ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் நிர்மலராஜன் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களினதும் படுகொலைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீளஆரம்பிக்க கோரியும், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் ஊடகச் சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தவேளை மட்டக்களப்பு எல்லைவீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறிசென்றபோது, நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார்.
அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட நடேசன் 2004ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், அவரது கொலை தொடர்பான விசாரணைகள் இன்று வரையில் நிறைவுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.











