Breaking News

எங்கள் அரசியல் தலைமையை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்


யானையைப் பார்த்த குருடரைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? என்றார் ஒரு யோகி. அந்த யோகியின் கருத்துக்குள் இனம் புரியாத கவலை அவரிடம் இருந்திருப்பதை உணர முடியும்.

இன்றைய நமது தமிழ்ச் சமூகத்தின் நிலைமைப்பாடும் இதுதான். எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்பதற்கு அப்பால் துரோகம், பக்கச்சார்பு, விலைபோய் விட்டார், தேசியத்தை விற்றுவிட்டார், பிரதேசவாதம் என்ற குற்றச் சாட்டுக்கள் மிகவும் மலிந்து விட்டன.

இதன் காரணமாக நல்ல கருத்துக்களை முன்வைக்கக் கூடிய அறிஞர் பெருமக்கள் அமைதியாக இருந்து தமது பெயருக்குக் களங்கம் ஏற்படாதவாறு தம்மைப் பாதுகாத்துக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

ஒருவர் கூறுகின்ற கருத்து நிலை என்ன என்று ஆராயாமல் எழுந்தமானமாக அவச்சொற்களை அள்ளி வீசுபவர்களை ஒருகணம் ஆராய்ந்தால், அவர்களே விலை போனவர்கள் என்ற உண்மையை அறிய முடியும். 

கற்புடையவள், ஒழுக்க நெறியில் பிறழ்வு அடைந்த பெண்ணைக்கூட குறைச் சொல் கூற மாட்டாள். இதுவே கற்பொழுக்கத்தின் காத்திரமும் பண்பும் ஆகும். ஆனால் ஒழுக்கத்தில் மிகவும் பழுதான ஒரு பெண் கற்புடையவளுக்கும் அவச்சொல் கூறத்தயங்காள்.

எனவே எவரொருவர் மற்றொருவர் குறித்து கடும் சொற்களைப் பிரயோகிக்கிறாரோ அவர் தொடர்பில் இந்தச் சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து.

எதிரிகளை விமர்சிப்பதிலும் நாகரிகம் பண்பாடு வேண்டும். ஒரு காலத்தில் பலருக்கு துரோகிப்பட்டம் சூட்டப்பட்டது. ஆனால் அந்தப் பட்டத்தை சூட்டியவர்கள் பலர் பச்சைத் துரோகிகளாக மாறினர் என்ற செய்தியை மறந்துவிட முடியாது.

இன்னும் சிலர் தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பது போலப் பாசாங்கு செய்துகொண்டு எல்லா மட்டங்களிலும் எல்லாத் தரப்புகளுடனும் நல்லுறவைப் பேணுகின்றனர்.

ஆக, இத்தகையவர்கள் எந்தளவு தூரம் நடிக்க முடியுமோ அந்தளவிற்கு தங்கள் நடிப்பை உச்சமாக்கிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற உண்மை, எம்மில் பலரால் உணரப்படாமல் இருப்பதுதான் எங்களின் வாழ்மானத்துக்கு மூல காரணம் எனலாம்.

என்றைக்குத் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை தாங்களே பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ! எங்கள் உரிமையை தமிழ் அரசியல்வாதிகள் மீட்டுத்தரமாட்டார்கள் என்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் எப்போது பட்டவர்த்தனமாகப் புரிந்து கொள் கிறார்களோ!

அன்றுதான் எங்கள் இனத்திற்கு விமோசனம் கிடைக்கும். எங்களின் உரிமைகளை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துவிட்டு, ஐந்து ஆண்டுக்கு ஒரு தடவை இடதுகை கிண்ணி விரலில் மை பூசினால் அது போதுமென்று நினைத்தால் எங்களின் எதிர்காலம் சூனியமாகவே இருக்கும்.

ஆக அன்பார்ந்த தமிழ் மக்களே! எங்கள் அரசியல் வாதிகள் என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ன செய்வார்கள்? என்று கடுமையாக ஆராயுங்கள்; உங்கள் ஊரில் கூடி அதனை மதிப்பீடு செய்யுங்கள்;

அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்; பொருத்த மற்றவர்களை வெளியேற்றுங்கள்; பொருத்தமானவர்களை - புதியவர்களை - தமிழினத்திற்குச் சேவையாற்றக் கூடிய நேர்மையாளர்களை முன்கொண்டு வாருங்கள்; அவர்களை ஆதரியுங்கள்.

அதுவே ஒரு பலமான அரசியல் தலைமையை எமக்குத் தரும்.நாம் விழிப்படை யாதவரை, நாம் கேள்வி எழுப்பாத வரை எங்களை ஏமாற்றி எங்களைக் கந்தறுத்து அவர்கள் பதவிக் கதிரைகளைப் பற்றிப்பிடிப்பார்கள். 

எங்களுக்குத் தேவை எங்களின் உரிமை, எங்களின் வாழ்வு அதற்காக நாம் சிந்திப்பதும் செயற்படுவதும் எங்கள் உரிமை.