Breaking News

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம், என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லூரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வடக்கு முதல்வர் மேலும் கூறியதாவது, 

எமது இளைஞர், யுவதிகள் ஒன்றை மட்டும் மிக முக்கியமாக மனதில் வைத்திருக்க வேண்டும். அதாவது இந்த சுற்றாடல் மாசடைதலானது உலக ரீதியில் தற்பொழுது பெரும் பிரச்சினையாக மாறிக் கொண்டிருகின்றது என்பதே அது. 

பூகோள வெப்பநிலை, ஓசோன் படலம் சிதைவடைதல், மண் அரிப்படைதல், பனிமலை உருகுதல், கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பல பிரச்சினைகளை சர்வதேச சமூகம் அலசி ஆராய்ந்து வருகிறது. 

சுற்றுச் சூழலை மதிப்பது என்பது எமது சுயநலத்தில் இருந்து விடுபட்டு எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் உள்ளவற்றையும் நாம் மதிக்கும் ஒரு மனோநிலையாகும். சூழல் மாசடைவு நின்று கொல்லும் தன்மையது. “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பது பழமொழி. சூழல் மாசடைவும் நின்று கொல்லுந் தன்மையது. 

யாழ்ப்பாணத்தில் பெருகிக் கிடந்த குப்பை கூளங்களைத் திண்மக் கழிவுகளைப் போதியவாறு நாங்கள் அப்புறப்படுத்தாததால்தான் இருவரின் உயிர்கள் அண்மையில் டெங்குக் காய்ச்சலால் பறிக்கப்பட்டன. அந்த இருவரின் இறப்புத்தான் எங்களை மும்முரமாகத் திண்மக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் கவனம் செய்ய வைத்தது. 

சுயநலக் காரணங்களினால் எமது கடமைகளை நாம் செய்யாது விடுவது நாளடைவில் எம்மையே பாதிக்கும். இதை மனதில் வைத்து சுற்றாடல் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுங்கள். சூழல் மாசடைவதைத் தடுக்க முன்வாருங்கள், என தெரிவித்தார்.