு விதையாகினீர்
   ஈழ மண் மீட்சிக்கு திரியாகினீர் - எம்
   இன விடிவிற்கு நல்வரமாகினீர்
   வீரர்களே உமை வணங்குகின்றோம்.

  • சின்ன வயதில் சிறகடிக்கும் காலத்தில்
   வெள்ளை மனதோடு விடுதலை வேள்விக்கு
   வேங்கை வீரராய் நீர் சென்ற பாதையில்
   எங்கள் பாதங்கள் இடம் மாறி போகாது
   வீரவணக்கங்கள்....

  • தமிழனென்றோர் இனம்
   தரணியில் உண்டு என்று - உம்
   விடுதலை வேட்கை கண்டே
   விளங்கிக்கொண்டனர்
   வேங்கைகளே
   உமக்கு எமது வீர வணக்கங்கள்.

  • மாவீரர்களே ....
   ஈழத்தமிழ் மண்ணின் மானத்திறம் காக்க
   வீழத்துணிந்திட்ட வேங்கையாச் சென்றீர்கள்
   காலம் கொடுத்திட்ட கட்டளை ஏற்றுச்சென்று
   கல்லறை மடியில் கனவோடு துயில்கின்றீர்
   வேகம் எடுத்து விடுதலைப்போரின் நெறியை
   உமை வணங்குகின்றோம்........

  • தோளில் சுமந்து துணிவோடு பயணித்தீர்
   எட்டுத்திக்கும் எதிர்நின்ற பகையொழிக்க
   விட்டுக்கொடாமல் விடுதலைப்போர் செய்தீர்
   சின்னவயதில் சிறகடிக்கும் காலத்தில்
   மண்ணை காத்திட மானப்போர் செய்தீர்கள்
   பள்ளிவயதில் பகட்டோடும் காலத்தில்
   நெஞ்சமெலாம் நீங்கள் நெருப்பை சுமந்தீர்கள்
  • தமிழீழ தாயகத்தை மீட்டெடுக்க
   தீராத தாகம் கொண்டு
   அல்லும்பகலும் அரும்பாடுபட்டவரே!
   வெய்யில் மழையில் நின்று
   வெஞ்சமர் ஆடி வென்று
   ஊன்உறக்கமின்றி ஓயாது உழைத்தவரே!
   பந்த பாசம் துறந்து
   தாயக கனவுகளை சுமந்து
   வீரகாவியமான சந்தனப்பேழைகளே!
   உம்நினைவுகள் எப்போதும்
   எம்நெஞ்சுகளில்
   அழியாது நிலைத்திருக்கும்
   உம்பெயர் எப்போதும்
   எம்காதுகளில்
   ஓயாது ஒலித்திருக்கும்
   உம்வீரம் எப்போதும்
   எங்கள் கருவறையில்
   புதிதாய் பிறப்பெடுக்கும்
   வளரும் தமிழ்! வெல்லும் தமிழீழம்!!
   கடும்பயிற்சி கடும்உழைப்பு
   கொடும்பனி கோடைவெய்யில்
   விழிமுழிப்பு விடுதலைப்பயிர் வளர்ப்பு
   நீண்டநடை நெடும்பயணம்
   விட்டும்விடா பாசம் தொட்டுவிடா வீரம்
   வணங்குகின்றோம் ..... மாவீரர்களே......

  • ஆழக்கடலேறி ஈழப்பணி செய்து
   வீரப்பரம்பரையின் விளக்கமாய் நீர்நின்று
   சோழப்பரம்பரையின் சொல்லாத வீரத்தை
   நீளக்கடலில் வரலாறாய் வாழவைத்தீர்
   கப்பலோட்டிய தமிழன் என்றும்
   கடாரம் வென்ற சோழன் என்றும்
   புத்தகத்தில் மட்டுமே புறநானூறை கண்டிருந்தோம்
   எட்டுத்திக்கும் சென்ற எங்கள் புலிவீரத்தை
   எப்போது நாங்கள் சொல்லிவைப்போம்
   எங்கள் மாவீர்களே... வணங்குகின்றோம்.

