புலிகளின் பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம். - THAMILKINGDOM புலிகளின் பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம். - THAMILKINGDOM
 • Latest News

  புலிகளின் பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம்.

  விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகை

  பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் மட்டுமே ஆயிரக்கணக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியைக் கொண்டிருந்தன. இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யின் கைது மூலம் சர்வதேச ரீதியாகவும் பெருந்தொகைப் பணம் கைப்பற்றப்பட்டது. 

   இவை யாவும் அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட சொத்து மதிப்பை அதிகரிக்கவே உதவின. இவற்றின் மதிப்பு ஐம்பதினாயிரம் கோடிகளையும் தாண்டும் என்பதாக கூறப்பட்டது. இவ்வாறாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஆரம்பத்தில் இலங்கையில் செயற்பட்ட அப்பலோ ஹொஸ்பிட்டல் நிறுவனத்தை கோத்தபாய விலைக்கு வாங்கினார். அதனை லங்கா ஹொஸ்பிட்டல் என்று பெயர் மாற்றி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அது தனது சொந்த நிறுவனம் இல்லை என்று மறுத்த அவர், தற்போது மறைமுகமான வார்த்தைகளில் ஒத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே தனியார் மயப்படுத்தப்பட்ட இலங்கையின் பாரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனமும் தற்போது கோத்தாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அவரது நெருங்கிய நண்பரான டுபாயில் வசிக்கும் நந்தன லொகுவித்தானவின் பெயரில் இந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அலுவல்கள், நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகள் மூலமான அதிக வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கோத்தபாய வாரம் இருதடவை உருக்குக் கூட்டுத்தாபன வளாகத்துக்குச் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

   இதற்கிடையே உலகப் புகழ்பெற்ற டுபாயின் மெரியட் ஹோட்டல் நிறுவனமும் தற்போது புலிகளின் பணத்தைக் கொண்டு கோத்தபாயவின் கைகளுக்கு வந்துவிட்டது. முன்னூறு மில்லியன் டொலர்கள் செலவில் இந்த நிறுவனம் அண்மையில் வாங்கப்பட்டுள்ளது. இதுவும் டுபாயில் இருக்கும் நந்தன லொகுவித்தானவின் பெயரில் வாங்கப்பட்டாலும், கோத்தபாயவின் சொத்து என்பது பகிரங்க இரகசியமாக உள்ளது. அண்மையில் இந்த ஹோட்டலை பார்வையிட இலங்கையிலிருந்து சுமார் 30 ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹோட்டல் தொடர்பான பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பன தொடர்பிலான ஆலோசனைகளை கோத்தபாயவே நேரடியாக வழங்கியிருந்தார்.

   சுமார் பத்து வருடங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் சட்ட நிறுவனமொன்றில் கம்பியூட்டர் இயக்குனராக தொழில் செய்தவர். சாதாரண தர வீடொன்றில் வசித்தவர். இன்றைக்கு சர்வதேச ரீதியாக அவர் பெரும் வர்த்தக நிறுவனங்களை வளைத்துப் போடுவதற்கு தமிழ் மக்களின் வியர்வை சிந்தி உழைக்கப்பட்ட பணமே பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தளவு பெருந்தொகைப் பணத்தை இலகுவாக அவர் உழைத்துக் கொள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கே.பி. ஒத்தாசையாக இருந்துள்ளார். அதற்கு நன்றிக் கடனாக டுபாயின் மெரியட் ஹோட்டலின் மறைவான பகுதியில் கே.பி.க்கு விருப்பமான முறையில் சிலையொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல்களை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புலிகளின் பணத்தில் சர்வதேசமெங்கும் பரவும் கோத்தாவின் வர்த்தகம். Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top