பணம் கேட்ட தனியார் வைத்தியசாலையின் ஊழியருக்கு சரமாரி வாள் வீச்சு.... - THAMILKINGDOM பணம் கேட்ட தனியார் வைத்தியசாலையின் ஊழியருக்கு சரமாரி வாள் வீச்சு.... - THAMILKINGDOM
 • Latest News

  பணம் கேட்ட தனியார் வைத்தியசாலையின் ஊழியருக்கு சரமாரி வாள் வீச்சு....


  ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை சாலையில்
  பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த சசி (வயது 32) என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக சேர்த்து இருந்தார். பிரசவம் முடிந்ததும் அவர் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டவில்லை.

  ஆஸ்பத்திரி நிர்வாகம் அதிக அளவில் பில் போட்டு உள்ளதாகவும், அதை தன்னால் கட்ட இயலாது என்றும் அவர் கூறி ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் சொல்லாமல் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். இதனால் சசியிடம் டாக்டர் போனில் பேசினார்.

  நேரில் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேசினால் பில் தொகையை குறைப்பதாக அவர் கூறினார். ஆனால் அவர் நேரில் வரவில்லை. இன்று அதிகாலை 2 மணிக்கு வீச்சரிவாளுடன் சசி ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

  அவர் டாக்டர் மற்றும் பில்லிங் செக்சன் ஊழியர் பற்றி இதர ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரித்தார். அவர்கள் இரண்டு பேரும் பணியில் இல்லை என்று கூறியவுடன் அவர் நேராக மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு பணியில் இருந்த பாகூரைச் சேர்ந்த ஊழியர் பிரகாஷ் (35) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


  பின்னர் அவரை அரிவாளால் வெட்டினார். அவர் கையெடுத்து கும்பிட்டும் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் சசி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கை, கால் மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. பின்னர் சசி அரிவாளுடன் ஹாயாக நடந்து சென்று ஆஸ்பத்திரியை விட்டு தப்பினார்.

  ஆஸ்பத்திரி ஊழியர் வெட்டப்பட்ட தகவல் கிடைத்ததும் மற்ற ஊழியர்களும், நோயாளிகளும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் வெட்டுப்பட்ட பிரகாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  சசி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஊழியரை வெட்டும் காட்சி மற்றம் அவர் அரிவாளுடன் செல்லும் காட்சி உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

  இதை ஆதாரமாக கொடுத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சசி மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டு உள்ளது. ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை வெட்டி விட்டு தப்பி ஓடிய சசியை தேடி வருகிறார்கள்.

  தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஊழியரை வெட்டிய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகி இருப்பதாகவும், போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  ஊழியரை வெட்டிய சசி மீது ஓசூர் போலீஸ் நிலையங்களில் அடி தடி உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு வழக்குகள் உள்ளன. அவர் ரவுடியாக அந்தப் பகுதியில் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பணம் கேட்ட தனியார் வைத்தியசாலையின் ஊழியருக்கு சரமாரி வாள் வீச்சு.... Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top