  • கந்தகச் சுமை தாங்கி
   வந்தவன் படையழிக்க
   உம்மையே வெடியாக்கி
   எம் தமிழினம் காத்தீரே
   உமக்கு,
   எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

  • வரியின் உடையில் எழுந்து
   எரியும் மண்ணை காத்து
   நெடிய கடலில் நீலவரியில்
   எங்கள் கொடியை நாட்டி
   பெரியபகையை கருக்க
   பூக்கள் சொரிந்து விளக்கேற்றி
   உங்கள் நினைவுகளை சுமந்து
   நெட்டுருகி நிற்கின்றோம்
   எங்கள் காவல் தெய்வங்களே....
   உங்கள் சின்னச்சிரிப்பும்
   சொல்லுக்கு முந்திய உம் செயலும்
   எல்லாமே வந்து எதிர்த்தபோதும்
   எதுவும் இல்லாமலே எதிர்த்துநின்ற உம்திறமும்
   வரலாறு மறக்காது.
   மாவீரர்களே வணங்குகின்றோம்.

  • கரியபுகையில் கலந்து
   வானமேறி வல்லமை காட்டி
   ஆழப்போய் அதிரடியாய் இறங்கி
   ஈழப்போரில் எரிமலையாய்
   எங்கள் மாவீரர்கள்.

  • இன்று
   உம் கல்லறைகள் இல்லை
   உடைத்து கிளறி எடுத்தெறிந்து
   இருந்த இடமே இல்லாமல்......
   எங்கள் மாவீரர்களே
   எல்லாமே இழந்து எல்லாமே தொலைந்து
   உங்கள் நினைவுகளை மட்டுமே
   சுமந்துநிற்கின்றோம்.
   உயிரை விளக்காக்கி
   உதிரத்தால் நெய் ஊற்றி
   உணர்வோடு விடுதலையை
   உயர்வாக வளர்த்தவரே
   உம்மை நினைந்துருகி
   உள்ளமதால் மலர் தூவி
   நீர் உறங்கும் கல்லறை மேல்
   உறுதிசெய்கின்றோம்.
   பூவின் மென்மையுள்ள
   புனித ஜீவன்களே!
   மலர்வதற்காய் தோன்றி
   மண்ணுக்காய் மறைந்த மலர்களே!
   மண்ணுக்காய் தம்முயிரை அர்ப்பணித்து
   விண்ணுலகம் சென்றுவிட்ட வீரமணிகளே!
   பொன்னுலகம் படைக்கப்
   புறப்பட்ட வேங்கைகளே!
   மறப்போமா உங்கள் கனவை?
   படைப்போமே எமது நாட்டை.
   வலிதந்த படைமீது தீயாகினீர்
   உயிர்தந்து மண்மீட்க விதையாகினீர்
   புலிபாய்ந்த மண்ணினிலே புயலாகினீர்
   கிலிகொண்டு படையோட வெடியாகினீர்
   மறப்போமா வீரர்களே... மறவோம் உம்மை....
   வீரவணக்கங்கள்.......
  • மொட்டவிழும் பூவினிலே
   உங்கள் முகம் தெரியும்
   கல்லறைக்கு கிட்டவர
   உங்கள் கண் தெரியும்
   வீசுகின்ற காற்றினிலும்
   பேசுகின்ற உங்கள் மொழி
   வாழுகின்ற காலம்வரை
   மறவோம் ஐயா....
   வீரமிகு தியாக வேங்கைகளே
   ஆயிரம் ஆயிரம் மறவர்களின்
   சுதந்திரக் கனவாகிய தமிழீழம் காணும்வரை
   தியாக வேள்விகளோடு
   வீறுகொண்டு எழுந்திடுவோம்.
   தாயகமே தாயாக
   தலைவனே உயிராக
   தமிழ் மானம் பெரிதாக
   தம் உயிர் தந்தவர்கள்
   எரித்தாலும் கண்ணில் நீர்தாங்கி விண்ணுலகம் சென்றிட்ட
  • கடலினுள் கரைத்தாலும் 
   மண்ணினில் புதைத்தாலும்
   மாவீரன் மறைவதில்லை
   மாவீரம் அழிவதுமில்லை
   வீசிவரும் காற்றில் விரிந்த சிறகுகளோடு
   பறந்துவிட்ட வீரமிகு பறவைகளே
   ஈரவிழிகள் எமக்கின்னும் காயவில்லை
   உங்கள் ஊரறியோம், உங்கள் உறவறியோம்,
   உறவுகள் இட்ட பெயர் அறியோம் ஆயினும்
   உம் தீரமறிவோம்; நீர் செய்த போரறிவோம்
   விடுதலைக்கு வித்தான உம்மை
   என்றும் மறவோம் உமைத் தொழுவோம்

