Breaking News

திருடர்களுடன் இணைய முடியுமா? மைத்திரியின் வெட்க நரம்பு உடைந்து விட்டதா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெட்க நரம்பு எங்கேனும் உடைந்துவிட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். 

சிறிகொத்தவில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவின் தவறான செயற்பாடுகள், தீர்மானங்கள் குறித்து மேடைகளில் பேசியதாக ஹரேன் சுட்டிக்காட்டினார்.  ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் தான் உள்ளிட்ட குடும்பத்தினர் 6 அடி மண்ணுக்குள் இருந்திருப்போம் என்று மைத்திரிபால சிறிசேன கூறியதை ஹரேன் நினைவுபடுத்தினார். 

எனினும் ஜனாதிபதி தனது வாயால் திருடர்கள் என்று கூறியவர்களை இன்று பாதுகாப்பதாக ஹரேன் குற்றம் சுமத்தினார்.  கட்சி, சிவில் அமைப்புக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தது, முன்னாள் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அழிந்து போன ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்தை மீண்டும் கட்டிக் காப்பது உள்ளிட்ட பல காரணங்கள் நிமித்தமே என அவர் குறிப்பிட்டார். 

ஆனால் இவற்றை மறந்து முன்னாள் ஜனாதிபதியுடன் தற்போதைய ஜனாதிபதி இணைவதால் சர்வதேச அளவில் மைத்திரிபால சிறிசேனவிற்கும் கேவலமான நிலை ஏற்படும் என ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.  மைத்திரி - மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை என ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதும் சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்றதாக அநுரகுமார திஸாநாயக்க கடுவல கூட்டத்தில் கூறியுள்ளதாக ஹரேன் குறிப்பிட்டார். 

நாங்கள் இருவரும் சந்திக்கவில்லை என்று கூறி யாரை ஏமாற்ற நினைக்கிறீர்கள் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரேன் பெனாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.