Breaking News

யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பில், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அங்குள்ள மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பொதுவான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க கூடாது என்ற திட்டம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்” என்றும் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.