  • கொடிய சிங்களத்துப் படைகளின்
   கொட்டமடக்கிட கொதித்தெழுந்தவரே!
   கொடூரம் கொண்டவரின்
   கோரமுகத்திரையை கிழித்தெறிந்து - எம்
   குலத்தின் துயரநிலையை
   உலகறியச் செய்தவரே!
   நீங்கள்
   எம் தமிழ் இனத்தின்
   மாபெரும் செல்வங்கள்
   உங்கள் புகழ் உலகமெலாம்
   ஒலிக்கட்டும்!
   உங்கள் வீரம் இமையமெலாம்
   எட்டட்டும்!
   உங்கள் ஆத்மா
   என்றென்றும் எங்கள்
   நெஞ்சங்களில் கலந்திருக்கும்.

  • தானைத் தலைவன் வழிதனிலே
   விடுதலைத் தாகம் கொண்டு
   தாயகமாம் தமிழீழத்தேசம் வெல்ல
   தம்முயிர் ஈய்ந்திட்ட
   தமிழ்மற வீரர்களே!
   நீர் புரிந்திட்ட
   விடுதலை வேள்வியில்
   இப்போதும் எம்மினம் பெற்றது
   நாம் தமிழர் என்ற அடையாளத்தை.
   உங்கள் கனவுகள் யாவும்
   விரைவில் நிறைவேறும்.

  • எங்களின் வாழ்வுக்காய் 
   உங்கள் வாழ்வை துறந்தீர்கள்
   விடுதலை ஒன்றே குறியாக
   வேர்பரப்பி நின்றீர்கள்
   எங்கள் தெய்வங்களே....
   எல்லோர் மனங்களிலும்
   எப்போதையும் விட இப்போது
   விடுதலைக்கான தேவை
   விளக்கமாய் புரிகின்றது
   அடுக்கடுக்காய் அரசமரமும்
   அங்குலம் அங்குலமாய் படைக்குடியிருப்பும்
   பேசித்தீர்க்கலாம் எனச்சொன்னவர்களே
   பேசித்தீராது எனச்சொல்கிறார்கள்....
   நீங்கள் விதைத்த விடுதலைக்கனவு
   வீண்போகாது வீரர்களே
   உங்கள் கனவுகளை சுமந்து
   தொடர்ந்து நடப்போம்
   இது உறுதி......

  • மாவீரர் இல்லங்களை
   எம்மெதிரி இடித்தாலும் அழித்தாலும்
   எம் நெஞ்சங்களில் உள்ள
   மாவீரர் இல்லங்களை
   அழிக்கமுடியாது என்பதை
   எம்மெதிரிக்கு உணரவைக்க
   உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள்
   எப்போதும் என்றென்றும் கார்த்திகை 27 ல்
   மாவீரர் புகழைப் பாடுவோம்!

  • அப்பா...
   எங்கள் விடுதலைக்காய்
   எங்கே போனீர்கள்?
   தாய்மண்ணின் விடிவிற்காய்
   தர்மம் வழிசென்றீரோ?
   உங்கள் நினைவுடனே
   என்றும் நாமிருப்போம்.

  • மறவர்கள், மண்ணின் மைந்தர்கள்
   மண்ணிற்காக உயிர்நீத்த செல்வங்கள்
   செல்வத்தை விட சிறந்த செல்வங்களான
   எங்கள் மறத்தமிழ் மாவீரர்களை மறக்கமாட்டோம்!
   தங்கள் சுயநலத்துக்காக இல்லாமல்
   தமிழீழத்திற்காக தம்முயிரை தியாகம் செய்த
   தன்னிகரில்லா மறவர்களான
   மாவீர்களை மறக்கமாட்டோம்!
   எம்மாவீரர்கள் மண்ணோடு போனவர்கள் அல்லர்
   மண்ணோடு வித்தாகி, முளையாகி செடியாகி
   மரமாகி கிளைவிட்டு எழும் மாவீரர்களை
   மறக்கமாட்டோம்!
   பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !

