Breaking News

அடங்கா பெரு நெருப்பு தொடர் 01 -சீமான்

தொடங்குவதற்கு முன் முக்கியமான நிகழ்வு ஒன்று.
தலைவருடன் நான் இருந்த தருணம் அது. இரவு நேரம். காலாற நடந்தபடி தலைவர் பேசுகிறார். சில நிமிடங்களில் தலைவருக்கான எச்சரிக்கை வருகிறது. தளபதிகள் பரபரப்பாகத் தகவல் அனுப்புகிறார்கள். தலைக்கு மேலே விமானச் சத்தம். தலைவரும் நானும் ஒரு பதுங்கு அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறோம். கும்மிருட்டு. வெளிச்சத்துக்காக ஒரு டார்ச் லைட் தரப்படுகிறது. அந்த அறை முழுக்கச் சூழ்ந்திருக்கும் இருட்டை விரட்ட அந்த விளக்கொளி போதாது. தம்பிகள் அதனை எங்கே வைப்பது எனப் புரியாமல், அதைக் கையில் பிடித்தபடி நிற்கிறார்கள். தலைவர் அந்த கைவிளக்கை வாங்கினார்.

விளக்கைத் தரையில் வைத்து வெளிச்சம் மேல் சுவரின் மீது படும்படி வைத்தார். பதுங்கு அறையின் மேற்சுவரில் பட்ட வெளிச்சம் நாலாப்பக்கமும் பரவி, அறை முழுக்க பிரகாசித்தது. உதிரமாகக் கலந்திருக்கும் உறவுகளுக்கு வணக்கம். புதிய இந்திய அரசைக் கட்டமைப்பதற்கான தேர்தல் இப்போது. தமிழீழத்தில் நிகழ்ந்த சொல்லொண்ணாத் துயரங்களுக்கு நியாயம் தேடவும், ஈழ விடிவுக்கு வழி தேடவும் நமக்கு நல்லதொரு அரசு அமைய வேண்டிய அவசியமும் இக்கட்டும் இருக்கிறது. ஆனால், இந்திய அரசைத் தீர்மானிக்கிற சக்தியாக சாதுர்யமும் கொண்ட அரசியல் செல்வாக்கோ, பெரும் பணமோ, விலைக்கு வாங்கும் வல்லமை கொண்ட தொழிலதிபர்களின் தொடர்போ நம்மிடம் இல்லை. ஆனால், பதுங்கு அறையின் இருள் அகற்ற கிடைத்த சிறு விளக்காக நம் கையில் நம்பிக்கை இருக்கிறது. மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் மனம் இருக்கிறது. 

பெருமலை சிதைக்கச் சிறு உளி போதும். ஆளுமை எப்போதுமே ஆயுதத்தில் இல்லை. ரணம் சுமக்கும் மனம் ராணுவத்தையே வீழ்த்தும். இப்போது தொடங்கலாம் தொடரை…! நாளைய தமிழ்ச் சமூகத்தை வலிமையானதாகவும், வளமையானதாகவும் மாற்றத் துடிக்கும் மனம் கொண்டவர்களின் வரிசையில் என்னோடு நீங்களும், உங்களோடு நானும் இருப்பதே இந்தத் தொடருக்கான தொடர்பு. பசித்தவர்களுக்காக அழுதவர்களில் நீங்களும் நானும் ஒருமித்தவர்கள். மிதிபட்ட வலி நம் எல்லோருக்குமானது. லஞ்சம், ஊழல், பசி, பட்டினி, சாதியம், தீண்டாமை என நம்மைச் சதிராடிய விஷச் செடிகள் இன்னமும் வேர் பரப்பியபடி நிற்கின்றன. பண்பாட்டு மீறல், கலாசார மாற்றம், மொழிச் சிதைவு, இனப் படுகொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, வாழ்வாதார அழிமானம், விவசாயத் துயரம் என நம் அடையாளம் அழிக்கும் பேரவலங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 

