Breaking News

அல்ஜீரிய விமானமும் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி


அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம்
நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகினர். 

ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது.

இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாயமான விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இறந்தனர். இதேபோல் அதே நிறுவனத்தின் மற்றொரு விமானம் கடந்த மார்ச் மாதம் நடுவானில் மாயமானது.

அது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இப்போது அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

விமானம் காணாமல் போன பகுதி புயல் வீசும் சஹாரா பாலைவனப் பகுதி என்பதால் விபத்து நேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாலி நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.