  • சோதிப் பிழம்பானவரே ! உமை
   சுடரேற்றி தலை வணங்க
   சுதந்திரமற்று நிற்கின்றோம் நாம்.
   கார்திகைப் பூ எடுத்து உம்
   கல்லறைகளில் தூவியழும் நிலை இழந்து
   துன்பச் சுமை சுமந்து தவிக்கின்றோம் நாம்.
   நாம் கூடி வாழ இல்லை
   கூடி இருந்து உமை நினைத்து
   வாய்விட்டுக்கதறி அழவேனும்
   ஒரு தேசம் வேண்டும்.
   வாரும் ஐயா ! இந்த
   கார்த்திகை நாளில் ஒரு வரம் தாருமையா.

  • மண்ணின் விடுதலைக்காய்
   மரணித்த உறவுகளே
   எண்ணம் முழுதும் - உங்கள்
   விடுதலைத்தீ நிறைந்திருக்கும்
   மாவீரர்களே வணங்குகின்றோம்

  • கல்லறையிலிருந்துஓர் குரல்....
   என் தாய் நிலமே!
   உன்னகத்தே வித்தாகி
   மண்ணுள்ளே புதைந்திருக்கும்
   நாளைய விருட்சத்தின் வீரக் குரலிது..
   நாம் வெட்டப்பட்ட மரங்களல்ல
   முளைத்து மீண்டும் தளிர்ப்பதற்காய்
   விதைக்கப்பட்ட வித்துக்கள்.
   நாளைநாம் துளிர்க்கின்றபோது
   இன்று வளர்ந்துள்ள கோரவிருட்சங்கள்
   தானாக சாய்க்கப்படும்..
   என் தாய் நிலத்தின் மானம்
   நிச்சயம் காக்கப்படும்.

  • மாவீரரே!
   உங்கள் தியாகம் அளவற்றது
   உங்கள் வீரம் பெரு மதிப்பு மிக்கது
   தமிழன் தன்மானத்தோடு வாழ
   கற்று கொடுத்தவர்கள் நீங்கள்!
   பயணிக்கிறோம் எம் இனத்தின் விடியலை எடுத்துரைக்க !
   பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !

  • வரிப்புலியாய் கடல்புலியாய்
   எரிநெருப்பாய் படைதிரட்டாய்
   தடையுடைத்தாய் தமிழ்வீரா
   விரிப்படையும் எம்போராட்டம்
   படைத்துவைக்கும் விடுதலையை
   மாவீரர்களே உமை வணங்குகின்றோம்.

  • எங்கள் மண்ணிலும்
   மக்கள் நெஞ்சிலும்
   நடுகல்லாய் நிற்பவரே..
   உங்கள் உணர்வுகளை
   உயிலெழுதிவிட்டு விழிமூடிவிட்டீர்கள்..
   நடுகல்லில் உளிகொண்டு
   செதுக்கிய வரிகள்
   எங்கள் விழிநிறைந்து நிற்கிறது..
   களிகொண்டு கவி எழுதமுடியாமல்
   நெஞ்சு வலிகொண்டு நிற்கிறது..

  • அழுமூச்சில் கவி பாடும்
   கருவல்ல நீங்கள்- அதனால்
   சருமத்தில் வெடிசுமந்து
   தருணத்தில் பிளம்பாகி
   உருவமாய் நெஞ்சுக்குள்
   குடியிருந்துவிட்டீர்கள்.

  • நெருப்பலைகள் எறிந்து
   எதிரிபடைக் குதங்கள் கருக்கி
   வீரத்தை விதைக்க
   சதைத் துண்டைக் கூட
   தமிழன்னை பாதத்தில்
   காணிக்கை செய்தீர்கள்.
   தமிழர் பேச்சிலும் மூச்சிலும் - உம்
   வீரத்தின் வீச்சைகாணத்துடித்தீர்கள்

  • மண்ணிலும்விண்ணிலும்
   கண்ணிலும் கருத்திலும்
   சொல்லிலும் எழுத்திலும்
   கூற்றாக நிற்கிறீர்.
   எம் மண்
   விடிகின்றபொழுதில்
   தொடுவானில்...எழுமீன்களாய் - நீங்கள்
   ஒளிர்ந்து கொண்டிருப்பீர்கள்.........
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: காந்தள் 2013 கவிதைகள் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top