இனத்தின் துயர் நீக்க சினம் கொண்டலையும் எல்லோரும் ஒரு வரிசைக்கு வர வேண்டிய தருணம் இது. உணர்வு குன்றாத ஒரு வயிற்றுப் பிள்ளைகளாக, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நிற்கும் நாம் நம்மைக் காப்பாற்ற புறப்பட்ட தலையாயத் தலைவர்களைப் பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சந்தி சிரிக்கும் அரசியல் களத்தில் நடக்கிற கூத்துகளைப் பார்த்தீர்களா? வெண்டைக்காயையும், வேப்பங்காயையும் ஒன்றாக்கி கூட்டு வைக்கும் விசித்திர வேடிக்கைகளைப் பார்த்தீர்களா? கொள்கை என்றால் எடை எவ்வளவு எனக் கேட்கிற அளவுக்கு எல்லாவற்றையும் சீட்டுக்காக அடமானம் வைக்கும் அவலங்களைப் பார்த்தீர்களா? தனித்திருந்தவர்கள் கூட்டுக்காக அலைவதும், கூட்டாக இருந்தவர்கள் தனித்து அலைவதும் அரசியல் அரங்கின் பரபரப்புக் காட்சிகளாகக் கண்முன்னே நீளுகின்றன. 

‘தாரம் அமையாதவன் தங்கையை மணந்தானாம்’ எனச் சொலவடை சொல்வார்கள் எங்கள் கிராமத்தில். அதுதானே இன்றைக்கு கண்முன்னே நடக்கிறது இங்கே… மதுவை ஒழிக்க வடக்கும் தெற்குமாக நடந்தவர்கள், மதுவை ஒழிக்கப் பூட்டு போட்டுப் போராடியவர்கள் ‘குடித்தால் என்ன குற்றம்?’ எனக் கேட்டவரோடு கூட்டணி. ‘தேசியக் கட்சிகளோடும், திராவிடக் கட்சிகளோடும் கூட்டே கிடையாது’ என நா சுழற்றிச் சொன்னவர்கள் அந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி. சாதிய அரசியலை எதிர்த்தவர்கள், மதவாதத்துக்கு எதிராக மூர்க்கம் காட்டியவர்கள் மத வெறியையே கட்சி அடையாளமாகச் சுமந்திருப்பவர்களுடன் கூட்டணி. ‘நாங்களே மாற்று’ என்றவர்கள் மடிப்பிச்சைக் கேட்டு ஏமாற்று என்கிற நிலையாகிவிட்ட கூட்டணி. ‘ஈழத்தின் துயரத்துக்கு விடை தேடாமல் விட மாட்டோம்’ எனச் சொடக்குப் போட்டுச் சொன்னவர்கள் ராஜபக்ஷேயைத் தேடிப்போய் நலம் விசாரித்தவர்களுடன் கூட்டணி. 

ரத்தம் துடிக்க, ‘ஏனடா இந்த நிலை’ எனக் கேட்டால், ‘கட்சியைக் காப்பாற்ற வேண்டாமா?’ என்கிற வியாக்கியானம் வேறு. கட்சியைக் காப்பாற்றுவதே இவர்களின் லட்சியமாக இருந்தால், எந்த லட்சியத்தைக் காப்பாற்ற இவர்கள் கட்சி தொடங்கினார்கள்? உறவுகளே…! இந்தத் தலைவர்களை நம்பித்தானா நாம் அவர்கள் பின்னால் நடையாய் நடந்தோம். ஒவ்வொரு மேடைகளை நோக்கியும் ஓடினோம். இவர்களின் பேச்சைத் தானே பெரும்படிப்பாகப் பயின்றோம். இவர்களின் வார்த்தைகளைத் தானே நமக்கான விடிவாக வார்த்துக்கொண்டு வாழ்ந்தோம். ஈழத்தில் ரத்தச் சகதியாக நம் இனம் செத்தழிந்தபோது இந்தத் தலைவர்களை நம்பித்தானே உயிரைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். கொள்கை மறந்து, கோட்பாடு மறந்து எதற்காகக் கட்சி தொடங்கினோம் என்கிற பிறப்புப் பெருமை மறந்து சீட்டுக்காக எவரோடும் கூட்டணி வைக்கிற இந்த அருமை பெருமையாளர்களை வாழ்வியல் வழிகாட்டிகளாக மனதுக்குள் வரித்துக்கொண்டு திரிந்தோமே…! 

