Breaking News

இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – இந்தியத் தூதுரகம் தகவல்

சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 39 வயதான, கிருஸ்ணகுமார் என்ற, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், உச்சிப்புளியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் இருந்து 75 வெற்று சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட், நான்கு ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் இந்திய, இலங்கை நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

இவர் யாழ்ப்பாணம் திரும்ப முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் பற்றிய தகவல்களை சிறிலங்காவுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளதா என்று, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வினவியிருந்தது.

ஆனால் அதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்த, இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் ஈஷா சிறிவாத்சவா மறுப்புத் தெரிவித்துள்ளார். “குறிப்பிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியத் தூதரகம் கருத்து வெளியிடாது. எனினும், இலங்கையுடன் நாம் மிக நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை கொண்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.