Breaking News

‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்த போது, அவருடன் இணைந்து கொண்டவர்களும், வெற்றி பெற்ற பின்னர், அவருடன் இணைந்து கொண்டவர்களுமான, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே மகிந்த ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை போட்டியிட வாய்ப்பளித்தாலோ அல்லது குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால், சுத்தமான தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மகிந்த ராஜபக்சவை போட்டியிட வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல் என்றும் அவர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு இன்று கூடி, நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கவுள்ளது.

இன்று கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்யப்படவுள்ளன.

இந்த வேட்பாளர் தெரிவுக் குழுவில் அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த, நிமால் சிறிபால டி சில்வா, எஸ்.பி.திசநாயக்க, விஜத் விஜயமுனி சொய்சா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.