Breaking News

மகிந்தவின் பேட்டியை ஒளிபரப்ப கூடாது -வைகோ

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பேட்டியை இந்திய தனியார் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதே வேளை தினத்தந்தி பத்திரிகையும்தீயிட்டு எரிக்கப்பட்டது.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை, 

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த மாபாவி ராஜபக்ச இந்திய நாட்டுக்குள் எங்கு வந்தாலும், அவன் வருகையை எதிர்த்துப் போராடி வருகிறோம். 

ஈழத்தமிழரைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் நெருப்பில் குளித்து உயிரைக் கருக்கி மடிந்தனர். ராஜபக்ச வருகையை எதிர்த்து சாஞ்சிக்கே சென்று போராடினோம். ஏன், நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளிலேயே டெல்லியில் கருப்புக்கொடி அறப்போர் நடத்தினோம். 

எண்ணற்ற இடிகள் தமிழர் தலை மீது விழுந்தன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலையை ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கின்றது. 

கடந்த ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை அறிய, சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக்குழுவை இலங்கை மண்ணில் நுழைய விட மாட்டேன் என்று ராஜபக்ச திமிரோடு சொன்னான். 

ஆனால், இன்று (29.) ஒரு ஏட்டில் இன்று முதல் பக்கத்தில், தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க முனைந்து விட்ட கொடியவன் ராஜபக்ச அட்டகாசப் புன்னகையோடு, தமிழர்களுக்கு எதிரி அல்ல நான்; தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை; இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது; எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதிவாரித் தூற்றுகின்றன என்று அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்து இருப்பதாகவும், முழுமையான பேட்டி இன்று இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற செய்தியைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது.

இலங்கையில் தமிழ் இனம் என்று ஒரு இனமே கிடையாது; அவர்களின் பூர்வீகத் தாயகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கொக்கரித்த கயவனின் பேட்டியை, தமிழ்நாட்டில் இயங்கும் இந்தத் தொலைக்காட்சி வெளியிடுமாம்; தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா இதைச் சகிப்பதற்கு? 

ராஜபக்ச பேட்டி வெளியானால், பிரதமர் நரேந்திர மோடி மட்டும் என்ன, தமிழகமே ராஜபக்சவை வரவேற்கிறது என்று, சிங்களக் கொலைகாரக் கூட்டம் கொட்டமடிக்கும். தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்ச பேட்டியைத் தொலைக்காட்சி ஒளிபரப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி, இன்று (29.12.2014) மாலை மூன்று மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தலைமையில், பெரியார் திடல் அருகே உள்ள அந்த நாளிதழின் அலுவலகத்தை முற்றுகை இடும் கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும். கழகக் கண்மணிகளும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.