Breaking News

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல்4 கேள்வி (காணொளி)

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.

நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 இற்கு கிடைத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூறுகிறது. சுருங்கி வந்த நெரிசல் மிக்க பாதுகாப்பு வலயத்துக்குள். இலங்கை அரச படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலிலேயே, இவர்களில் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகளும் கூட, தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மனித கேடயங்கள் போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நாவுடன் இணைந்து- ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் முழுமையான உள்நாட்டு விசாரணை ஒன்றை உருவாக்குவதற்கான, திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது.

பெரும்பாலான மனித உரிமை அமைப்புகள், உள்நாட்டு நீதிப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்துள்ளன. அது, வெற்றியாளரின் நீதிமன்றமாகவே இருக்கும் என்றும் பலர் எச்சரித்துள்ளனர். கசிந்துள்ள ஐ.நாவின் திட்டங்களின்படி, இந்த திட்டத்தை் நடைமுறைப்படுத்தும் பங்காளர்களாக, இலங்கை அரசாங்கமும், வடக்கு மாகாணசபையும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், இதுபற்றி தம்முடன் ஐ.நா எந்தக் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை என்று சனல்4 ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ஆவணம் கசிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக கூறினாலும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அனைத்துலக விசாரணையையே கோருகின்றனர் என்றும் சனல் 4 தெரிவித்துள்ளது.