அதற்கான அவமான விளைவுகளைத்தான் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். ‘தனி ஒருவன் செய்கிற தவறு சமுதாயத்தில் பிழையாக இருக்கும். தலைவன் ஒருவன் செய்கிற தவறு சமுதாயத்தையே பிழையாக்கி இருக்கும்.’ யாரோ சொன்ன மேலை நாட்டுப் பழமொழி. இந்த ஏழை நாட்டுக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தீர்களா? கண்முன்னே கனவு நாயகர்களாக, விடிவெள்ளிகளாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக, பெருமித அடையாளங்களாக வலம் வந்தவர்கள் ஓடுகிற பேருந்தில் துண்டுபோட்டு இடம் பிடிக்கும் வியாபாரிகளாக மாறி நிற்கும் கோலத்தைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு தலைவர்களின் ஒப்பனை முகங்களும் உரிந்து விழுந்து அவர்களின் உண்மை முகங்களை அடையாளப்படுத்திய வகையில், இந்தத் தேர்தல் நமக்கு ஒரு விதத்தில் உதவத்தான் செய்திருக்கிறது. 

இந்தத் தொடரின் வழியாக உங்களோடு நிறைய பேச இருக்கிறேன் உறவுகளே…! அந்த மாசற்ற தலைவனை சந்தித்த மறக்க முடியா கணங்களையும், அவன் சிந்தையில் கட்டி வைத்திருந்த தனித் தமிழீழ கனவுக் கோட்டையின் பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அரசியலின் அவசியத்தையும் பாழடைந்த சாக்கடையாக அது மாறிக் கிடக்கும் அவலத்தையும் பேசுவோம். மண் தொடங்கி விண் சார்ந்த விசயங்கள் யாவும் பேசுவோம். நம்மை முடக்கும் கரங்களை உடைக்கவும், அடக்கும் கரங்களை நொறுக்கவும் என்ன செய்யலாம் என ஆலோசிப்போம். நமக்கான அவசிய தேவைகளைப் பட்டியலிடுவோம். நமது பெருமைகளை மீட்டெடுப்போம். 

மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான மகத்துவங்களை உருவாக்குவோம். நாம் அடியொற்றி நடக்கும் தலைவர்களின் நடத்தைகளை பேசினோம் அல்லவா? உண்மையில் யார் தலைவன்? சீட்டுகளுக்காகச் சிதைந்தவர்களுக்கு மத்தியில், நோட்டுகளுக்காக நொந்தவர்களுக்கு மத்தியில், ஓட்டுகளுக்காக ஓடியவர்களுக்காக மத்தியில் உயிர் இழக்கும் கணம் எனத் தெரிந்தும் களம் நீங்காமல் நின்றானே…! அவன்தானே தலைவன். கூட்டணிக்காக கொள்கை இழந்து, கூச்சம் இழந்து, வாழும் நெறி யாவும் இழந்து, செயற்கைப் புன்னகையுடன் களம் நோக்கிக் கிளம்பிவிட்ட தலைவர்களே…! சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தைக்கூட எப்படியும் கண்டுபிடித்து விடலாம். ஆனால், மாயமான உங்களின் மானத்தை எதை வைத்துக் கண்டுபிடிப்பது? தொடரும்......